வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 98
(29-08-2019)
இப்பொல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாரம் திருவாசகம் பாடும் சிவலோக அமைப்பிற்குப் போய் விடுகிறேன். மகனும் மகளும் ஒன்றாய் கோரஸாக, ’அப்பா உங்களுக்கு வய்சாயிடுச்சி’ என்பதை உறுதிப் படுத்தினர். அங்கே போனால், ஒரு சிறுமி, ’தாத்தா’ என்று யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருக்க, நான் சிவ சிந்தனையில் இருந்தேன். ’உங்களைத்தான் தாத்தா’ என்ற போது தான், என்னையே நான் உணர்ந்தேன். அடப் பாவிகளா… உண்மையிலேயே…. நான் தாத்தா ஆயிட்டேனா?; திரும்பிப் பாத்தா வெளக்கம் வேறெ வருது. ‘எங்கம்மா உங்களை அப்பா என்கிறார்கள்; அப்பொ நீங்க தாத்தா தானே? லாஜிக் சரியாத்தானே இருக்கு!
திரைப்படங்களில், ’நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்…’ என்ற வாழ்த்துப்பா வருது. ’அண்ணே…!!, நூறு வருசம் வாழ ஒரு வழி சொல்லுங்கண்ணே…’ என்று கவுண்டமனியிடம் கேட்டால், அவரு திரும்பக் கேள்வி கேக்கிறார். ’சிகரெட் பீடி? தண்ணி கிண்ணி? பொம்பளை கிம்பளை? அப்படி இப்படி?’ – இப்படி எதுவும் இல்லை என, நல்ல புள்ளையா தலை ஆட்டினா, ’அப்புறம் என்ன ம….க்குடா 100 வயது வாழணும்?’ என்கிறார். அப்பொ வயோதிகம் வரை வாழ்வதே இதுக்காகத்தானா?
ஒரு காலத்தில் வாலிப வயோதிகர்களே என் அழைத்து ரோட்டோரத்தில் டெண்ட் கொட்டகை போட்டு பணம் பறித்து ஏதோ மூலிகை தந்து கொண்டிருந்தனர். ஆனா இப்பொ அதே டெண்ட் எல்லாம் உல்லாச உறைவிடமா Luxury Tent ஆ மாறி, வாடகை கொடுத்து தங்க வேண்டி வந்திருக்கு. ஆனால் அந்த வாலிப வயோதிக விளம்பரங்கள் மட்டும் வீட்டுக்குள் வந்திடுச்சி தொலைக்காட்சி வழியா… உங்களை வாழ்நாள் முழுதும், குறிப்பா வயோதிக வாழ்விலும் வாலிப இன்பம் தந்து மகிழ்விக்க எவ்வளவு ஈடுபாடோடு இருக்காக பாத்தீயளா?
வாழ்க்கை சந்தோசமாய் இருந்தால் வயது தெரியாது. எல்லா வயதிலும் மகிழ்வாய் இருக்கும் உத்தி தெரிந்தால் வயோதிகம் தெரியாது. ’உங்கள் பதிவுகள் படிச்சா மகிழ்வா இருக்கு. ஆனா எப்படி இம்புட்டு எழுத நேரம் கிடைக்கிறது?’ இந்தக் கேள்வி பலரால் கேட்கப்படுது. ’டைம் மேனேஜ்மெண்ட் பத்தி ஒரு வகுப்பு எடுக்கணும்’ என சக அதிகாரி அப்துல் ரஹ்மான் வேண்டுகோள் வைத்தார். ஆனா அதுக்குத் தான் நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது. சீக்ரெட் தெரிந்துவிடும் என்ற பயமா இருக்குமோ?
டைம் கிடைக்கதவர்களுக்கு, டைம் எப்படி உருவாக்குறது என்ற இரகசியத்தெச் சொல்றேன் சந்தோசமா கேட்டுக்கிடுங்க.
ஜாலியா ஆஃபீஸ் வேலை முடிச்சி ( ’பேய் மாதிரி’ என மற்றவர்கள் சொல்லக் கூடும்) வீட்டுக்கு வந்தா, இனியபாதி (மனைவிக்கு எத்தனை பெயர் என்று ஒரு பதிவு ஓடிகிட்டு இருக்கு; அதில் இல்லாத பெயர் இது… நோட் செய்ங்கப்பா..நோட் செய்ங்கப்பா) சீரியஸாக சீரியலில் இருந்தார். (மகிழ்வின் காரணம் “ர்” – புரியுதுங்களா?) நாமிருவர் நமக்கிருவர், ரோஜா எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆகும். அவர் கூடவே நீங்களும் சீரியலில் மூழ்கினால், உங்கள் நேரமும் வீண். தனியா… நைஸா.. விலகிட்டா அது உங்கள் டைம். அப்பப்பொ விளம்பர இடைவேளையில் கவனமாப் போய் சிரிச்சிப் பேசினால் இன்னும் அதிக ஆண்டுகள் நீங்க உயிர் வாழலாம். அதெ விட்டுப்போட்டு, சீரியல் பத்தி கிண்டல் அடிச்சீங்க… கதை கந்தல் தான்..
