வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 89
(24-07-2019)
பணம் உலக வாழ்க்கைக்கு ரொம்ம்ப முக்கியம் என்றாலும், அதையும் தாண்டி சிலர் சில பணிகளை செய்யத்தான் செய்கிறார்கள். என் மதுரை நண்பர் தனசேகரன் இப்போது குடும்பத்தோடு குடும்ப பிரச்சினை தீர ஆலோசனை வழங்கிக் கொண்டு இருக்கிறார், (குடும்பத்தோடவே இதைச் செய்வதால், அவர்தம் குடும்பத்தில் பிரச்சினை வராது என்று நினைக்கிறேன்.) அவர் சொன்ன தகவல் தான் அதிர்ச்சி தருகிறது. கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லெயே கொஞ்சுவதை விட்டுவிட்டு கோர்ட்டுக்கு வாராகளாம். (ம்.. நாம் தான் இன்னும்…..)
National Institute of Oceanography (NIO) கோவாவில் பணி புரிந்த ஒரு அறிவியல் ஆய்வாளர் டாக்டர் சந்திரமோஹன். வேலையினை உதறிவிட்டு தனியே தொழில் செய்கிறார். அப்பப்பொ முகநூலில் முருகன் தலங்கள் போனது வந்தது பற்றி பதிவுகள் வரும். ஆனால் இன்று முற்றிலும் தன்னை ஒரு அடியாராக வெளிப்படுத்திய ஆன்மீகப் பதிவு வந்தது. குடும்பம் + வேலை + ஆன்மீகம் இவை ஒன்று கலந்து இருங்க என்கிறார் அவர். நல்ல செய்தி எங்கிருந்து வந்தாலும் ஏத்துக்க வேண்டியது தானே! (இந்த மனுஷனும் எப்பொ காவி உடை மாட்டிகிட்டு போவாறோ? என்ற கவலை என் மனைவிக்கும் உண்டு என்பதை நான் மறுப்பதற்கில்லீங்கோ…)
சமீபத்தில் ஏர் இண்டியாவில் பெரிய பதவியில் இருப்பவர் தன் குடும்பத்தோடு அந்தமான் வந்திருந்தார். சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாக, முருகன் கோவிலையும் சொன்னேன். இளைய தலைமுறை உடனடியாக மறுப்புக் கொடி காட்டி “வே” என்றது. ஏன்? கடவுள் நம்பிக்கை இல்லையா என்றேன்? இல்லை என வேகமாய் பதில் வந்த்து. சோற்றுக்கு வழி இல்லாமல் சிரமப்பட்ட மூத்த தலைமுறை தான் கடவுள் நம்பிக்கை வைத்திருக்கும். தேவை என நினைக்கும் முன், அதனை நிவர்த்தி செய்யும் உங்களைப் போன்றோர்க்கு பெற்றோர் தான் கடவுள் என்றேன். ஏற்றுக் கொண்ட மாதிரி தெரியலை. முருகன் கோவிலுக்கும் போன மாதிரியும் தெரியலை.
சிலர் சொல்லி, சிலர் வாழ்வில் மாற்றங்கள் வரலாம். சிலரின் வாழ்க்கையே பலருக்கு மாற்றங்களும் தரலாம். (என்னடா இது வம்பன் ஏதோ சீரியஸா எழுதுறானேண்ணு எல்லாம் பாக்க வேண்டாம். நமக்குத்தான் சீரியஸா எழுதவே வராதே! சீரீயஸாத்தாங்க சொல்றேன்) நம்ம ஆஃப்பிஸ்லெ பாத்தா ஸ்டெனோவா சேந்த அத்தனை பேரும், ஸ்டெனோவாத்தான் ரிடையர் ஆகுறாய்ங்க.
ஆனா எனக்குத் தெரிந்த ரெண்டு நபர்கள் ஸ்டெனோவா வேலைக்குச் சேந்த்து, சீஃப் மேனேஜர், சீஃப் டெர்மினல் மேனேஜர் போன்ற பதவிகளில் இருக்காங்க. அதிர்ஷ்டவசமா அந்த ரெண்டு பேருமே, அந்தமான் வந்திருந்தாங்க. என் துரதிருஷ்டம் நான் ஆஃபீஸ் டூரில் தில்லி போயிருந்தேன் அப்போ… இவங்களாலெ மட்டும் எப்படி இப்படி வர முடிந்தது? மற்றவர்களால் ஏன் இப்படி வர முடியலை? யோசிங்க யோசிங்க…காரணம் இல்லாமலா இருக்கு!
