வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 99
(03-09-2019)
காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள் உலகை வெறுத்த சித்தர்கள். ஆனால் சித்தர்கள் பலர் நல்லபடியா வாழும் முறையும் சொல்லி இருக்காகளாம். நம்ம ரேஞ்சுக்கு, குழந்தை ஆணா பெண்ணா எது வேணும்? என்பதற்கும் பதில் தந்துள்ளது சித்தர்கள் பாட்டு என்பது நிரூபிக்கப்படாத உண்மை என்பது மட்டும் படித்திருக்கிறேன். காற்றடைத்த காயம், அதாங்க ஒடம்பு எப்படி இருக்கும்? விவேக் ஒரு படத்தில் நடிச்சே காட்டி இருப்பார் பாத்தீயளா?
ஒண்ணுமே இல்லாததை ஊதி ஊதிப் பெருசாக்குறான் பேர்வழி என சிலர், பலரைத் திட்டுவதைப் பாத்திருப்பீங்க. ஆனா சிலரின் உடல்வாகு எல்லாம் பாத்தாக்கா (ஏன் பாக்குறே? என்ற வீண் கேள்வி எல்லாம் எதுக்குங்க ப்ளீஸ்), ஒண்ணுமில்லாததை பெருசாக்கும் வித்தை தெரிஞ்சி வச்சிருப்பாகளோ (விவேக் ஸ்டைலில்) என எண்ணத் தோன்றும். மலைச்சி நிக்கையில் மனதை தேற்றும் விதமா COOL என டீ சர்ட் வாசகம் வேறு. எனக்குப் புரியலைங்க… என்ன சொல்ல வாராக அந்த மகளிர் என்று…
ஒரு நவீன கருத்த(ம்மா புகழ்) கவிஞனுக்கு, இடையைப் பார்த்த போது பிரம்மன் கஞ்சனாய் தெரிந்தாராம். (இத்தனைக்கும் கடவுள் மறுப்பாளர் அவர்). ஆனா, சற்றே நிமிர்ந்து பார்த்த போது வள்ளல் எனப் பட்டதாம் நம் பட்டை தீட்டிய வைர முத்துவுக்கு. அந்த வள்ளல் சமாச்சாரம் அதாங்க அந்த நாயுடு ஹால் மேட்டர் ரொம்பவே கிலுகிலுப்பு தான் போங்க.
நாமளும் வாழ்க்கையில் பிரச்சினைகளை இப்படித்தான் பார்க்கிறோம். என்னமோ ஏதோ பெரிச்சா இருக்கேன்னு பாத்தாக்கா, அது ஒண்ணுமே இல்லாத காற்றடைத்த பை மாதிரி இருக்கும். காத்து போனதும் புஸ்ஸுன்னு ஆகுற மாதிரி பிரச்சினையும் பறந்து போயிருக்கும். ஆனா இடைப்பட்ட காலத்தில் தான் நமக்கு பிரஷ்ஷர் எல்லாம் ஒரு எட்டு ஏறி அப்புறம் இறங்கி வந்திருக்கும். தேவையா இதெல்லாம்?. இப்படி பிரஷ்ஷர் பில்டப் செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
ஒரு வடநாட்டவர் கேட்டார்: ’உங்க ஊர்லெ இராவணனுக்கு கோவில் எல்லாம் இருக்காம்லெ…’ (குஷ்புக்கே கோவில் இருக்கும் போது) இருக்கலாம் என்றேன். (பரமக்குடியில் இருக்கிறமாதிரி தெரியல்லை); சமீபத்திய என் பதிவில் சூர்ப்பனகை பற்றி எழுதப் போக, சகோதரியைப் பற்றி எப்படி இழிவாப் பேசப் போச்சி? என கண்டனம் வந்தது. நட்பு வட்டத்தில் பிரச்சினைகள் கிளம்புவதும் தெரியாது. முடிவதும் தெரியாது. அதனாலெ, உலக மக்கள் அனைவரையும் நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொண்டால், அப்புறம் ஏது சிக்கல்? ஏன் பிரச்சினை எல்லாம் வருது?