ஒரு விஷயம் தான் செமெ உறுத்தலா இருக்குதுங்க. பரமக்குடியில் பசுஞ்சாண சாம்பலில் தான் பல் விளக்கினோம். பல்லில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை அப்பொ; வயித்துப் பிரச்சினை வந்தால், வெத்திலை, நாலு மிளகு, கல் உப்பு சேத்து குடுப்பாங்க; போயே போகும்; சின்னக் காய்ச்சல் வந்து படுத்து, முழிச்சிப் பாத்தா சொத்தக்காரங்க வீடு முழுக்க இருப்பாய்ங்க. ம்.. இப்பொ… பசு என ஆரம்பித்தாலே திட்ட ஆரம்பிச்சிட்றாய்ங்க.
அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழும் திடீர் மரணங்கள், பல கேள்விகளை எழுப்புகின்றன. 100 வருடம் வாழ ஆசைப்படும் நம் முன், 40 முதல் 50 வயதுக்குள் வரும் திடீர் மரணங்கள் யோசிக்க வைக்குது. வாழ்க்கை முறை மாறிப் போச்சி என்கிறார்கள் பொத்தாம் பொதுவா. நம்மைப் படைத்த ஆண்டவன் மேல் எனக்கு ஒரு கோபம் வருது. தாகம் எடுத்தால் குடித்தே ஆக வேண்டும்; பசி எடுத்தால் சாப்பிட்டாக வேண்டும்; மல ஜலம் இதெல்லாம் தடுக்க இயலாது; இப்படி வைத்த இறைவன், உடல்பயிற்சி செய்யாமல் இருக்க முடியாத மாதிரியோ, Stress at Work / Occupational Hazards ஐத் தடுக்கும் விதமாகவோ, உடலை ஏன் மாற்றி அமைக்கவில்லை?
மனதில் இதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்த மாத்திரத்தில் ’விதுர நீதி’ இது குறித்து சொல்லும் வீடியோ பதிவு கிடைத்தது. சரியான நேரத்தில் கேட்காமலேயே அனுப்பிய முன்னாள் அதிகாரி பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி ( நாங்க மட்டும், கேட்ட ஆளுக்கா அனுப்புறோம்?) நம் ஆயுளை அறுக்கும் வாள் ஆறு என்கிறார் நம் விதுரர். 1. கர்வம் (Ego/Arrogance) (சிலது தமிழில் சொல்லா விளங்காது எம்பதால் எளிதாய் புரிய ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்) 2. அதிகம் பேசுவது 3. தியாக உணர்வு இன்மை 4. கோபம் 5. சுயநலம் & 6. துரோகம் (நன்றி: ஆலயம் செல்வீர் புலனக் குழு); இந்த ஆறிலிருந்து விலகி வாழ்ந்தால் நாம் நூற்றாண்டுக்கு மேல் வாழலாமாம். இதெத்தான் இங்கிலீஷில் சொன்னா கேப்பீக… தமிழ்லெ சொன்னா கேக்க மாட்டீயளே…
வயோதிகர்கள் கழங்களிலும், வாலிபர்கள் கண்ணோடு கண் நோக்குவதையும் இரசிப்பதால் எல்லாரையும் கவர்ந்தவன் கம்பன். வயோதிகம் பற்றிய கம்பர் பார்வை என்ன? என்று பார்க்கலாமே.. கிழவன் என்றால் அமைச்சராம்… எப்பேற்பட்ட அமைச்சன்? கல்வியில் சிறந்தவன்; எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் சொல்வதில் எக்ஸ்பெர்ட்; நல்லது எனப் பட்டால் அதைத் துணிந்து சொல்பவன். இனிமே தாத்தா என்றாலும் சரி.. கிழம் என்றாலும் சரி.. காலரைத் தூக்கிட்டு நடப்போம்லெ!
அதே நடையில் ஒரு எட்டு கம்பப் பாடலையும் பார்க்கலாம் வாங்களேன்….
’மாட்சியின் அமைந்தது வேறு மற்று இல்லை;
தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்’ என்று, கல்வி சால்
சூட்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார்.
[யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம்]
[தாழ்ச்சி இல்லாத மேலான ஞானத்தைத் தருமறமே வடிவமான இராமபிரானைக் கண்டு தரிசிப்பதே இனி நமக்குரிய கடமை. மாண்பு பொருந்தியது (சிறப்புடையது) இதைவிட வேறு எதுவுமில்லை என்று கல்வி மிக்க , ஆலோசனை கூறுவதில் வல்ல அமைச்சர்களும் தாம் எண்ணித் துணிந்த முடிவைக் கூறினர்.]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.