வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 91
(31-07-2019)
சமீபத்தில் விஷமக்காரக் கண்னன் பற்றி அருணா சாய்ராம் பாடிய பாட்டு கேட்டேன். இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த கலவை சூப்பரோ சூப்பர். இதுக்கும் முன்னாடி மாடு மேய்க்கும் கிருஷ்ணனை பாடியதையும் பார்த்து ரசித்ததுண்டு. எனக்கென்னவோ மத்திய அரசு, ஜல் சக்தி அபியான் போன்ற திட்டங்களை இவர்கள் மூலமாய் ஜனரஞ்சகம் ஆக்கலாமே எனத் தோணுது. சரீ… கோகுல கிருணனை விடுங்க… இந்த எஸ் எம் கிருஷ்ணா வின் நெருங்கிய உறவு சித்தார்த்தாவின் முடிவு இந்தியாவை, அதிலும் பணம் பணம் பணம் என அலையும் நபர்களை யோசிக்க வைத்துள்ளது. (நானே இன்னெக்கி சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன்னா பாத்துகிடுங்க…ஆமா நேத்து நைட்டு ராத்திரி 1 மணி வரை கரோக்கி வைத்து பாட்டுப் பாடினது தான் காரணம்ணு பேசிக்கிறாகளே…)
சித்தார்த்தா ஒரு ஹீரோவா? அல்லது வில்லனா? என்ற கேள்வியினை ஒதுக்கி வைத்து விட்டு, இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலாமே? (அப்பொ நான் ஹீரோ, நீங்கள் வில்லன; அல்லது நான் வில்லன் , நீங்க ஹீரோ..அட சந்தோஷத்தெப் பாருங்க…)
நான் இந்த விஷயத்தெ எப்புடி பாக்குறேங்கிறது தான் இப்பொ முக்கியம். எல்லாரும் அவரவர் சக்திக்கேற்ப கொஞ்சமாவோ, அதிகமாவோ புகழ் சம்பாதிச்சு வைக்கிறோம். பணமும் அதன் கூடவே வந்திருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை.. பணம் முந்தியா? புகழ் முந்தியா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? இதுக்கு பதில் சொல்லுங்க; நான் அதுக்கு பதில் சொல்றேனே!!
புகழ் கொஞ்சமா இருந்தால் கூட, கூட இருக்கிறவய்ங்க அதெ, ராஜாதி ராஜ, ராஜ கம்ப்பிர அளவுக்கு (குலோத்துங்குவையும் மறக்காமல்) சொல்லி உசுப்பேத்தி விடுவர். இலக்கியம் பக்கம் ஒன்றில் பீமனை இப்படி ஏத்தி விடுகின்ற பாடல் வருது. சொல்லிக்கிற அளவுக்கு புகழ் ஏதும் பீமனுக்கு இல்லாங்காட்டியும், அர்ச்சுனனைப் பத்தி சப்ஜாடா சொல்லிட்டு, அவரோட ப்ரோ எனச் சொல்லுது ஒரு சிறுபாணாற்றுப் பாடல்.
காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்
காட்டிற்கு எரி ஊட்டியவன்; அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவன்; கச்சையை அணிந்தவன்; ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) பீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். அப்படியே போனாப் போகுதுண்ணு பீமனின் சமையல் சிறப்பு மட்டும் அதிலெ சொல்லி இருக்காம். ஏத்தி உட்றதிலெ நம்ம புலவர்களெ அடிச்சிக்க முடியாது. அடிச்சிக்க முடியாது.
அதே புகழ் இருக்கும் இடம் தெரியாமல் போன போது கோபப்படாமல் அதை எதிர் கொள்வது ஒரு கலை. கார் நிகோபார் தீவில் ஒரு தமிழரின் கடை, வீடு எல்லாம் சுனாமியில் எல்லாமே போய் விட்டது. செந்தில் ட்ரவுசரோடு தான் நின்றார், தனி ஆளாய். மனுஷன் அசரலையே!. ஏப்படீங்க? கேட்டேன் சில மாதங்களுக்குப் பிறகு. ”நான் அந்தமான் வரும் போது இதே செந்தில் ட்ரவுசர் தான் போட்டு வந்தேன். மறுபடியும் ஆனா ஆவன்னாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன…முன்னடி வந்த போது உங்களெ மாதிரி ஆடகள் அறிமுகம் இல்லெ. இப்பொ இருக்கே…” சூப்பரில்லெ… கோபமே படாமெ எப்படிச் சமாளிச்சார் ந்ம்மாளு? தன் இழந்த புகழை மீட்ட விதம். அசர வைத்தது.
புகழ் என்பது மற்றவர்களால் சூட்டப்படும் ஒரு மகுடம்… (அப்பன் மகனுக்குச் சூட்டுவது இதில் சேர்த்தி இல்லை.); அது மற்றவர்களால் கழற்றப்படும் போது கோபமாய் வெடிக்கிறது அதே சமூகத்தின் மீது. சமூகத்தை எதிர்கொள்ள பயப்படுகிறது அந்த புகழ் போதை.
