நாமளும் செய்வோம்லெ….


பழமொழி சொல்பவர்களை ‘பழமையான மனிதர்கள்’ என்று இன்றைய நவீன இளைஞர்கள் முகம் சுழித்து ஒதுக்குவதை கவனித்திருக்கிறீர்களா? இதே போல் தலைசீவுவது, பவுடர் போடுவது (பாடி ஸ்பிரே அடிப்பது இதில் அடங்காது), தலைக்கு எண்ணெய் வைப்பது, முழுக்கை சட்டை போடுவது இப்படி எல்லாமே இன்றைய இளைய தலைமுறைக்கு எட்டிக்காயாகத் தான் இருக்கின்றது. ஒரு காலத்தில் இளமைத் துள்ளலுக்கு இவை எல்லாம் அத்தியாவசியத் தேவையாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதில் பழமொழிக்கு பதிலா ‘புதுமொழி’ மட்டும் இந்த சந்தானம் புண்ணியத்தில் இப்போதும் இளைஞர்கள் வாயில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதே போல் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்; குடிகாரன் உண்மையைத் தான் உளறுவான் போன்றவை உண்மை என்றே நம்பப் படுகின்றன. திரைப் படப் பாடல்களில் குடிகாரர்கள் பாடும் பாட்டில் நல்ல நல்ல கருத்துள்ள பல வருவதைப் பாக்கலாம். “கிக்கு ஏறுதே” என்ற கொஞ்சம் பழைய பாட்டு தான். ரஜினி படத்தில் வரும் பாட்டு அது. ஒரே தத்துவ மழை தான் போங்கள். தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை. பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை இல்லை. இப்படி ஒரு தத்துவம் கலந்த பாடல் கேட்டிருக்கலாம்.

தாய், தந்தை, பிறப்பு, இறப்பு மாதிரி நமக்கு கீழே வேலை செய்ய நல்ல எம்ப்ளாயீ கிடைப்பதும் இறைவன் தந்த வரம் லிஸ்டில் சேர்க்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று பலர் புலம்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் வேலை செய்வதற்கான என்ன திறமை இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. கேட்டால், எது கொடுத்தாலும் செய்கிறேன் என்பார்கள். கொடுத்தால், என்னோட படிப்புக்கு இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போவார்கள். இவர்களை எல்லாம் பேப்பர் போட்ட கலாம் கதைகளை எத்தனை முறை சொன்னாலும் மண்டையில் ஏறாது.

ரயில்வே ஸ்டேசனில் பிச்சை கேக்கும் ஒரு சிறுவனை தொழிலாளி ஆக்கும் காதாநாயகன் வேலை ஒரு படத்தில் வந்திருப்பதைப் பாத்திருப்பீங்க. பிச்சை கேக்கும் சிறுவனிடம் பணம் கொடுத்து குமுதம் கல்கி என வாங்கி விற்கும் வியாபாரியாக மாற்றும் நல்ல தரமான காட்சி அது. (அது கதாநாயகியைக் கவர செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் கூட). நாங்களும் செய்வோம்லே… என்று சொல்லும் அளவுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது எனக்கும்.

ஒரு வாலிபனும் வாலிபியும் ஆஃபீசுக்கு வந்தார்கள். கையில் தயாராய் வைத்திருந்த பயோடேட்டாவுடன் கூடிய ஃபைலும் தந்தார்கள். வேலை ஏதும் இருந்தால் கொடுங்கள் என்று வேண்டினர். அரசுத்துறையில் இப்படி எல்லாம் வேலை தருவது கிடையாது என்று ஒரு வார்த்தையில் சொல்லி அனுப்பி இருக்கலாம். நாமளும் கதாநாயகன் ஆக ஒரு சான்ஸாக இதெ பயன் படுத்திகிட்டோம். (கவனிக்கவும் பக்கத்திலெ எந்த கதாநாயகியும் கிடையாது) உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டேன். சாஃப்வேர் தெரியும் என்றார்கள். (நாம இருப்பதோ ஒரு சிவில் எஞ்ஜினியரிங் தொடர்பான துறை). அப்புறம் எப்படியோ, ஒரு சிக்கலான அரசுப் பிரச்சினையினைக் கொடுத்து, இதனை உங்கள் சாப்ட்வேர் அறிவு கொண்டு தீர்வு செய்து கொடுங்கள். உங்கள் லேப்டாப் வைத்து வேலை செய்யலாம். வேலைக்கு தக்க வருமானம் கிடைக்கும். இது மட்டும் நல்ல முறையில் செஞ்ஜிட்டீங்க, அப்புறம் பல ஆட்களுக்கு நீங்களே வேலை போட்டுத் தரலாம். என்ன தயாரா?

