வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 73
(21-01-2019)
”எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்….” இது ஓர் அந்தக் காலத்து ஹிட். அதுக்கும் முன்னால் “கிருஷ்ணா முகுந்தா முராரே… “ பாட்டெல்லாம் கொடி கட்டி பறந்த காலமும் உண்டாம். இப்பொ எல்லாம் இதெப்பத்தி ஏதாவது பேசினா, இளைய தலைமுறை நம்மளை ஒரு மாதிரியா பாக்குது.
இப்படித்தான் சமீபத்தில் பொங்கல் விடுப்புக்காய் (லீவுக்கு என்பதை தமிழ் புத்தாண்டு என்பதால், தவிர்த்துள்ளதை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்) நாமகிரிப்பேட்டைக்கு போயிருந்தோம். நாமகிரிப்பேட்டை என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது? ஒரு மண்ணும் வரலையா? அப்பொ நீங்க ஒரு யூத் தான். (அட.. அட… அட.. என்ன ஒரு சந்தோஷம் பாருங்க!!) நாமகிரிப்பேட்டை நண்பரின் வாரிசுகளிடமும் கேட்டுப் பாத்தேன் இதே கேள்வியினை. (பின்னே பொழுது போகணுமே?) அந்த வட்டாரத்திலேயே, அந்த ஊரில் தான் முதன் முதலில் பைக் வந்ததாம் (என்ன ஒரு ஜெனரல் நாலேட்ஜ்?) 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பதில் இது. ப்ளஸ் டூ கொஞ்சம் தேவலை… ஏதோ பீ பீ ஊதுவாரே… அவரு பேரூ என்னம்மா? அம்மாவின் துனை தேடியது மாணவின் குரல்.
”நாதஸ்வரம் வைத்து தேவாரம், திருவாசம் எல்லாம் ஒரு காலத்தில் பாடி இருக்காகளே!” – இப்படி அங்காலாய்த்தேன் நான்; என் பையன் உள்ளே புகுந்து கேட்டான்: நாதஸ்வரம், தேவாரம், திருவாசகம் இதெல்லாம் யாரு? ஏதாவது ஊர் பேரா இதெல்லாம்? இப்படிக் கேட்டான். இளைய தலைமுறைக்கு சரிய்ய்யா சொல்லித் தரலையோ? (நமக்கே இப்பொத்தான் படிக்க அருள் வந்திருக்கு எனக் கொஞ்சம் சமாதானம் ஆனேன்)
சங்கீதத்தை சந்தோசமாய் அனுபவிப்பது போல் மற்றவற்றில் கொஞ்சம் சிரமம் தான். (ஹலோ, ஹலோ.. நானு நல்ல விதமாத்தானே சொல்லிட்டு இருக்கேன். நீங்க ஏன் இரவு 11 மணி விளம்பர பக்கம் போறீங்க?) அதுவும் சித்தாளைக் கட்டிகிட்டு என்று சிவில் பொறியாளர்களைக் (தமிழ், தமிழ்) கேலி செய்யும் சிற்றாடைக் கட்டிகிட்டு பாடல் இன்றும் சந்தோஷம் தரும்.
இந்த வகையில் ”எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற பாடல் வரிகள் சுகமானவை. யாதும் ஊரே; யாவரு. கேளிர் என்பதன் பாமர விளக்கம் இது எனலாம்.
ஆனா, இந்த காசு துட்டு மணி மணி இதெல்லாம் எல்லாரும் பெற்றுவிட்டால்?? இதைத்தானே கம்யூனிசம், சோசலிஷம், அண்ணாயிசம், அப்பாயிசம் என ஒவ்வொரு தத்துவமுமே சொல்லிட்டு இருக்கு.
ஆன்மீகம் மூலம் பணம் பெறுவது என்பது தனி சப்ஜெக்ட் சாமி. சாமிகிட்டேயே பணம் கேட்டு பதிகம் பாடுவதும் நடந்திருக்கு. (பலன் தரும் பதிகங்கள் என கூகுளில் தேடிப்பாருங்களேன். மிரண்டு போய் விடுவீர்கள்)
பணம் இல்லை என்றால் சந்தோசம் இல்லை ஒத்துக்கிறேன். ஆனா பணம் மட்டுமே, சந்தோஷத்தை தந்து விடுவதில்லை. ஒருவேளை பணம் வச்சிகிட்டு, இல்லேண்னு சொல்வது தான் சந்தோஷமோ?