அந்தமானில் 27 வயது வாலிபரின் கார் விபத்துக்குள்ளானதை தாங்க முடியாமல் உயிரை மாயத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தீகள் படிக்கும் போது, பிரம்மன் ஏதோ இம்மாதிரி ஆடகளை கார் ஓட்டிப் பழகவே படைத்தாரோ ? என்ற கேளவி எழுதின்றது..
புகழ் குழைந்து கோபம் கொப்பளிக்கும் போது, அதைச் சமாளிக்க மூளைக்கு அப்ளிகேஷன் போடுமாம். அந்த சிச்சுவேஷனை விட்டு மனதை விலக்குவது நல்ல அணுகுமுறை. (இதனால் தானோ, பலர் சின்ன வீடு வைப்பதை, நான் சரி என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்); கோவத்துக்கான காரணம் ரொம்ப சப்பெ மேட்டரா இருக்கலாம். அதிலிருந்து முன்னாடி எல்லாம் எப்படி வெளி வந்திருக்கோம்ணு யோசிச்சி வரலாம். இல்லாட்டி ஏதாவது ஸ்டிர்ஸ் குறைக்கும் பயிற்சிகள் தியானம் முதலியன (மகளிர் சொல்லித்தரும் இடமாய் இருத்தல் நலம்) செய்யலாம். சித்தார்த்தாவும் செய்திருக்கலாமோ?
ஒரு பேராசியர் சமீபத்தில் சொன்னார்; எனக்கு மன அழுத்தம் வந்தா உங்க கம்பன் தொடர்பான புத்தகத்தெப் படிப்பேன்… அங்கங்கெ சிரிச்சிட்டு ரிலாக்ஸ் ஆயிடுவேன்… (என்ன…. அடிக்கடி சிர்ப்பதைப் பார்த்து, இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சி ? என்று கேட்கும் மனைவிக்கு மட்டும் பதில் சொல்ல முடியாதாம்) இதிலெ இன்னொரு கூத்து என்ன வென்றால், வேறு கல்லூரி முதலவர் ஒருவரும் மன அழுத்தம் எனப் புலம்ப, என் புத்தகத்தின் சில பகுதிகளை அவருக்கு அனுப்பி பின்னாடி அவர் ரிலாக்ஸ் ஆனாராம். எப்படியோ, கை காசு செலவு செய்து புக் போட்டு காசெக் கரி ஆக்குறீங்க என்று சொல்லும் என் மனைவியின் வாரத்தைகள் என்றும் எனக்கு பண்/மன அழுத்தம் தருவதில்லை. அதான் பழகிப் போச்சு …அப்படியே கேட்டு கேட்டு.
இந்த மேட்டர் பத்தி கம்பர் கிட்டேயும் மைக் நீட்டி கருத்து கேட்டா என்ன? கேட்டேன். யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் முழக்கத்தில் பதில் கிடைக்கும். (அப்பொ வில்லன் தானா?) புகழ் & கோபம் ரெண்டும் எப்படி மிக்ஸ் செய்யணும் எனச் சொல்கிறார் பாருங்க. கும்பகர்ணன் சொல்றார், இராமனே, இலக்குவனெ அடிச்சா புகழ் வராதுங்கரெச்சே கோபமும் வரலெ; அனுமன், சுக்ரீவன் யார் மீதும் கோபம் வரலெ. பாத்தீயளா? புகழ் மங்கும் போது கோபம் வராமெக் பாத்துக்க கம்பன் சொல்லும் சூத்திரமே இதுதான்…
கம்பன் பாட்டு இதோ:
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
நம்பியை முனிந்திலேன் நயக்கும் வாலிதன்
தம்பியை முனிந்திலேன் சமபர் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால்
[யுத்த காண்டம் – கும்பகர்ணன் வதைப் படலம்]
[”அம்புடன் அமைந்த வில்லை ஏந்தியவனே! எனக்குப் புகழ் தரும் செயலன்று என்பதால்போர்க்களத்தில் நான், உன் தம்பி இலக்குவன் மீது கோபம் கொள்ளவில்லை; அவனுக்கு வாகனமாக அமைந்த அனுமன் மீது கோபம் கொள்ளவில்லை; உன்னை விரும்புகின்ற வாலியின் தம்பியாகிய சுக்ரீவன் மீது கோபம் கொள்ளவில்லை.”]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
அதநெ <— அ த நெ = அந்தமான் தமிழ் நெஞ்சன்
அதானே மருவி அதநெ ஆகிவிடுது !
இந்த ரு கின்ன ரு வா இல்லெ பெரிய று வா?
ஓ.எஸ்.ஸுப்ரமணியன் !
On Thu, 1 Aug 2019 at 08:29, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:
> Tamil Nenjan posted: ” வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 91 (31-07-2019)
> சமீபத்தில் விஷமக்காரக் கண்னன் பற்றி அருணா சாய்ராம் பாடிய பாட்டு கேட்டேன்.
> இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த கலவை சூப்பரோ சூப்பர். இதுக்கும் முன்னாடி
> மாடு மேய்க்கும் கிருஷ்ணனை பாடியதையும் பார்த்து ரசி”
>
அது கின்ன இல்ல, சின்ன தான் தப்பிதமா கின்ன ஆயிருச்சி.
ஓ.எஸ். ஸுப்ரமணியன்.