வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 75
(29-01-2019)
ஒரு மேட்டரெ, ரொம்ப ஈசியா செஞ்சி முடிப்பதை, ‘தண்ணி பட்ட பாடு’ என்கிறார்கள். (எந்தத் தண்ணி? – இப்படி எல்லாம் கேக்காதீங்க ப்ளீஸ்) தண்ணி ஒரு இடத்திலெ பட்டா சட்டுன்னு வெரெஸ்ஸா எல்லாப்பக்கமும் போகுதே, அதெ வச்சித்தான் இப்படிச் சொல்லி இருப்பாங்களொ! ஆனா சும்ம சொல்லக்கூடாது; தண்ணியெ வச்சி எத்தனெ பழமொழிகள் சொல்லி வச்சிருக்காங்க! தாயெப் பழித்தாலும் தண்ணியெப் பழிக்காதே தொடங்கி, தண்ணியில்லா காட்டுக்கு (அட நம்ம இராமநாதபுரம் தானுங்க) மாத்துவது வரை ஏகமாக் கொட்டிக் கிடக்குது. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் என்பது அந்தக்கால ’கோழி குருடானாலும் குழம்பு ருசி’ டைப். தண்ணியெ வச்சி பழமொழிகளே தண்ணிபட்ட பாடா இருக்கே! என்று தான் நினைக்கத் தோனுது.
ஹிந்தியில் இதே மாதிரி அர்த்தம் வரும் வகையில், இதெல்லாம் என்னோட இடது கை வெளாட்டு என்பார்கள் (ஏ தோ, மேரா பாயே ஹாத் கா கேள்) அது என்ன இடது கை விளையாட்டு? என யாரும் கேட்டதில்லை. நமக்கு என்னமோ இந்த டயலாக் கேட்கும் போதெல்லாம், தேவர் மகன் படத்தில் கை வெட்டப்பட்டு நிக்கும் வடிவேலு சொல்லும் டயலாக் தான் ஞாபகத்திலெ வந்து நிக்கும்… ‘ என்ன….. , சோத்தெச் சாப்பிட்ற அதே கையாலெ….’
தமிழ்ச் சினிமா நமக்கு, முதல்வர்களை மட்டும் தரவில்லை; கூடவே பல வார்த்தைகளுக்கு சிறப்பு அந்தஸ்தும் தந்திருக்கு. உதாரணமா, சம்பவம்; தூக்கியிரலாமா?; சின்னவீடு; கொலெவெறி; இப்படிப் பல. ரஜினி புண்ணியத்தில், இதில் இன்னொரு வார்த்தையினையும் சேர்த்துக்கலாம் . அது தான் “ஜுஜுபி”; ரொம்ப ரொம்ப சுலுவ்வா ஒரு வேலையெச் செய்ய உதவும் ரஜினித்தனம் தான் அந்த ஜுஜுபி.
சமீபத்தில் சுந்தரர் பிறந்த ஊரான, திருநாவலூர் போயிருந்தோம் கூகுள் டைரக்சன் வைத்து. அங்கே போனா, தேவார வகுப்பு நடக்குது. தேவாரம், திருவாசகம், பண், ராகம் என்றாலே ஒன்றும் விளங்காது என கொட்டாவி விடும் கூட்டம் தானே நாமெல்லாம். கத்துக்க வந்தவங்களைப் பார்த்தா, எல்லாருமே கிராமத்து சிறுவர் சிறுமிகள். (அப்படிக்கா பாக்கும் போது அன்னாச்சி கடை ஊழியர்களின் சின்ன வயது தோற்றங்கள்); தத்தன தானன்னா…என ஓதுவார் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
’நமக்குப் புரியாத சங்கதி, எப்படி இந்தக் கிராமத்துப் பொடியன்களுக்குப் புரியுது?’ என மண்டெ அப்படியே சூடாயிடுத்து. பசங்க கூட தரையில் உக்காந்து, வாத்தி(யார்) சொல்லிக் கொடுக்காமெ நீங்க ஒரு பாட்டாவது பாடிடுவீங்களா? என்றேன். ’முடியாது’ என்ற பதில் வரும் என்ற நம்பிக்கையில்.
