அந்தமான் தினசரியான ”தி டெய்லி டெலிகிராமில்” (இது தானுங்க இந்த ஊரு தினத்தந்தி) அடிக்கடி இன்று Dry Day என்று அறிவிப்பு தருவார்கள். மது விற்பனை மற்றும் மதுவிடுதிகளுக்கு அன்று விடுமுறை என்று அறிவிக்கின்றனர் இப்படி. சாதாரணமாக Dry Fruits என்றால் உலர்ந்த கனிகள் என்று சொல்லும் அந்த வார்த்தைப் பிரயோகத்தை, மதுவில்லா நாளைக் குறிப்பிடும் போது சொல்வது லேசாக நெருடலாய் இருக்கிறது. மது இல்லை என்றால் அன்றைய தினமே ஏதோ வறண்ட பாலைவனமாய் ஆகிவிடுமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது அந்த சொல்லாடல். ஹிந்தி தெரியாத நம்மைப் போன்ற (பெரும்பாலான தமிழக மக்கள் உள்ளிட்ட) பலரை முன்பு அஹிந்திபாஷி என்று சொல்லி வந்தனர், ஹிந்தி அறிந்தோர். இப்போது அதனை ஹிந்தி அறியாதோர் என்று சொல்லும் படியாக மாற்றிக் கொண்டனர். இதே போல் மதுவில்லா நாள் என்றும் இந்த Dry Dayக்குப் பதிலாக மாற்றம் செய்தால் நல்லது.
அது சரி…. இப்படி பெயரை மாற்றுவதால் என்ன ஆகப் போகுது? என்ற கேள்விக்கு பதில் தேடும் முன்னர், இப்படி அந்த தினங்களால் என்ன லாபம்? என்ற கேள்வியினைக் கேட்டுப் பார்க்கலாம். நாட்டின் நல்ல குடிமகன்களுக்கு, எப்போதெல்லம் கடை திறப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரியும். மற்றவர்களுக்கோ, திடீரென்று உற்சாகபானக் கடைகளில் கூட்டம் மிகுந்திருந்தால், ஏதோ அரசியல் கட்சி மாநாடு நடப்பதோ, திருவிழா நெருங்குவதோ அல்லது அடுத்து ஏதோ மதுவில்லா Dry Day வருவதாய் அறிவர்.
காந்தி ஜெயந்தியன்று மக்களை குடியின் பிடியினின்று மீட்டெடுக்கும் கனவு, அரசின் திட்டமாய் Dry Day தத்துவம் சொல்கிறது. ஆனால், எந்த ஊரு குடிமகனும், எதையும் பிளான் செய்யாமெ பண்ணா இப்படித்தான் என்று சொல்லி வைத்தார் போல், அட்வான்ஸ் பிளானிங் செய்து அசத்துவது தான் ஆச்சரியமாய் இருக்குங்க… அப்பொ பேசாமெ அட்வான்ஸ் பிளானிங் தினம் என்று அதுக்கு முன்பான நாளையும் அறிவிச்சிடலாமோ?? குடிமகன் மேல் இப்படிக் கூட அக்கரைப் படலைன்னா, அப்புறம் எப்படி???
அரசுப் பயணமாய் இலட்சத்தீவுகளுக்கு மாதம் ஒரு முறை பயணம் போவதுண்டு, கேரளா வழியாக. சமீபத்திய கேரள பத்திரிக்கைகளில் பட்டை… சாரி…. சாரி…. கொட்டை எழுத்துக்களில் சமீபத்திய கேரள அரசின் மதுவெட்டு கொள்கை பற்றித் தான் பத்தி பத்தியாய் எழுதி வைத்திருந்தது. பார்களின் தரம் சரி இல்லை என்று இழுத்து முக்கால்வாசி பார்களை மூடுகிறதாம் மூக்கால் பேசும் மழையாள அரசு… ரொம்பத் தைரியமான அரசு தான். [ஆக, தமிழக பார்கள் எல்லாம், ஐ எஸ் ஓ தரம் வாங்கியதாய் இருக்கிறதா? என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்]. பரமக்குடியில் ஏசி பார் வந்து விட்டதாய் முகநூல் படம் தெரிவித்தது. அந்தமானில் அனைத்து பார்களும் நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகின்றன என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி.