பொறியியல் படித்த மதுரைக்காரர் ஃபேமிலி கவுன்சிலிங் செய்கிறார். கடல்வாழ் ஆய்வு செய்தவர் ஆன்மீக ஆலோசனை சொல்கிறார். ஸ்டெனோவாய் சேர்ந்து பெரீய்ய பதவீகளை அலங்கரிக்கும் செயலே சொல்கிறது அதன் வெற்றியினை. ஏதோ ஒரு மாற்றம் வருவதற்கு, ஏதோ யாரோ தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள். (நாம தான் தூங்கிக் கொண்டிருக்கிறோமோ?
அரசியலோ, அரசு வேலையோ, அல்லது அமீத் ஷா வேலையாகவும் ஆகட்டும்; ப்ராப்பர் கவுன்சிலிங் முக்கியம். அசரீரியாய் ஒலித்தது கம்பனின் குரல் மூலம்.
கம்பர் தொடர்கிறார்; பிறர் சிரமப்படும் நேரத்தில் நாம் சென்று ஆறுதல் சொல்வதும் கூட ஒரு பெரீய்ய கவுன்சிலிங் தான். ஆனா பாதிக்கப்பட்ட ஆட்களிடம் சொன்னா எடுபடாது. யாரு பிரச்சினை பன்றாகளோ, அங்கே போய் கவுன்சிலிங் செய்தா? செமெ ஐடியா இல்லெ?
அப்புடியே அசோக வனத்துக்கு வாங்க. சோகமாய் சீதை. பயமுறுத்தும் பல அரக்கியர். கவுன்சிலிங் எல்லாரும் செஞ்சிர முடியாது. அதுக்குண்ணு எக்ஸ்பெர்ட் வேணும். இங்கே திரிசூலம் கைவசம் வச்சிக்காத எக்ஸ்பெர்ட் திரிசடை பேசப் பேச, அங்குள்ள அத்தனை அரக்கியரும் விலகிப் போனார்களாம். கவுன்சிலிங் வெற்றியில் மகிழ்வாய் சீதை. சூப்பரில்லெ.
பின் குறிப்பு: சுருட்டை முடி வைத்திருப்பவர்கள் அதை நேர் செய்ய பியூட்டி பார்லருக்கெல்லாம் அலைவதாய் மனைவி சொல்லக் கேட்டிருக்கிறேன். நேரான முடியை சுருட்டவும் பெயர் தெரியாத பொருள்கள் எல்லாம் வாங்க அலைந்து திரிந்துள்ளேன். ஆறுதலான் செய்தி கம்பர் தருவது என்னவென்றால், சீதைக்கும் சுருட்டை முடி தானாம். சுருட்டை முடி உள்ளோர் காலரை (ம்…பெண்கள்…. வேண்டாமே) தூக்கிவிட்டுக் கொள்ளவும்.
கவுன்சிலிங்கோடு சீதையின் சுருட்டைமுடி பற்றி வரும் கம்பனின் அந்தப் பாட்டு இதோ உங்களுக்காய்:
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்
செறிந்தார் ஆயதீவினை அனார்தெறல் எண்ணார்
நெறித்து ஆரோதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள்
[சுந்தர காண்டம்; நிந்தனைப் படலம்]
[அறிஞரை ஒத்தவளான திரிசடை, தான் கண்ட கனவையும் அதன் பயனையும், மற்ற அரக்கியரிடம் சொன்னாள். தம் அரசனான இராவணனுக்கு அஞ்சி, அவன் கட்டளையின்ன்றி வேறு எதையும் அறியாத கொடிய தீவினையை ஒத்தவரான அவ்வரக்கியர், திரிசடை சொன்னதைக் கேட்டு நல்லறிவு பெற்றவர்களாகி , கோபத்தை விடு, சீதையை அச்சுறுத்துதலையும் விட்டுவிட்டனர். சுருண்ட கூந்தலைப் பெற்ற சீதை துன்பம் குறைய உயிர் நிலைக்கப் பெற்றாள்]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
[…] via கவுன்ஷிலிங் ரொம்ப முக்கியம் — அந்தமா… […]