சில எதிர்பார்ப்புகள் ஜம்முன்னு முடிவைத் தரும். பல பல்ப் காட்டும். இதுவும் கடந்து கோகும்ணு போக வேண்டியது தான். தில்லி விமானநிலையத்தில் இறங்கி லக்கேஜ் வருமெனக் காத்திருந்தால், ஒரு துண்டு சீட்டு குடுத்து, போங்க பெட்டி படுக்கை வந்து சேரும் என்றார் ஒரு ஒத்தைக்கல் மூக்குத்திக்காரி (அழகான குமரி என்பதை சொல்லவும் வேண்டுமோ) அதே போல் ஒரு தபா ஐபேடை மறந்து வ்ச்சிட்டு வந்து, வக்கணையா ஒரு மெயில் கொடுத்தேன். அடெ… ஜம்முன்னு மெயில் வந்தது ’வந்து வாங்கிக்கோ சார்’ என்று. அம்பேல் தான் என்று நினைத்த ஐபேட் கிடைக்குது. லக்கேஜ் வராமல் ஜட்டி பனியனுக்கும் சிரமப்பட வைக்குது. எல்லாம் இந்த ஏர் இண்டியாவின் செயல்.
அந்தர்பல்டி என்று கேள்விப்பட்டிருப்பீங்க தானே! இல்லையா? அப்பொ இந்தியன் பட டயலாக் சொல்றேன். இப்பொ ஞாபகம் வருதா பாருங்க. “சந்துரு என்ற ஒரு மானஸ்தன் இங்கே இருந்தானே? அதான் தேடுறேன்” என கமலைக் கலாய்க்கும் காட்சி. இப்பொ ஞாபகம் வந்திருக்குமே! (சந்துரு பெயர் ஏன்? பிரமாதம் எனக் கலக்கிய விளம்பரத்திலும் சந்துரு. ஏன், கிருஷ்ணமூரத்தி என்ற பெயரெல்லாம் அதிலெ இல்லை? சந்துருக்கள் யோசிக்கவும்) அது தவறா? சரியா? எனற விவாதம் வேண்டாம். எந்த ஒரு பெரும் பிரச்சனை, மிகப் பெரும் கவலை இவைகளைத் தொடர்ந்து ஒரு பெரீய்ய அந்தர்பல்டி பின்னாடியே வரும்ம்ம். அந்த நம்பிக்கையோடு இருந்தால் நாம் கலவரமாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.
”என்ன கிட்டப்பனே! ஒரே தத்துவ மழை பொழியுது?” லேசாக நனைந்தபடி கம்பர் தோன்றினார். ”அதே சந்துரு, உடனே இன்னொரு மான்ஸ்தனை, அதான் கவுண்டமணியைத் தேடுவாரே! மறந்துட்டியா? இதே ஸ்டைல்லெ, அந்தர் பல்டி, சின்னதை பெருசாக் காட்டும் வித்தை, நம்ம பாட்டுலெயும் இருக்கே… குகனோட ஏரியாவில் வலை வீசு. பாடல் கிடைக்கும்.” சொல்லி மறைந்தார் கவிச்சக்கரவர்த்தி.
நானும் நாயுடு ஹால் ரேஞ்சில் பாட்டு கிடைக்குமா எனத் தேடினேன். கிடைத்தது என்னமோ நார்மலான பாட்டு தான். இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா என்ன? கம்பன்கிட்டே இருந்து கிடைப்பதெல்லாம் அமுதம் தானே! ”உங்களை எல்லாம் 200 என்ன?, 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்று கருத்து சொல்வார் விவேக். ஆனா இங்கே ஆயிரம் இராமர் போல, என்று அந்தர்பல்டி அடித்தவர் திரு குகன் அவர்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தமான் ஆதிவாசி மாதிரி வில்லு அம்பு எடுத்து பரதன் மேல் பாயப் போனவர்..சரீ சரீ… பாட்டெக் காட்டுப்பா.. அதெல்லாம் இலக்கியத்திலெ சகஜமப்பா…
இதோ பாடல்…
’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியிலம்மா!”
[அயோத்தியா காண்டம் – குகப் படலம்]
[ ‘புகழ் உடையவனே! (உன்)
தாயாகிய கைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு, (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த
(கோசல நாட்டு) அரசாட்சியை தீயவினை வந்துசேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு முகத்தில்
கவலை தேங்கியவனாய் (வனத்துக்கு) வந்தாய் என்ற காலத்தில் (உனது) நல்லியல்புகளை ஆராய்ந்தால் ஆயிரம் இராமர்கள்
உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ!]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
Really nice! சுவையாக தொகுத்து அளிக்கிறீர்கள்! தொடர்ந்து வருகிறேன்!
நன்றி