அரசுக் கட்டிடங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து சரியாக அடிக்கிறார்களோ இல்லையோ, அந்தமானில் பார்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்தெல்லாம் அடிச்சி சுகாதாரமா வெச்சிருப்பதாய் நண்பர் ஜெயராமன் தெரிவித்தார். அவர் ஏதோ பார்களின் ரெகுலர் கஸ்டமர் என்று கருதிவிட வேண்டாம். பார்கள் தான் இவருடைய கஸ்டமர்கள். பூச்சிகளிடமிருந்து நம்மை ரட்சிப்பதற்காகவே அந்தமானில் அவதாரம் எடுத்திருக்கும் ஜெய ராமர் அவர். மருந்து வயிற்றில் இருக்கும் பூச்சிகளை சரியாக கொல்ல வேண்டும் என்ற அக்கரையுடன் செயல்படும் பார் ஓனர்களைப் பாராட்டத்தான் வேண்டும். அவ்வப்போது சில ஆஸ்ரமங்களுக்கும் உதவி செய்து ஹாட் விற்ற காசும் ஸாப்ட் செய்யும் என்றும் காட்டுகிறார்கள்.
கேரள அரசின் அதிரடி முடிவால் மற்ற மாநில மது விரோதிகளும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். (அந்தமானில் அப்படி ஏதும் இதுவரை எழுந்ததாய்த் தெரியவில்லை) கேரள முதல்வர் முத்தான தன் கருத்தைச் சொல்லி இருக்கின்றார். சாராயத்தினால் வரும் வருமானங்களை விட அதனால் விளையும் கேடுகள் அதிகம் என்று. இலாபம் தான் முக்கியம் என்று ஒவ்வொரு விவசாயியும் யோசித்தால், கஞ்சாப்பயிர் தான் தேசீயப் பயிராக இருக்குமாம். இது நான் சொல்ல்லிங்கோ… வினோபாஜீயே சொல்லியிருக்காங்க. அப்படிப்பாத்தா கடல் கொள்ளையர்கள் மாதிரி தொழில் தொடங்கி இலாபம் பாக்கலாமா? அல்லது வேறு சில நாடுகள் ”தோல்” வியாபாரம் செய்து வருவாய் ஈட்டுவதையும் செய்யுமா பிற நாடுகள்? இது பத்தி மேலும் தகவல் கொடுத்து உங்களை மேலும் கெடுக்க விரும்பலை.
அரசு பார்களை விட்டுத் தள்ளுவோம்…. கம்பர் காலத்தில் பார் டைமிங் சங்கதி ஏதும் தேடலாமா?? கம்பரை ரொம்பவும் ஜாலியா கொண்டு போயிடரீங்க… எதுக்கும் ஒரு லிமிட் இருக்குங்க என்று (மனைவியிடமிருந்து) ஆலோசனை வேறு வந்திட்டிருக்கு. நேரா கம்பர் கிட்டெ அதெக் கேட்டா, நம்மளை தப்பா நெனெச்சிட மாட்டாரு?? அதனாலெ ஸ்கைபில் மடக்கி விசாரித்தேன் அவரிடம்.
ஹாய்… வணக்கம் ஐயா….
கம்பர்: உம்மன் சான்டியையும் நாசூக்கா உமனையும் டச் பன்றப்பவே நெனெச்சேன்…. அடுத்த டார்கெட் நாம தான்னு…
”அப்படி ஏதும் வில்லங்கமான ஐடியாவோட வரலீங்க… சும்மா உங்க கருத்து கேக்கத்தான்…..”
