வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 95
(17 -08-2019)
கோடிக்கணக்கில் நேரிலும், சமூக வலைதளங்களிலும் அத்தி வரதரை தரிசித்த பக்த கோடிகளின் மனம், இப்பதிவிற்காய் சிரமப்பட்டால், அதற்காய் முன்கூட்டியே வருந்துகிறேன்.. ஆமா… அப்படி தெரிந்தும் ஏன் எழுதுறே? – இது என் மன சாட்சி? மனசாட்சியைத்தான் யாரும் மதிப்பதில்லையே? நான் மட்டும் விதி விலக்கா என்ன? சும்மா ஒரு நகைச்சுவைக்காய்த் தானே?
ஆமா..ஆமா… அத்திதாராவா? நயன் வரதரா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அத்தி வரதர் பத்தி சகட்டு மேனிக்கு எல்லாரும் எழுதிய பிறகும் நான் எழுதலைன்னா? (தமண்ணா தரிசனம் செய்ய வருமுன் நடை சாத்திட்டாங்களே…? என்ற வருத்தம் லேசா ஒரு மூளையில் ஓடுது) அப்புறம் மேலே இருக்கும் கணக்குபிள்ளை சித்திர குப்தன் கேக்க மாட்டாரா? ஏன் எழுதலைன்னு? அவர் கேக்கலைன்னாக்கூட கேக்குறதுக்கும் ஆள் இருக்கில்லெ!! கொச்சியில் இருக்கும் நெல்லை பழனிராசு கேப்பாக!! ஆஃபீசுக்கே நேரில் வந்து பதிவு இன்னுமா எழுதலைன்னு கேட்ட ரஞ்சன் டேனியல், (மதிய உணவுக்கு 2.45க்கு வீட்டுக்கு போய், மாலை 6 மணிக்கு தயாராய் இரு… கோவிலுக்குப் போலாம் எனச் சொல்லி, இரவு 8.45 க்கு வீட்டுக்குப்போய் இலத்தரசியிடம் பாட்டு வாங்கியது யார்க்குத் தெரியும்? – ஆனா அந்தப் பாட்டின் ஊடே, ஹைலைட் வார்த்தை வந்து விழுந்தது – நீங்க 6 மணிக்கு வந்திருந்தா, அது தான் பெரீய்ய ஆச்சரியம்!!! ஆஹா… என்ன ஒரு புரிதல்), இந்த மனுசனுக்கு எப்படி பாட்டு (இங்கே சொல்வது கம்பன் பாடுங்கோ) கெடெக்குது? என ஆச்சரியப்படும் இலக்கியச் சுடர் இராமலிங்கம்… இப்படி பலர் சுத்தி இருக்காகல்லே!!
”வருதப்பா வருதப்பா கஞ்சி வருதப்பா…” என்று ஒரு பாட்டு அக்காலத்தில் செமெ ஹிட்டு. கைரிக்ஷா இழுப்பவராக வந்து நடிகர்திலகம் தன் திறமை எல்லாம் கொட்டி நடித்துத் தீர்த்தபடம் அது. ஆனால் அதே காலகட்டத்தில் புரட்சித் தலைவர் ஜாலியா பாடி ஆடிய ரிக்ஷாக்காரன் படமும் வந்தது. அதுக்கு பெரீய்ய அவார்ட் எல்லாம் கெடெச்சது. [அழகிய தமிழ்மகள் இவள்….. இப்பொ ஞாபகம் வந்திருக்குமே?] இந்த ரெண்டு படம் பாத்து நம்ம எம் பி ஏ படிச்ச மூளைக்கு எட்டுவது என்னவென்றால், ஹார்ட் ஒர்க்கை விட ஸ்மார்ட் ஒர்க் தான் ஒசத்தி… (சந்தடி சாக்கிலெ நான் எம்பிஏ படிச்சதையும் சொல்லிட்டோம்லே… எப்புடி???)
சரி..சரீ… அந்த வருதப்பா வருதப்பா பாட்டுக்கே வருமோம்…பள்ளிக் காலத்தில் நண்பர்களான வரதர்களை கலாய்க்க அது செமெ யூஸ் ஆச்சி. சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக் கொண்ட வரதராஜன் இப்போதும் சிரித்துக்கொண்டே ஊசி போடும் குழந்தை நல மருத்துவர் ஆயிட்டார் எமனேஸ்வரத்தில். பரமக்குடியில் ஒரு சுந்தரராஜப் பெருமாள் என்றால், ஆற்றின் மறுகரை எமனேஸ்வரத்தில் அருள் பாலிப்பவர் வரதராசப் பெருமாள். கல்லாரியில் படித்த வரதராசனும் அந்தக் கிண்டலை சிரித்தே ஏற்றது தான் உச்சம். என் பதிவை படித்து ரசிக்கும் மெரீன் ஸர்வேயரும் சரீ, அகில இந்திய வானொலியில் கலக்கும் நண்பராகட்டும், பணி நிறைவு ஆனாலும் அடிக்கடி தொடர்பில் வரும் என் பழைய அதிகாரி என வரதராசர்கள் பலர். எல்லார்க்கும் பொது அம்சம், அந்த அத்தி வரதர் போல் சிரித்த முகம். எந்த வீட்டில் கொடூர, வெளியே வராத வரதமுகம் இருக்குமோ? யாருக்குத் தெரியும்? அந்த அத்தி வரதருக்கே வெளிச்சம்!!
