வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 96
(22-08-2019)
யதார்த்தமா எங்காவது வீட்டை விட்டு வெளியே போயிட்டு வந்தாலே, ”என்ன சொல்லாமெ கொள்ளாமெ எங்கே போய்த் தொலைஞ்சீங்க?” என்று வீட்டில் திரும்பியவுடன் பாட்டு விழும். இந்தியாவின் அத்தனை பார்வையும் ’ப சி’ வீட்டு கதவுப் பக்கம் பாத்திருக்கிறப்போ, அவங்க திருமதியும் இப்படித்தான் ”சொல்லாமெ கொள்ளாமெ எங்கே போனீக?” என்று கேட்டிருப்பாகளோ? அவங்க சொல்லாமெ நமக்கு எப்படி தெரியும்?
’ப சி’ சொல்லாமல் வீட்டை விட்டுப்போனது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தச் ”சொல்லாமலே…. யார் பார்த்தது “ என்ற 1995 வாக்கில் வந்த பாட்டு ஞாபகம் இருக்கா? என்ன…? சுத்தமா ஞாபகத்தில் இல்லையா? அப்பொ அந்தக் காதல், பின்னிப் பெடல் எடுத்த வரிகள் சொன்னால் ஞாபகம் வந்து விடும். மழை சுடுகின்றது; தீ குளிர்கின்றது; பஞ்சு மெத்தை முள்ளைப் போல குத்துகின்றது; முந்தானை காதல் வலை; நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடை; வாவ்… என்னே ஒரு …இல்லை இல்லை பல கற்பனைகள்! ஆனா பாடகர் ஜெயசந்திரன் குரல் தான் விஜய்க்கு ஒட்டாமலே தனீய்யே நிக்குது..
முதன் முதலில் கேட்டபோது அந்த ஹம்மிங் இளையராசா குரல் மாதிரியே இருந்தது. (நல்ல வேளை யாரும் சொல்லாமலே இருந்திருந்தால் தெரியாமலே போயிருக்கும்); கோவை சி ஐ டி காலேஜ் படிக்கிறப்பொ தண்டபானி தண்டபானின்னு ஒரு நண்பன் இருந்தார். (ஒரு ஆளு தாணுங்க.. இப்பொ பெரீய்ய பதவியில் இருப்பதால் இருந்தார் என மருவாதைய்யா சொல்றேணுங்கோ) மெல்லிய குரல். ’அது வந்துட்டு, இது வந்துட்டு’ என குழந்தைத் தனமாய்ப் பேசும் குரல். இப்பத்தான் அதுக்கு பேரு ஹஸ்கி வாய்ஸ் என்றும், இளையராசா குரலுக்கு அது ஒத்துவரும் எனவும் யாரோ (சொல்லாமால்) சொன்னாய்ங்க. சமீபத்தில் நம்ம காலேஜ் இளசுகளோட இந்த இளசும்(??!!) போய் இளையராசா பாடல் பாடி மூணு மணி நேர இசைக் கச்சேரியில் கலக்கிட்டு வந்தாருங்க என்பதைச் சொல்லத்தான் இம்புட்டு ரகளை.
கொஞ்சம் பத்திரிக்கைகள் சொல்றதையும் பாக்கலாமே! போர் போட்ட குழியில் விழும் குழந்தையை எடுக்க ரஷ்யர்கள் என்ன செய்றாக தெரியுமா? (ஆக, குழந்தைகள் குழிக்குள் விழுவது உலகப் பிரச்ச்னை என்பது மட்டும் புரியுது) ஒல்லியான சிம்ரன் (பழைய ஸ்லிம்) மாதிரி நபரை தலைகீழா அனுப்பி குழந்தையை எடுப்பாகளாம். சொல்றாய்ங்க. நம்மூர்லெ அப்புடி யாரும் நெனெக்கவும், நம்ம டீவிக்காரெய்ங்க உட மாட்டாகளே! ஒரு கொழந்தெ விழுந்தா, ஒரு வாரம் அதெ வச்சித்தானே அவெய்ங்க பொழெப்பு ஓடுது. இதெல்லாம் நாம எதுக்கு சொல்லிகிட்டு…? ஒவ்வொரு டிவீக்கும் பின்னாடி ஒரு பெரீய்ய கூட்டமிருக்கு.
