ஹிந்தியும் நானும்


Abi 1

அபியும் நானும் படத்தெ எல்லாரும் ரசித்துப் பாத்திருப்பீங்க. அந்தப்படம் ஏன் பிடிச்சிருக்கு? ன்னு கேட்டா, ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொல்லுவீங்க. ஆனா, எனக்கு என்னவோ, அந்தப் படத்தோட பெயரே ரொம்பப் பிடிச்சிப் போச்சி.. (இம்புட்டு நாள் கழிச்சி எழுதுறதுக்கும் ஆச்சி). அந்தப் பட டைட்டில் என்னை பள்ளிக்கூட நாட்களுக்குக் கூட்டிப் போயிடுச்சி. ஆறாவது வகுப்பில் பரமக்குடி பள்ளியில் பி என் நாகநாதன் அவர்கள் நடத்திய பாடத்தை நினைவு படுத்திடுச்சி அந்தப் பட டைட்டில். ஆங்கிலத்தில் அபியும் நானும் மாதிரி சொல்வதானால் எப்பொவுமே Abi & I என்று தான் சொல்லணுமாம். I and Abi என்று சொல்லக் கூடாதாம். ஆனால் தமிழில் அந்தச் சிக்கலே கிடையாது. நானும் அவனும், அவனும் நானும் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

abi 2

இப்பொ அந்த ஹிந்தியும் நானும் டாபிகுக்கு வரலாம். தமிழ் நாட்டுக்கும் ஹிந்திக்கும் தான் ஏழாம் பொருத்தம் இருகிறது உலகத்துக்கே தெரிஞ்ச கதை தானே? சமீபத்திலெ மங்கல்யான் வெற்றியினை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்க, டீவியிலெ நாமெல்லாம் மயில்சாமி அன்னாதுரையத் தேடிக் கொண்டிருக்க, காமெடி நடிகர் மயில்சாமியோடு சூரிய வணக்கத்தில் பேசிக் கொண்டிருந்தனர் சன் குழுமத்தினர். அதெப்படி படிக்கத் தெரியாமல் வெளிநாடு எல்லாம் போய் கஷ்டமாயில்லையா என்று கேட்டனர். ஒரு வெளிநாட்டில், இங்கிலீஸ் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டாராம். காமெடி நடிகர் சீரியஸாக, எனக்கு தெரியாவிட்டாலும் என் மகன்களை ”இங்கிலீஸ் படிங்க.. ஹிந்தி படிங்க” என்று சொல்லி அவர்களும் நல்லா படிச்சி நல்லா இருக்காங்க என்றார். ஹிந்தி எதிர்ப்பு சேனல்களில் இப்படி ஹிந்தி ஆதரவு செய்தி வருவது வித்யாசமாய்ப் பட்டது.

இப்படித்தான் என் அப்பாவும் ஒரு தடவை ராமேஷ்வரம் போய் வரும் போது முழுக்க ஹிந்திக் காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டு தடுமாற, நான் வம்பாய் ப்ராத்மிக் மத்யமா என்று ஹிந்தி படிக்கத் திணிக்கப் பட்டேன். அறம் செய விரும்பு என்பதற்கே கோணார் உரை தேடும் அந்தக் காலத்தில் வம்படியாய் ஹிந்தி படிப்பது சிரமமாய் தான் பட்ட்து. பின்னே சும்மாவா பரமக்குடி சின்னக் கடை பஜார் முதல் ஆத்துப்பாலம் வரை அஞ்சு கிமீ போய் வர வேண்டுமே?). அப்பா மீதும் வம்பாய் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா…” என்று சொல்லிக் கொடுத்த ஹிந்தி வாத்தியார் மீதும் புரியாமலேயே கோபம் தான் வந்தது.

abi 3

அப்படியே நானும் BE படித்து முடித்து வேலைக்கு மனு போடும் போது கவனமாய் ஹிந்தி பேசும் இடங்களுக்கு அப்ளிகேஷன் போடுவதைத் தவிர்த்து வந்தேன். சிவில் படிப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும்… ஹிந்தி ஒழுங்காய் படிக்காத காரணத்தால் இப்படி ஹிந்தி பெல்ட் இடங்களுக்கு அப்ளிகேஷன் கூட போட முடியாமல் இருந்தது. கால ஓட்டத்தில் அந்தமானில் ஹிந்தி பேச வேண்டி இருக்கும் என்ற உண்மை தெரியாமலேயே வந்து சேர்ந்தேன்.

அந்தமானில் வந்து இறங்கியவுடன் இங்கு வாழும் தமிழர்கள் அத்தனை பேரும் ஹிந்தியில் பேசித் தள்ளுவதைப் பாத்தா நமக்குத் தலை சுத்த ஆரம்பித்த்து. ஹிந்தி தெரியாத காரணத்தால் சில இளம் பெண்களிடம் சகஜமாய் பேச முடியாத சங்கடம் வேறு மானத்தை வாங்கியது. (தோதாக அப்போது தான் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சில இளைஞிகளும் இருந்தனர். ஹிந்தியில் சந்தேகம் என்று சொல்லி கடலை போடவும் முடிந்தது. ஹிந்தி பேச ஒரு பெங்காலி நண்பர் சொன்ன ரெண்டு டிப்ஸ்… 1. அடுத்தவன் சிரிப்பதை பொருட்படுத்தாமல் பேச வேண்டும். 2. தெரியாத வார்த்தைக்கு ஓ போட்டு சமாளிக்கணும். [அம்மாவுக்கு சங்கடம் வரும் போது உதவும் ஓ மாதிரி]