1980 களில் நான் படிக்க வேண்டி ஆண்டுக்கு 150 ரூ வட்டிக்கு கடன் வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. அதுக்கு அப்பவே, பிராம்சேரி நோட் எல்லாம் எழுதிக் குடுத்தேன். அந்த நோட்டு என்ன? என்பதும், அதில் எழுதப்பட்டிருக்கும் சங்கதிகள் ஏதும் புரியாமலேயே, பணம் சந்தோசமாய் வாங்கினேன். (ஒரு 150 க்கு வக்கில்லாத ஆளா இருக்கோமே என்ற ஒரு வெட்கம் பிடுங்கித் தின்றது அப்போதும்) கடனே வாங்காது நாட்களைக் கழிக்க வேண்டும் என நினைத்தேன் அப்போதே.
ஆனா இப்போ, எப்படித்தான் என்னோட நம்பர் இந்த பேங்க் காரங்களுக்குக் கெடைக்குதோ? கடன் வாங்கிகோங்கோ என்று குய்யோ முறையோ எனக் கதறுகிறார்கள். நமக்குத் தேவையான நேரத்தில் வராமெ இப்போ ஏன் தான் கஷ்டப் படுக்குகிறார்களோ? பொங்கலும் அதுவுமா, புது வேட்டி எல்லாம் கட்டி, கரும்பு கடிக்கத் தயாரான போது, இனிய தமிழில் ஒரு பெண் குரலில் அழைப்பு வந்தது, வழக்கம் போல் கடன் வாங்கிக்குங்கோ என்று.
கோபத்தை அடக்கி, ”கடன் பட்டார் நெஞ்சம்” கதை எல்லாம் சொல்லி, நல்ல நாளும் அதுவுமா ஏம்மா கடன் கொடுக்க வாறீங்களேம்மா என அட்வைஸ் செய்து, நாளு நாள் லூவு போடுங்கம்மா என்றேன். என் நேரம், இதே அட்வைஸை ஆங்கிலம், ஹிந்தி, பெங்காளியிலும் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியதாப் போச்சி. ”கடன் பட்டார் நெஞ்சம் போல்” தான் ஹைலைட்.
என்னது, நம்ம மேட்டர் ஓட்ற மாதிரி இருக்கே? – கம்பர் உதித்தார்.
’ஆமாம். சாமி; ஆமா… சாமீ… இந்த எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது காசு பணத்திலும் சாத்தியமா சாமீ? செத்த சொல்லுங்களேன்’ – இது நான்.
நம்ம காலம் முதல், இந்த மெக்காலே பார்த்த காலம் வரைக்கும் இப்படித்தான் பணம் எல்லார் கிட்டேயும் இருந்திருக்கு. சுருக்கமா சொல்லப்போனா, இராமன் ஆளாத போதும், இராம இராஜ்ஜியம் தான் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்திருக்கு. அப்புறம் தான் லேசா..லேசா மாறிப் போயி வேறு வேறு ஒரேஏஏஏ பக்கமா போய் சேர ஆரம்பிச்சது.
நாம நாம் உதரணத்துக்கு ஒண்னு எடுக்கப் போனா, அது அயோத்தியாவே வந்து நிக்குது. அங்கே, ஏழை பணக்காரர் வித்தியாசமே இல்லாமெ இருந்திச்சாம். எல்லாரிடமும்.. எல்லாம்..ம்..எல்லாமும் இருந்ததாம்; மறைந்தார் கம்பர்.
(மனதில் வசந்த மாளிகை சிவாஜி போல்) அப்படி ஒரு பாட்டை நீ(ங்கள்) பார்க்க வேண்டுமா? (மயக்கமென்ன? இந்த மௌனமென்ன – இந்தப் பாழாப் போன, சினிமா ரொம்பவே கெடுத்திருக்கு நம்மை) அப்பொ கம்பர் பாட்டையும் ஒரு எட்டு படிக்கலாம் வாங்க..
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லைமாதோ.
[பால காண்டம்; நகரப் படலம்]
[அயோத்தி நகரத்தில் பல்வகைக் கல்விகளைக் கல்லாதவர்கள் என்று பிரித்துச் சொல்லத் தக்கவர்கள் இல்லாமையால், கல்வியிலே முற்றிலும் வல்லவர்கள் என்று பிரித்துச் சொல்லத் தக்கவர்களும் இல்லை. அக் கல்வியிலே வல்லமை இல்லாதவர்களும் இல்லை. மக்கள் அனைவரும், எல்லா வகையான சிறந்த செல்வங்களையும் பெற்றிருப்பதாலே, அங்கே ஏழைகளும் இல்லை; பணக்காரர்கள் என்று வேறு படுத்திச் சொல்லத் தக்கவர்களும் இல்லை.]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
Kadaisiyil naamagirppaettaiyai ambo nnu vittutteengalae aiyyaa?
வம்பு வளக்க ஒரு களம் வேண்டும். பொங்கலுக்கு சென்ற நாமகிரிப்பேட்டை தான் சிக்கியது. அதான் படமும் வரை எடுத்துப் போட்டாச்சே? இன்னும் வேண்டுமா ஐயா?