தந்தை சொல் மிக்க தந்திரமில்லை


large_89622

”அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க” என்ற சொல் வழக்கு இருக்கு. இது என்னவோ ஒரு பக்கம் பாத்தா அடிக்கு அடித்தளம் போடும் பேச்சு வழக்கா தெரிஞ்சாலும் கூட, ஏதோ அண்ணன் தம்பிகள் கூட உதவாத செய்தி தான் பெரிசா படுது எனக்கு. அடியாத மாடு படியாது என்றும் சொல்லுவாக. அப்பொ அண்ணன் தம்பிக மாட்டெ விட கேவலமா பாக்கிறாகளா அன்பர்களே! நண்பர்களே… அது சரி…இப்பொ எதுக்கு இந்த ஆராய்ச்சின்னு கேக்கீகளா? இருங்க.. இருங்க.. சொல்லத்தானே போறேன்…

அஞ்சில் வளையாதது அம்பதில் வளையாது என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அஞ்சி வயசில் வாங்கிய அடி அம்பது தாண்டினாலும் மறக்காம வச்சிருக்கு. இந்தக் கதெ தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன். ஆமா… கதெ கேட்டு கதெ கேட்டு வளந்த நாடு நம்ம நாடுங்கிறது பழங்கதையா போச்சு. இப்பொல்லாம், வாட்ஸ் அப்பில் ஜோக் படிச்சி ஜோக் படிச்சி வளந்த நாடுன்னு சொல்ல்லாம் போலெ. இளமையில் கல் என்பது எனக்கு இளமையில் பட்ட அடி மாதிரி பசு மரத்து ஆணி மாதிரி.. (சின்ன வய்சிலெ படிச்சதெல்லாம் ஞாபகம் வருதா என்ன?) முதுகுலெ பதிஞ்சு போச்சி.

சின்ன வயசிலெ விளையாடாத நபர்கள் யாராவது இருப்பாகளா என்ன? என்ன… இப்பொ இருக்கிற மாதிரி பிளே ஸ்டேஷன் 3, கம்ப்யூட்டர் கேம்கள் மாதிரி இல்லை நம்ம விளையாடின கேம்கள். எதையாவது சாக்கு வச்சி, எங்கிருந்தாவது எங்கினயாவது ஓடனும். வேத்து விறுவிறுக்கும். அதையும் மூக்கையும் ஒன்னாவே சேத்து அப்பப்பொ நாம சட்டைக்கு பண்டமாற்றம் செய்வோம். அந்த வெளெயாட்டு ரூட்லெ என்னோட அப்பா உக்காந்திருந்தார். ஏதோ எண்ணெயெ தலையில் தேய்க்க உக்காந்திருந்த மாதிரி பின்னாடி தான் வெளங்கிச்சி. (அங்கெனெயா உக்காந்திருந்தார்? இப்படி விவேக் மாதிரி கேள்வி எல்லாம் வேண்டாமெ!) போற வேகத்தில் கையையும் எண்ணெயையும் ஒரு சேர தள்ளிவிட்டு ஓட…சாரி… நிக்க, விழுந்தது முதுகில் ஒரு தரும(மில்லா) அடி. சுருண்டு விட்டேன்.

அந்த அன்னெக்கி விழுந்த ஒரு அடியில் நான் என் அப்பாவிடமிருந்து பல ‘அடி’கள், இல்லை இல்லை பல கிலோ மீட்டர்கள் விலகிப் போய்விட்டேன். அரசுத்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாய் மனு அனுப்புவது மாதிரி அம்மாவிடம் ’துரூ ப்ராப்பர் சேனலில்’ பேசும் ஆளாக மாறிவிட்டேன். அதை என் அப்பாவும், ஏதோ தன் மேல் இருக்கிற மரியாதை என்றே நினைத்து மகிழ்ந்ததும் அவ்வப்போது தெரிந்தது. ஆனா நமக்குத்தானே அந்த ’புறமுதுகு’ சமாச்சாரம் தெரியும்?

