வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 19
( 15-04-2018)
பிறரிடம் வாங்குவதை விட, தருவதில் தான் இன்பம் அதிகம்.
யுவராஜ் தமக்குப் பிடித்தமான் விளையாட்டில் மூழ்கி இருந்தான். யுவராஜ் சிங் என்றால் கிரிக்கெட் ஞாபகம் வந்திருக்கும். இந்த யுவராஜும் அதே போன்ற ஒரு விளையாட்டில் தான் இருந்தார்.
தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. யுவராஜா, மஹாராஜா ஆகும் தகவல் சொல்லப்பட்டது. ஒரு ஓவரில் இன்னும் இரண்டு பந்து பாக்கி இருந்தது. விளையாடப் போகட்டுமா? இது யுவராஜ்.
விளையாட்டுப் பிள்ளை…போ போ..அனுப்பி வைத்தான் ஒரு நரை கண்ட மூத்த அரசன்.
கிச்சன் கேபினெட் பிரச்சினையால் அன்று இரவே காய்கள் வேறு திசையில் நகர்ந்தன. 14 ஆண்டுகள் டென்யூர் போஸ்டிங். டிரைபல் ஏரியாவில் டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்து கையில் அந்த யுவராஜா இளராஜா இராமனுக்கு.
விளையாட்டுப் பிள்ளை முகத்தில் அப்பவும் இப்பவும் ஒரு மாற்றமும் இல்லையாம். நொந்து போன நேரத்திலும் மகிழ்வு தசரதன் பார்வையில்.
அது சரி, ஆத்துக்காரி சீதாப் பிராட்டியார் என்ன சொன்னாங்க? அது தானே முக்கியம். கம்பர் அதையும் தான் சொல்கிறார்.
இராமனைப் பிரிந்த சீதை இலங்கையில் வாடும் போது தான் அந்தக் காட்சி நம் கண்ணுக்குப் புலப்படுது. சீதை வாடினாராம். எப்பேர்ப்பட்ட இராமனின் முகம் அது? கோசல நாடு உன் தம்பிக்கு ஆயிற்று என கைகேயி சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் பொலிவு பெற்றதாம் இராமர் முகம். அதுவும் முன்பு இருந்ததை விடவும் மும்மடங்கு.
ஹை சிங்கம் போல..என மனதுக்குள் பாடுகிறார் சீதை.
ஆண் சிங்கம் போலவாம்.
அதுவும் கொடிய ஆண் சிங்கம் போன்ற முகம் உடைய இராமனை நினைத்து வருந்தினாராம்.
அப்பொ பொலிவா மும்மடங்கா தெரிந்த முகம், இப்பொ இராவணனை அழிக்க கொடிய ஆண்சிங்கமாய் நினைத்து வாடியதாம் சீதையின் மனது.
இதன் மூலம் யாம் பெறும் சூத்திரம், அடுதவர்க்கு தருவதில் மும்மடங்கு பொலிவு.
ஹலோ..இன்னெக்கி யாருக்காவது ஏதாவது கொடுத்தீயளா?
ஹலோ..ஹலோ.. எங்கே ஓட்றீங்க… கம்பன் பாட்டெ படிச்சிட்டுப் போங்க ப்ளீஸ்.
இதோ கம்பரின் வரிகள்:
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகையர்
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
உங்கள் பார்வை ரொம்ப நன்னா இருக்கு.
ரொம்ப நன்றி