சமீபத்தில் படிச்ச சேதியெச் சொல்றேன் கேளுங்களேன்…
“…தற்காலம் நம்நாடு பலவித ஊழல்களை மேற்கொண்டிருக்கிறது. மதம் ஒடுங்குகின்றது. மதகுருமார்கள் தங்கள் கடமைகளைச் செய்யப் பதுங்குகின்றனர். வாலிபர் மிஞ்சுகின்றனர். மாதர்கள் கடமையை நிராகரிக்கின்றனர். பாஷ மறைகின்றது. தெய்வபக்தி குறைந்துவிட்டது…”
இது என்னவோ தமிழக அரசு அல்லது மத்திய அரசு பற்றிய விமர்சனம்ணு நீங்க சொன்னா, அது 100 க்கு 100 தப்புன்னு நான் சொல்லுவேன். இது 1-2-1926 இல் எழுதப்பட்ட நிலவரமாம் (நன்றி சொல்வோம் விகடன் பொக்கிஷத்துக்கு)
”என்ன ஒரு வில்லித்தனம்?” என்று கேட்டபடி கம்பர் சொல்லாமலேயே உதயமானார்.
வில்லத்தனம் தானே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன வில்லித்தனம்? அப்பாவியாய் (அதான் என் ஒரிஜினல முகமாச்சே) கேட்டேன்.
”வில்லனின் தங்கையை வில்லி எனச் சொல்லலாம் தானே? சூர்ப்பனகை இங்கே ’சொல்லாமலே….’ ஸ்டைலில் சொல்லும் சேதி சூப்பர். கொஞ்சம் இதையும் தான் பாரேன்…” சொல்லி மறைந்தார் கம்பர்.
சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட இடம். நாமளா இருந்தா, அழுது ஆர்ப்பாட்டம் செய்து மூக்கு சிந்துவோம். ஆனா நம்ம ஹீரோயின் சூர்ப்பனகைக்கு சிந்த மூக்கே இல்லையே? அப்பொ அவுக ஹீரோ இலக்குவன் கிட்டெ சொன்னாகலாம்; எம் மேலே எம்புட்டு ஆசை? நான் அழகா இருந்தா வேறு யாராவது டாவடிப்பாகண்ணு என் மூக்கை எடுத்தீயளே! ராசா…என் ராசா.. என் இளைய ராசா… என சொல்லாமல் சொன்னாகளாம். (அப்பொ காதலி முகத்தில் ஆஸிட் வீசுறதும் இதுக்காகவா? இப்புடி எல்லாம் கேள்வி கேட்டா நம்மாலெ பதில் சொல்ல முடியாது சாமி)
கம்பர் இப்படி எல்லாமா எழுதி இருக்காரு? இப்படி சந்தேகம் வருதா? இதுக்குத்தான் கம்பர் பாடல் படிக்கச் சொல்றேன். வாங்க படிக்கலாம்.
பொன் உருவப்
பொரு கழலீர்! புழை காண,
மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ?
“இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்து
ஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார்”
என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி
பூண்டது நான்? அறிவு இலேனோ?
[ஆரணிய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்]
[பொன்னால் ஆக்கப்பட்ட அழகுள்ள வீரக்கழல் அணிந்தவரே! பெருந்துளைப் படும்படி என் மூக்கை அறுத்ததற்க்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா? எதுவெனில், மூகறுபடலுக்கு முன்னிருந்த இனிய அழகிய வடிவம் இதைக் கொண்டு இவ்விடத்திலிருந்து சென்றுவிடுவாள் நம்மை விட்டு. மூக்கை இழந்த பின் வேறு இடம் செல்லாள். பின்னர் இப்பெண்ணை மற்றவர் எவரும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார் என்று என் மூக்கை அறிந்தீர். ஆதலால் நீங்கள் தவறு செய்தவர் ஆவீர்களோ? மாட்டீர். அவ்வுண்மையை அறிந்து அல்லவா உங்களிடத்து இரு மடங்கு அன்பு நான் கொண்டேன். நான் இதை உணராத அறிவு இல்லாதவளா? இல்லை.]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
🙂