காலங்கள் உருண்டன. ஒருமுறை ஆஸ்பத்திரியில் நான் படுத்துக் கிடக்க, எனக்கு சேவை செய்ய வேறு வழியே இல்லாமல் அப்பா.. அப்போது தான் தன் பழைய கதைகளும், ’பாசக்கார அப்பா’வின் உண்மை சொரூபமும் தெரியத் தெரிய.. ”அடடா..அடடா…. இந்த அப்பாவையா அந்த ஒரு அடி இவ்வளவு தூரம் பிரித்து விட்டது?” என்று யோசிக்க வைத்தது. அவர் கஷ்டப்பட்டது முழுதும், நான் அப்படி எங்கும் அடிபடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தானே? காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. நான் இப்போது அந்தமானில் சுகமாய் வாழும் போது அதை முழுதும் பார்த்து மகிழ அவர் கொடுத்து வைக்கவில்லை.

சரி… இறந்த பிறகு செய்யும் சடங்குகள் செய்யலாம் என்றால், அந்தமானில் அதுக்கும் வழியில்லை. குறிப்பிட்ட சமூக வழக்கங்களுக்கு மட்டும் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். தேதி பற்றி தகவல் சொல்லும் பரமக்குடி ஐயரே, ’அந்தமானுக்கு வரட்டுமா?’ என்றார் பொறுப்பாக. அன்று விஜய் மல்லய்யாவும், இன்று ஸ்பைஷ் ஜெட்டும் கை விரிக்க டிக்கெட் விலையும் ஆகாய விமானம் போல் ஆகாயத்தை தொடும் அளவுக்கு இருக்கு. எப்படியோ இல்லாளுக்குத் தெரிந்த மந்திரங்களோடு, அந்தமான் தீவின் பீச்களை அதிகமாய் மாசு படுத்தாமல் ஒரு முழுக்கு போட்டு அப்பாவை நினைவு கூர்ந்தேன்..

அப்பாவை இப்படி அப்பாவியா தப்பா நெனைச்சேனே என்ற வேதனை உள்ளூர வரத்தான் செய்தது.

ஆறுதல் கூற வந்தார் கம்பர். “வாழ்க்கையிலெ இதெல்லாம் சகஜமப்பா…”

”வணக்கம் கம்பரே… அப்பொ, ராமாயணத்திலெயும் இப்படி ஏதாவது கீதா சாமீ?”

”ஏன் இல்லை? அந்த இளவல் இலக்குவனே, கண்ணாபின்னான்னு திட்டியிருக்கானே… ” – இது கம்பர்.

கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்.

கம்பர் கனவில் விவரம் சொன்னதை உங்களுக்கு விளக்கமா சொல்றேன் இப்பொ…

அப்பா புள்ளெக்கு இடையில் நடக்கும் கோபத்தின் வெளிப்பாடு. களம்: இராமன் காடு செல்லத் தயாராய் இருக்கும் நேரம். செய்தி அறிந்த இலக்குவன் கோபமாய் கொந்தளித்தானாம். ”என் கண் எதிக்கவே நாட்டெ கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அப்புறம் பெப்பே சொன்னா அது கொடுமையான் அரசன் செயல் தானே? அப்புடி நம்மாலெ இருக்க முடியாது நீங்க காட்டுக்கு போக, நானு துன்பத்தோடு இங்கேயே கிடக்க… ” இப்படி வருது இலக்குவன் வாயிலாக.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன?

அப்படியே விதியேன்னு பாட்டையும் லேசா படிங்க பார்க்கலாம்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என்கட்புலமுன் உனக்கு ஏஎந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான்.

மீண்டும் வருவேன்.

4 thoughts on “தந்தை சொல் மிக்க தந்திரமில்லை

  1. ranjani135 says:

    இன்றைய வலைச்சரத்தில் (blogintamil.blogspot.in) உங்களின் வலைத்தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்

    • Tamil Nenjan says:

      உங்கள் பதிவு ஸ்பாமில் இருந்ததால் உடனடியாக பார்க்க இயலவில்லை. பகிர்வுக்கு நன்றி.

  2. […] தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s