சரியான நாட்டுக் கட்டை என்று தச்சர்கள் (அதாங்க தமிழில் கார்பெண்டர்கள்) சொன்னதை விட அதிகம் மன்மத லீலைக்காரர்கள் சொல்லி இருப்பார்கள். இதே பாணியில் திம்ஸுக்கட்டை… ஓஹோ திம்ஸுக் கட்டை என்று உற்சாகமான் பாடல் ஒன்று இருக்கு. [உடனே உங்கள் கண்ணில் மின்னலடித்தாற் போல் “ஜோதிகா” தோன்றினால், நீங்கள் மரத்தமிழர். இல்லையென்றால் மற(ந்த)தமிழர். ஆனால் அத்திமரக் கட்டையில் செய்யப்பட்ட வரதர் புகழ் உலகம் பூரா பரவிடுச்சே…
பொதுவா ஒரு கற்சிலையானது பூசை செய்யச்செய்ய அதன் சக்தி கூடுதல் ஆகும் என்கிறார்கள். (அரசியல்வாதிகளின் சிலையும் இதில் அடங்குமா? என வம்பா கேக்காதீங்க ப்ளீஸ்…) கட்டையும் இப்படித்தான். மரத்தை வெட்டி தண்ணீரில் ஊற வைத்த கட்டைகளுக்கு வலிவு அதிகம். அந்தமானில் முன்பெல்லாம் இப்படித்தான் செய்தார்களாம். இப்பொ அதுவரை பொறுத்துக்கொள்ள நேரமில்லை. அந்தமான் காதலி படத்தில் தான் அது போன்ற கட்டைகளை ஊற வைக்கும் காட்சிகள் பாக்க வேண்டி இருக்கு.
சாதாரண கட்டைக்கே இம்புட்டு வலிமை. ஊற வச்சா… அப்பொ அத்திக் கட்டையில் செய்து, 40 வருஷம் ஊற வச்ச வரதருக்கு வலிமை இருக்காதா என்ன? (ஹலோ..ஹலோ… நான் என்ன ஊறல் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன்.. நீங்க எதெப் பத்தி யோசிக்கிறீங்க… ஆனாலும் டாஸ்மாக் ரொம்பத்தான் தமிழ்நாட்டெ கெடுத்திருச்ச்சி)
“கிட்டு… அத்தி என்றால் என்ன தெரியுமா?” கம்பர் உதித்தார்.
“அத்திக்காய் காய் காய்..
அத்தி பூத்தார் போல்… இது தானே! வேறு என்ன இருக்கு ஐயனே?” இது நான்.
”கடலும் கடல் சார்ந்த இடத்திலும் இவ்வளவு ஆண்டுகளா வேலை செய்தும் இந்த ’அத்தி’ என்றால், ’கடல்’ என ஒரு பொருள் இருப்பதை அறியாமல் இருக்கியே! கிட்கிந்தா காண்டம் ஒழுங்காப் படி” மறைந்தார் கம்பர்.
அட… நானு எதையும் ஒழுங்காப் படிக்கிறதில்லை என்கின்ற சேதி கம்பர் வரைக்கும் போயிடுச்சே… புரட்டினேன் கிட்கிந்தா காண்டத்துப் பாடலை. அடெ… ஆமா.. அத்தி என்றால் கடலாமே…கொரங்குப் படையெப் பாத்து பிரமிச்சுப் போனாகளாம் இராம லெட்சுமணர்கள். அத்தி மாதிரி இருக்கா? Not exactly like that but… என்று தசாவதாரம் கமல் டயலாக் போல் வரும் அந்த பாட்டையும் ஒரு எட்டு பாக்கலாம் வாங்களேன்.
அத்தி ஒப்பு
எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதொ?
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒஅருவலர் பார்ப்பர்,
எத்திறத்தினூம் நடுவு கண்டிலர், முடிவு எவனோ?
[கிட்கிந்தா காண்டம் – தானை காண் படலம்]
[இச்சேனைத்
தொகுதிக்கு கடல் நிகராகும் எனக் கூறினார், அக்கடல்களின் அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள்.
இச் சேனையின் பரப்பைக் கண்டவர்கள் இல்லை. இனி மேல் அறிவு உடையவரால் இச்சேனைக்கு எடுத்துக்
கூறும் உவமை வேறு என்ன உள்ளது? எதுவுமில்லை. இருபது நாட்கள் இரவிலும் பகலிலுமிடைவிடாமல்
பார்ப்பவராகிய இராமலக்குவர் எவ்வகையாலும் இச் சேனையின் நடுவையும் காணாதவராயினர். அவ்வாறானால்
இதன் முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ?
அத்தி – கடல்]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
இந்தப் பதிவில் என்ன கம்பன் பாடல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்குகிறீர்கள். ‘அத்தி’ என்பதற்கு கடல் என்கிற பொருள் உண்டு என்று அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
கம்பராமாயணத்திற்கு யாருடைய உரை நன்றாக இருக்கும் என்று சொன்னால் நலம்.
நன்றி.
நன்றி… நன்றி.
நான் வர்த்தமானன் பதிப்பகத்து மூலமும் தெளிவுரையும் பயன் படுத்துகிறேன்.
பேராசிரியர்கள் பூவண்ணன், ஜெ ஸ்ரீசந்திரன், அ மாணிக்கம் எழுதியது.
வார்த்தைக்கு வார்த்தை அரத்தம் தேட தமிழ் விர்சுவல் பல்கலைக் கழக நூலகத்தின் பதிப்பினை பயன் படுத்தலாம்.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார்.