உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…


images 1

நம்ம வாழ்க்கையில் ஏன் தினமும் ஏதாவது பிரச்சினைகள் வந்திட்டே இருக்கு? இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா? இப்படி வடிவேல் டயலாக் போல் புலம்புவர் பலர் இருப்பார்கள். [இப்படி எல்லாரும் இல்லையே என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் மனதுக்குள்ளாவது இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள். அம்புட்டு தான் வித்தியாசம்) இதுக்கு ஆதாரமான காரணம் தேடினா, நாம பிறந்ததே ஒரு பிரச்சினையின் முடிவில் தான். ஆயிரக்கணக்கான விந்துக்கள் போராடி, ஒன்று மட்டும் ஜெயிச்சி அதனால உருவான நாம,…. நமக்கு ஒரு சிக்கலும் இல்லாமெ கெடைக்கனும், நாம அக்கடான்னு கெடெக்கணும்னா என்ன வெளெயாட்டா?

அப்பொ அந்த ஒரு விந்து மட்டும் சவால் விட்டு (அல்லது விடாமலோ) முட்டி மோதி ஜெயிச்சி, நாமளா மாற வச்சிடுச்சி. அப்பொ நாம மட்டும் சவால் வந்தா ஏன் தொங்கிப்போகணும்? சவாலே சமாளி.. இது ஒரு ஆதி காலத்துப் பாடல். சவால்கள் வரத்தான் செய்யும் அதனைச் சமாளிக்க வேணும் என்று பால பாடம் நடத்திய பாடல் அது. இப்பொ வரும் பாடல்களான தண்டாமாரி ஊதிரி பீச்சிகினே நீ நாறி பாடலில் இப்படி ஏதாவது மெஸேஜ் இருந்தா கொஞ்சம் ஒரு வார்த்தெ எழுதுங்களேன்.

பொதுவான பலர் செய்யாத ஒன்றினை, சிலர் மட்டும் செய்யத் துணிவது தான் சவால்களின் ஆதாரம். அந்தமானில் சமீபத்தில் அந்தமானில் தமிழக் சாதனையாளர்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அரையடி நீளமுள்ள இரண்டு ஆணிகளை மூக்கினுள் செலுத்திக் கொண்டு பந்து விளையாட்டு காட்டினார் ஒரு தமிழக சாதனையாளர். பார்ப்போர் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டது தான் நடந்தது. நான் பார்வையாளர்களின் ரியாக்சன் பாத்துக் கொண்டிருந்ததால் தப்பித்தேன்.

நம்மால் இதெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது தானே இதன் உள் அர்த்தம்? [நாம இப்படி காமா ஸோமா என்று எதையாவது எழுதிட்டு, அப்புறம் நைஸா கம்பரைக் கொண்டு வருவதும் ஒரு வகையில் சவாலில் தான் சேத்தி என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீக?]

images 2

பெரும்பாலும் சவால்கள் டிசப்பர் மாதம் 31ம் தேதி இரவு 12 மணிக்கு உதயமாகும். இனி இதை செய்வதற்கும், இதனைச் செய்யாததுக்குமான சவால்கள் பிறக்கும் தினம் அது. அது நடைமுறைக்கு வந்ததா என்று உறுதியாய் அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். அடுத்த ஆண்டும் அதே சவால் தொடர்ந்தால், அந்தச் சவால் அம்பேல் என்று புரிஞ்சிக்கலாம். பல நபர்களுக்கு மத்தியில் வீசப்படும் சவாலுக்கு பவர் அதிகம். செய்து காட்டினால் பெருமையாய் அவர்கள் முன் வலம் வரலாம். தவறிட்டா அவங்க்க கிட்டெ நல்லா வாங்கிக் கட்டிக்கணும்.

இதெல்லாம் தேவையா? என்று பலர் தனக்குள் சவால் விட்டுக் கொள்கின்றனர். சொல்லப்போனா, பகிரங்க சவால்களை விட இந்த தனி நபர் சவால்கள் தான் வெற்றி பெறுகின்றன. அல்லது வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இப்படி மனதுக்குள் சவால் விட்டவர்கள் தான். ஆனால் சவால் விட்டதில் ஜெயித்தும் அதற்கான சன்மானம் கிடைக்கவில்லையெனில் மானமே போன மாதிரி இருக்கும்.

images 3

இப்படித்தாங்க 1980களில் வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்த சமயம்.  அதில் ‘ராசாத்தி ஒன்னெ காணாதெ நெஞ்சு’ பாடல் வருமே, அதை பாடமுடியுமா என ஒரு சவால் வந்தது. 5 ரூபாய் பந்தயமும் ஒப்புதல் ஆனது.  ரொம்ப கஷ்டப்பட்டு, பாட்டுப் புத்தகம் எல்லாம் வாங்கி, பாடி முடித்தேன். 5 ரூபாய தர வேண்டிய நண்பரோ, இது அவ்வளவு சிரமமான பாட்டு இல்லை போலிருக்கு என்று ஜகா வாங்கிட்டார். (அவரு இப்பொ ஃபேஸ்புக்கில் இருக்கார். இதெப் படிச்சிட்டு அந்த அஞ்ச்சி ரூபாயெ வட்டியோட தருவாரா? பாக்கலாம்).

download4
பழைய கால கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் சவால் விட்டு, பாக்கலாமா? சவாலா? என்று சொல்லி இடைவேளை விடுவார்கள். கையில் முறுக்கு அல்லது குச்சி ஐஸ் வைத்து மக்கள் சவால் பத்தி பேசுவதை வேடிக்கை பாப்போம். பேச்சு சுவாரஸ்யத்தில் சிலசமயம் ஐஸ் கூட கீழே விழுந்திருக்கும். அவர்கள் சொன்னபடியே கதை வந்திருந்தால் அவர்கள் நடையே வேறு மாதிரி இருக்கும்.