நான் ஹிந்தி பேச ஆரம்பித்தாலே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுவர். கவலைப்படாமல் தொடர்ந்தேன். இந்த ஓ விதியும் கொஞ்சம் பாக்கலாமே.. கடப்பாறையைக் கையில் எடுத்து கல்லின் கீழே வைத்து கல்லை இங்கிருந்து அந்த இடத்திற்கு தள்ளு என்று ஹிந்தியில் சொல்ல வேண்டும். ஒ ஹாத் மே லேகர் ஓ நீசே ஓ கரோ ஓ சே ஓ மே ஓ கரோ.. இப்படி முதலில் சொல்லி அப்புறம் வார்த்தை வளர வளர போட்டு நிரப்பும் வித்தை காலப் போக்கில் வர ஆரம்பித்தது.

ஆண்டுகள் கடந்தன. மற்றவர்களின் ஹிந்தி சுமாராய் இருப்பதால் என் ஹிந்தி நல்ல ஹிந்தி என்று சொல்லப்பட, ரேடியோ, தூர்தர்சனிலும் தொடர்கிறது என் ஹிந்திப் பயணம். அந்தமானில் டாலிக் எனப்படும் TOLIC – Town Official Language Implementation Committee க்கு செயளர் ஆகி மலர் வெளியிடும் அளவுக்கு வந்துட்டேன். தற்போது லட்சத்தீவுகளின் டாலிக் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பும் இருக்கிறது. (நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? அல்லது பேய்க்கு வாழ்க்கைப் பட்டா புளிய மரத்துக்கு ஏறப் பயந்தா எப்படி? எப்படி வேணும்னாலும் நெனெச்சுக்குங்க)

போன வாரம் லீவில் பேங்களூர் சுத்திக் கொண்டிருக்கும் போது தில்லியிலிருந்து (ரெண்டு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும்) ஒரு (திருமதி) செயலர் வருவதாகவும், ஹிந்தி வேலையை ஆய்வு செய்யவே வருவதாகவும் செய்தி வர, என் லீவுக்கு வந்தது வேட்டு. என் ஹிந்தியும், என சக ஊழியர்களின் துல்லியமான உச்சரிப்பும் அவருக்கு பிடித்துவிட நாங்கள் அவருக்காய் வழங்கிய பொக்கேக்களை அதான் பூச்செண்டுகளை, நம் துறை ஊழியர்களுக்கே வழங்கி கௌரவித்தமை பெருமையாகவே இருந்தது.

கம்பர் இறங்கி வந்தார். ”நல்லா மாட்டிக்கிட்டெ… இந்த டாபிக்லெ எப்படி இராமாயணம் கொண்டு வருவே?” கிண்டலாய்க் கேட்டார்.

இங்கே சொல்றதுக்கு முன்னே அங்கே அவர்களிடமே சொல்லிட்டேனே… இது நான்.

என்னப்பா வம்பா ஏதாவது சொல்லி வச்சியா?? – கம்பர் கேள்வியில் வருத்தம் தெரிந்தது.

தொடர்ந்தேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயனே… கொச்சியில் இருந்து அகத்தி தீவுக்கு விமானம் ஏறி, அப்புறம் கவரத்தி தீவுக்கு ஹெலிகாப்டரிலும் பயணம் செய்த அந்த பொக்கே என்ற பூங்கொத்து அவ்வளவு விரைவாக நம் கைக்கே திரும்பி வந்தது சுக்ரீவனைப் பாக்கப்போன இலக்குவன் வேகமா போனமாதிரி வேகமா வந்திடுச்சே என்றே செயலரிடம். வாவ் என்று ஒரு ஆச்சரியம் வந்தது..

நீங்களும் கிட்கிந்தா காண்டத்து கிட்கிந்தைப் படலத்தில் வரும் அதெப் படிச்சா ஒரு வாரே…வா சொல்லிட மாட்டீங்க.. ?? (அந்த அல்ப சந்தோஷத்துக்குத்தானே இம்புட்டு எழுதுறது)

வாலியின் வலிமையான தம்பி சுக்ரீவனைப் பாக்க, மனுகுல திலகமான இராமன் தம்பி இலக்குவன் கிளம்புகிறான். சுட்டுப் பொசுக்கும் காட்டில், வானையே தொட்டு நிற்கும் ஏழு மராமரங்களைப் போகும் வேகத்தில் அப்படியே தள்ளிட்டுப் போறதெப் பாக்கறச்செ, ஏழு மரங்களெத் தொளச்சிட்டுப் போன இராமபாணம் மாதிரியே போனானாம். எப்புடீடீடீ???

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயு மராமரத் தூடுசெல்
அம்பு போன்றன னன்றடல் வாலிதன்
தம்பி மேற்செலு மானவன் தம்பியே

வேகம் பற்றி சொல்ல கம்பன் யூஸ் செய்ததை சந்தடி சாக்கில் நானும் யூஸ் செய்திட்டேன். தப்புங்களா என்ன??

ஆஸ்திரேலியா நண்பர் அன்பு ஜெயா அவர்கள் கவனத்திற்கு… உவமையணியும் உயர்வு நவிற்சி அணியும் ஒரே பாட்டில் இருக்காம்… உங்களுக்குத் தெரியாததா??

வேறு அவல் கெடச்சா மெல்ல வர்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s