ஆனால் எங்களுக்கு அதெல்லாம் ஜுஜுபி என்று சொல்லாமல், ஒரு பாட்டைப் பாட அரம்பித்தனர். “தான் எனை முன் படைத்தான்…” என்ற பதிகத்தை அவர் பிறந்த இடத்தில், இவ்வளவு ஆண்டுகள் கழித்து, அதே கிராமக் குழந்தைகள் பாடுவதைக் கேட்க அப்படியே கண் கலங்கிவிட்டது. (நானும் யூ டியூப்பில் அதே பாட்டைப் பாட டிரெ செய்றேன்…ம்ஹும்; முடியலை. நாவலூரில் பிறக்க வேண்டுமோ என்னமோ தெரியலை)
இதேமாதிரி ஒரு ஜுஜுபித்தனம் ஜெய்பூரில் தென்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் தான் சாமி அது. ஏதோ ரெண்டாவது காசி, ரெண்டாவது கங்கை என என்னென்னவோ சொல்லி ஒரு இடத்துக்கு போகச் சொன்னார்கள். வழிமறித்தது பெண் போலீஸ்; அந்த இடத்துக்கு மகளிர் மட்டும் நிர்வானமாய் குளிக்கும் வேண்டுதல் செய்யும் இடமும் இருக்காம். (ஏன் இப்படி தப்பாவே யோசிக்கிறீங்க? சத்தியமா அது தெரிஞ்சிருந்தா குடும்மத்தோடு போவேனா?)
சரீ… அதெ விடுங்க; சொல்ல வந்த மேட்டருக்கு வருமோம். அதுக்கும் பக்கத்தில் நம்ம ஊர் ஸ்டைலில் செமெ கோயில். அட நம்ம இராமாநுஜருக்குத் தானுங்க ஜெய்பூர்லெ கோயிலு. அதை ஒட்டி ஒரு இராமாநுஜர் மடம். அதில் ராஜஸ்தானீய பொடிசுகள். கையில் ஹிந்தியாக்கம் செய்யப்பட்ட ஆழ்வார் பாசுரங்கள். நம்ம ஹிந்திப் புழமை எல்லாம் ஒன்று திரட்டி, ”எங்கே தமிழ் பாசுரம் பாடுங்க பாக்கலாம்” என்றேன். ம்…இதெல்லாம் நமக்கு ஜுஜுபி என்று சொல்லாமல், ஆண்டாள் பாசுரத்தை (மோடியின் தமிழ் உச்சரிப்பு மாதிரி எல்லாம் இல்லாமல்) அப்படியே பரமக்குடி கோவிலில், பொங்கல் பிரசாதம் சாப்பிடுவதற்கு முன், கேட்ட அதே உணர்வு. காலில் விழுந்து சேவிக்க வேண்டும் போல் தோணித்து.
“ஏன் நாங்க மட்டும் ஜுஜுபி எல்லாம் சொல்ல மாட்டோமா?” கம்பர் வந்தார்.
இராமாயணத்தில் எப்புடிங்க?
எல்லாரும், ’தான் தான் ஜுஜுபி’ என்பார்கள். ஆனா நாம் அப்படி இல்லெ. மூனு ஜாம்பவான்களையே ஜுஜுபி என்கிறோம். யாரு தெரியுமா அந்த மூவர்? படைக்கும், காக்கும், அழிக்கும் தொழில் செய்யும் மூன்று கடவுளார் பிரம்மா, விஷ்ணு, சிவன் கள் தான். சீதை இராவணனைப் பாத்து, அடேய் கொடியவனே! நீ என்ன அந்த மூணு ஜுஜுபி மாதிரி இராமனையும் நெனெச்சிகினியா என்ன? ‘அறிவு கெட்டவனே’ எனவும் திட்டுகின்றார்.
ஏன் இப்புடி ஒரு மாதிரியா பாக்கீக? பாட்டையும் படிங்க. அப்புறமா சொல்லுங்க யாரு ஜுஜுபி ன்னு.
அங்கண் மா
ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய் புன் தொழில் விலக்க உட்கொளாய்
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ!
[சுந்தர காண்டம்; நிந்தனைப் படலம்]
[”இப்பெரிய மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் அஞ்சுமாறு வாழ்கின்ற கொடியவனே! நீ செய்து வரும் இழிதொழிலை நீக்கிவிடும் எண்ணமற்றவனாய் இருக்கின்றாய். திருமால் நால்முகன், சிவபெருமான் ஆகியோரைப் போல எளியவன் என இராமன் என்றல்லவா நீ நினைத்துவிட்டாய்! அதனால் நீ அறிவற்றவனே!”]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
தமிழில் எழுதுவது தங்களுக்கு ஜுஜுபி என்பதில் சந்தேகமில்லை.
நன்றி நன்றி