ஒரு நிமிடம் யோசித்தார். சரி என்றார். (நானே ஒரு ஹீரோ ஆன மாதிரி மனசுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது). ஒரு மணி நேரம் செலவு செய்து ஃப்ளோ சார்ட், நம்ம தேவைகள் இப்படி அவர்களுக்கு புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் வந்து சந்திப்பதாய் நம்பிக்கையோடு போனார்கள். போனவன் போனாண்டி தான். அந்த ஒரு வாரம் இன்னும் ஆகவே இல்லை. நாம ஒரு வேளை ரொம்ப அதிகமா எதிர்பாத்துட்டோமோ! ம்…ஹீரோ ஆகும் கனவு ஜீரோ வாட் பல்ப் மாதிரி ஆகிப் போச்சு.

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு கீழே வேலை செய்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா?  நாம என்ன நெனைக்கிறோமோ, அதெ மொகத்தெப் பாத்தே அடையாளம் கண்டுபிடிச்சி, அதெ ஜீரோ எர்ரர் மாதிரி எந்த தப்பும் இல்லாமெ, மனசாலெ ஒத்துப் போய் வேலை செய்யணும், அதுவும் நமக்கு வாய்த்த அடிமைகள் அம்புட்டு பேருமே அப்படி இருக்கணும். சர்ர்ர்ர்ர் என்று ஒரு சத்தம். பாத்தா அங்கே கம்பர்…

கம்பர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். என்ன கிமூ…. உனக்கு அப்படி ஊழியர்கள் கெடெச்சாங்களா?

நான்: வணக்கம் கம்பரே. நான் எங்கே கெடைசதுன்னேன்? கெடெச்சா நல்லா இருக்கும்.

கம்பர்: இந்த பரமக்குடிக்காரங்க கமல் மாதிரி பேசுறதெ நம்மாலெயே வெளக்கம் சொல்ல முடியாது. ஆனா நம்ம உருக்காட்டு படலம் படி. அப்பொ புரியும்.

கம்பர் மறைந்து போனார்.

உங்களையும் சுந்தர காண்டத்தின் உருக்காட்டு படலத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்…(ங்..ங்…என்ன நைஸா நழுவுறீங்க.. சந்தானம், அது இதுன்னு சொல்றப்பொ எல்லாம் இருந்தீக… இருங்க செத்த நேரம் தான்). சீதையிடம் அனுமன் சொல்கின்ற காட்சி. ராமன் ஒரு நிறுவனத்தின் தலைவர்ன்னு வச்சிக்குங்க. அனுமன் தான் ஜீ எம். தன்னோட எம்ப்ளாயீ வானரங்கள் பத்தி சீதையிடம் விளக்கும் இடம் அது.

ஒலகத்தையே கையிலெ எடுக்கும் திறமை (கொஞ்சம் ஓவரா பில்டப் இருக்கோ?) காலெ வச்சி ஒரு தம்பிடிச்சா கடலையே தாண்டுவாய்ங்க ஒவ்வொருத்தரும். நிமிந்து நின்னாலே வானமே வசப்படும் எம்ப்ளாயீ ஸ்ட்ரெந்த் 70 வெள்ளம். அடெ… அப்புறம் நான் எப்படி நெனெச்சேனோ அப்படியே அனுமனும் சொல்றாரே.. அட… அடடெ… ஒரு வேளை அந்தக் குரங்கு புத்தி கொஞ்சம் வந்திருக்குமோ?

வீட்டுக்கு வந்து விவரித்தேன். ”நான் நெனைகிற மாதிரி, நீங்களே இருக்க மாட்டேங்கிறீங்க… உங்களுக்கு இதெல்லாம் தேவையா?” இப்படி பாட்டு வந்தது. எதுக்கு வம்பு?. பேசாமெ கம்பர் பாட்டு போட்டு ஒதுங்கிக்கிடுவோம்.

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனித்தனி கடக்கும் தாள
குழுவின் உம் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழுஇல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட.

எப்படி? உங்களுக்கும் இப்படி ஏதும் நெனெப்பு இருக்கா என்ன?

One thought on “நாமளும் செய்வோம்லெ….

  1. chittanandam vontivillu says:

    I was thinking of writing to you as I have not received any article since long. Before I started writing, I got your latest one. Good.

    Thanks and regards,

    Chittanandam

    Sent from Yahoo Mail on Android

    From:”அந்தமான் தமிழ் நெஞ்சன்” Date:Tue, 4 Aug, 2015 at 6:16 pm Subject:[New post] நாமளும் செய்வோம்லெ….

    Tamil Nenjan posted: “பழமொழி சொல்பவர்களை ‘பழமையான மனிதர்கள்’ என்று இன்றைய நவீன இளைஞர்கள் முகம் சுழித்து ஒதுக்குவதை கவனித்திருக்கிறீர்களா? இதே போல் தலைசீவுவது, பவுடர் போடுவது (பாடி ஸ்பிரே அடிப்பது இதில் அடங்காது), தலைக்கு எண்ணெய் வைப்பது, முழுக்கை சட்டை போடுவது இப்படி எல்லாமே இ”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s