கம்பர்: கருத்து கண்ணாயிரம் மாதிரி, கம்பர் கிட்டெ கருத்து கேக்கிறே…. இந்தா புடி…. ”குஜராத் மாதிரி பாரே இல்லாத ஊரில் குடிக்காமெ இருக்கிற நபரை விட, பாரே நிரம்பி வழியும் அந்தமானில் குடிக்காமெ இருக்கிறவன் பெட்டர்… அதாவது அயோத்தியில் குடிக்காமல் இருக்கும் பரதனை விட, இலங்கையில் குடிதவிர்த்து நிற்கும் வீடணன் மேல்…” இது தான் என் கருத்து…
”அப்படியே…இலங்கையில் பார் டைமிங் பத்தி சொன்னீங்கன்னா……”
கம்பர்: அதானே பாத்தேன்…. என்னடா புள்ளெ… கருத்துலெ கவனமா இருக்கேன்னு பாத்தேன்… சங்கதி இது தானா?
”ஹி..ஹி…ஹி…”
கம்பர்: ஊரெல்லாம் பார் தேடும் படலத்தில் இருக்கிறச்சே, நம்ம பேரும் சேந்து ரிப்பேர் ஆயுடும்… பை…
கம்பர் ஆஃப்லைன் ஆகிவிட்டார். அவர் நேரடியாய் சொல்லாட்டியும் ஊர் தேடு படலம் என்று பொடி வச்சி சொல்லிட்டுப் போயிட்டார்…. கம்பென்டா… நண்பென்டா….
சுந்தர காண்டத்தில் ஊர் தேடு படலத்தின் ஒவ்வொரு பாட்டையும் தேடினேன். (அந்த அனுமன் எதுக்குத் தேட்றாரு? இந்தக் கொரங்கு எதுக்குத் தேடுது??… ம்… எல்லாம் காலக் கொடுமை) நம்மள மாதிரு ஆட்களை படிக்க வைக்க கம்பர் அங்கங்கே சரக்கு வச்சிட்டுப் போயிருக்காறோ?.. சரக்கு என்றவுடன் சிக்கியது பாடல்.
அந்நள்ளிரவில் கள்ளுண்ணும் தொழில்கள்” அடங்கின. (அப்பவே தொழிலாவே இருந்திருக்கே!) பெரிய கடலொளி போல் இலங்கை சிட்டியில் இருந்த சவுண்ட் சிஸ்டம் எல்லாம் ஆஃப் ஆயிடுச்சாம். பாடலும் அடங்கியது. தொழிலாளர்கள் அவங்கங்க ஊட்டுக்குப் போயிட்டாய்ங்க. மூனு டிசைன் பறைகள் அடங்கின. அப்பத்தான் எல்லாரும் தூங்கப் போனாகளாம்…. இது பாட்டோட கோணார் உரை.
ஆமா இதுலெ..பார் டைமிங் எங்கே வருது? சரியான கதை தான் போங்க. அந்தமான்லெ பார் டயம் இரவு 11 மணிவரையாம். கடைசி ஆர்டர் 10.30ல் முடியுமாம். அதே லாஜிக் பாத்தா, நள்ளிரவு 12 மணிக்கு முடிஞ்சது என்றால், 11.30 க்கு கடைசி ஆர்டர் என்று கூடவா புரியாது நமக்கு??
இதோ பாட்டு:
வேரியும் அடங்கின நெடுங் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கியது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியும் அடங்கின தொடங்கியது உறக்கம்.
அடங்கவே மாட்டியா? என்று சொல்கின்ற வரைக்கும் (அப்படிச் சொன்னாலும் கூட) தொடரும்.
Sir!……I love that “KAMBENDA”…….”NANBENDA”……..Solladal!!
க்ற்ர்ுத்த்ுக்க்ு ந்ண் ந்ண்ன்ற்ிThanks for the comments.