20150517_205718-1 (2)

சமீபத்தில் முனைவர் குறிஞ்சி வேந்தன் அந்தமான் வந்தபோது இப்படி சவால் விடும் சம்பவம் நடந்தது. ரொம்ப சீரியஸா என்னமோ ஏதோன்னு நெனெச்சிட வேண்டாம். [நாம சந்தானம் மாதிரி.. நமக்கு அந்த சீரியஸ் சுட்டுப் போட்டாலும் வராது] அவருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தோம். அவரின் சிறு மகள் சித்ரபாரதி [என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்? இன்னொரு மகள் பெயர் திருப்பாவை] டேபிளில் வைத்திருக்கும் ஃபோர்க் கரண்டி வைத்து சண்டைக்கு அழைத்தாள். விடுவோமா என்ன? நானும் கரண்டியை எடுத்து மல்லுக்கு நின்றேன். [இதுக்குப் பேர் தான் உங்க ஊரிலெ சண்டையா? என்று யாரும் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம்]

வழக்கமாய் நான் தான் தோற்றேன். [குழந்தைக்காய் விட்டுக் கொடுத்தேன்] சவாலில் ஜெயித்த சந்தோஷத்தில் எனது கரண்டியை சூறையாடினாள். யாரும் எதிர் பாக்காத வகையில் தன்னுடைய கரண்டியை எனக்குத் தந்து விட்டாள். [புள்ளையெ ரொம்ப நல்லாவே வளத்துருக்காங்க்க இல்லெ!!) விவேக் ஒரு படத்தில் நாங்கள்ல்லாம் இந்த மாதிரி எத்தனை படத்தில் பாத்திருக்கோம்னு சொல்ற மாதிரி, நாமும் தான் இப்படி எழுதி இருக்கோமே என்று கம்பரிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. தொடர்ந்து பாடல் வரிகளும் தந்தார் கம்பர்.

images5

அசோக வனத்தில் சோகமே உருவாய் சீதை அமர்ந்த போது ஆறுதல் சொல்லும் முகமாய் ஒரு மாதத்தில் வருவதாய் சொல்கிறார் அனுமன். இல்லை இல்லை..சவால் விடுகிறார். அப்படி வரவில்லையென்றால், என் பேரை மாத்திக்கிறேங்கிற வெட்டி வீரப்பு எல்லாம் இல்லெ. பெரிய சவாலா சொல்றார். அந்த இராவணனையே இராமன் ஆக்கி விடுவாராமாம். சீதைப்பிராட்டிக்கு இராமன் தானே வேணும்? ஒரு ஃப்ளோவில் சொல்லிட்டார் கம்பர். அப்புறம் தான் யோசிக்கிறார். ஐயயோ, இந்த அவதார நோக்கமே, இராவணன் வதம் தானே? இராவணனே இல்லாட்டி ஏது வதம்? இப்படி யோசிச்சி அப்படியே ஒரு அடுத்த பிட் போட்றார் நம்ம கம்பர். இராமனை இராவணன் ஆக்கிடுவேன் என்று. நாம் ஹோட்டலில் வெளையாடின சின்னப் புள்ளைத்தனமான வெளையாட்டா இல்லெ?

இதோ அந்த சின்னப்புள்ளெத் தனமான பாட்டு:

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு அரு நெடுஞ்ச் சிறை மீட்கிலான் எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன்.

குரா பூக்கள் வாடகை தராமல் குடி இருக்க வைத்திருக்கும் கூந்தலை உடையவேளே (சீதை அன்னையே)! நீ குறிப்பிட்ட ஒரு மாதத்தில்  சிறையிலிருந்து மீட்காவிட்டால் பரவி வரும் பழியும் பாவமும்  தொடர்வதற்க்கு அந்த இராவணனை இராமன் ஆக்கிடுவேன். அப்படியே இராமனை இராவணன் ஆக்கிடுவானாம் அனுமன். இது எப்படி இருக்கு? ரொம்ப சின்னப்புள்ளெத்தனமா இல்லெ?

தொடர்ந்து இன்னும் பார்ப்போம்….

6 thoughts on “உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…

  1. ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதிக் கிட்டே வாங்க.

    • Tamil Nenjan says:

      மிக்க நன்றி…அழகியினை பயன்படுத்தி மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன்.

  2. அழகான வளர்ப்பு…!

    இனிமையான தமிழ்ப் பெயர்கள்…

  3. nallathambi jeyaraman says:

    நல்ல சவால்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s