சந்தேகம் என்னும் ஒரு சரக்கு


இப்படி ஒரு காலத்தில் பழைய பாட்டு வரும். அரதப் பழசு தான்… (ஆமா..அந்த ”அரத”ங்கிறதுக்கு என்ன மீனிங்கு?-ன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்). அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த சந்தகத்தையும் சரக்கோட ஏன் கோர்த்துச் சொல்றாய்ங்க என்கிறதும் மண்டையெக் கொடெயுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றது? என்று மனதுக்குள் நினைக்கிறேன். “உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” வீட்டுக்காரியும் வினா எழுப்புகிறாள்… ரெண்டுக்கும் பதில் இல்லை…

தண்ணி…. சாப்பிடலாம், குடிக்கலாம், அருந்தலாம், பருகலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம்… எல்லாம் சரி தான். அடிக்கலாம் என்றால் மட்டும் பலர் அடிக்க வருவார்கள், அந்தக்காலத்தில் கம்பு வைத்து. ஆனால் பலர் இக்காலத்தில் ஜாலியாக ஓடி வந்துடுவாங்க கம்பெனி குடுக்க. சந்தேகமும் அப்படி தண்ணி அடிப்பது போன்ற போதை தரும் சமாச்சாரமா? தண்ணியை நாம் அடிக்கலாம். (மெஜாரிட்டி ஆட்களைச் சொல்கிறேன்…மது விரோதிகள் மன்னிக்கவும்) ஆனா… சந்தேகம் நம்மை அடிக்கும்.

சின்ன வயசில் சிறு சிறு திருட்டுகள் செய்வது எல்லாருக்கும் வழக்கம் தானே? மஹாத்மா காந்தியே செய்திருக்கிறார். சரி காந்தி கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம சொந்தக் கதைக்கு வருவோம். ஸ்கூல் படிக்கிறச்செ… குரூப் ஸ்ட்டி படிக்கப் போறோம்னு சொல்லிட்டு நம்ம அப்படியே சினிமாவுக்குப் போயிடுவோம். (தப்பை தடயமில்லாமெ செய்ய சினிமா டிக்கெட் எல்லாம் பொறுப்பா கிழிச்சிப் போட்றுவோம்.. அதெல்லெம்..கரெக்டா செய்வோம்லெ..) கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கிட்டெ அதெ உளறி விடுவேன்… (இப்பொவும் அதே வியாதி தான்… உளறும் இடம் மட்டும் மனைவியா மாறிப் போச்சி.. அம்புட்டு தான்).

நல்லது செய்யும் போது நம்மை அறியாமலேயே சில வில்லங்கங்களும் வந்து சேரும். அப்படித்தான் உண்மை விளம்பியாய் இருப்பதால் சில சந்தேகங்களும் வந்து சேரும். உண்மையாகவே குரூப் ஸ்டடி போட்டு மண்டையைக் கசக்கி படிச்சிட்டு டயர்டா வீட்டுக்குப் போவேன். அம்மாவிடமிருந்து, என்ன படம் எப்படி இருந்தது? என்ற கேள்வி வரும். கோபம் என்றால் கோபம் அவ்வளவு கோபம் கோபமாய் வரும். உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? விதி வலியது என்று விட வேண்டியது தான். இப்பொவும் அப்படித்தான். மாங்கு மாங்கு என்று (வீட்டில் ஃபோன் கூட செய்யாமல்) பார்லியமெண்ட் கேள்விக்குப் பதிலோ, ஆக்ஷன் பிளான் டாக்குமெண்டோ, விஜிலென்ஸ் கேள்விக்கு பதிலோ தயார் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தால், பார்ட்டி எப்படி இருந்தது? என்று மனைவியிடமிருந்து சந்தேகக் கேள்வி வரும்… (அப்பவும் நாம கோபப்படாமல் இருப்போம்லெ…)

நிலைமையினச் சமாளிக்க நண்பர் ஒருவர் நல்ல ஐடியா தந்தார்… தினமும் 5 மணிவரை வேலை என்றால், எப்போதும் ஊர் சுத்திட்டு 7 மணிக்குத்தான் கெளம்பனும் வூட்டுக்கு. ஒரு வேளை 5 மணிக்கே கடெயெ மூடிட்டு வீட்டுக்குப் போனாலும் கூட, அம்மணி அமிர்தாஞ்சன் கையோடு கொண்டு வந்து ”என்னங்க…ஒடம்பு சரியில்லெயா…நேரத்தோட ஊட்டுக்க வந்துட்டீக.” என்று நிப்பாகளாம்… இது எப்படி இருக்கு? யாராவது செஞ்சிட்டு அப்புறம் சொல்லுங்க… நானும் முயற்சி செய்றேன்…

ஆஃபீசில் சிலர் வந்து விட்டுப்போன பின்னரும் கூட, சில வாசனை அங்கேயே நிற்கும். ஒரு முறை குறிப்பிட்ட சில மகளிர் வந்து போன பின்னர் மூக்குப் பொடி [ டி வி எஸ் ரத்தினம் பட்டணம் பொடியே தான்] வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. உதவியாளரிடம் என்ன வாசம்? என்று கேட்டேன். அவர் ஏதோ ஒரு நல்ல(?) பிரண்ட் பெர்ஃப்யூம் என்றார். அடுத்த நாள் பாத்தா… அந்த பெர்ஃப்யூம் என் மேஜை மேல்… எனக்கு ஏதோ ரொம்பவும் பிடிக்கும் என்று வாங்கியே வந்து விட்டார் போலும்…. ஆமா… அவர் ஏன் அதை எனக்கு வாங்கித் தர வேண்டும்? …சந்தேகப் புத்தி ஆரம்பித்தது…

சந்தேகத்தில் மனுஷன் சாவுறது ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்திலெ… அதே சந்தேகம் காரணமா ஒரு யானை உயிர் விட்ட சோகம் அந்தமான்லெ நடந்தது. ஒரு வன அதிகாரியை மதம்பிடித்த யானை கொன்று விட்டது. அது மற்றவர்களையும் கொன்று விடுமோ என்ற சந்தேகம் தான் அந்த உயிர் பிரியக் காரணம். ஆனா ஆய்வு என்ன சொல்லுதாம், 59 சதவீதம் திருட்டு வேட்டைக்காரர்களாலும், 15% ரயிலில் அடிபடுவது (இது அந்தமானில் இல்லை), 13% விஷ உணவு, 8% மின்சாரம் தாக்கி மரணமுமாய் நிகழ்கிறதாம். இனி ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கும் கொஞ்சம் % ஒதுக்கி வைக்கலாம்.

rouge

மதம் பிடிக்க ”காமம்” தான் காரணம் என்பதை நம்மில் பலர் ஒப்புக் கொள்ளத் தயாராய் இல்லை. அது யானையாய் இருந்தாலும் நாமாய் இருந்தாலும் சரி. யானைக்கு சரியான ஜோடி கிடைக்காத போது தான் மதமே பிடிக்குமாம். அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமாம். ஆனால் மனுஷனுக்கு மதம் பிடிக்க அப்படி எந்த காரணமும் வேண்டியதில்லை. தமிழைக் காதலிப்பவ்ர்களுக்கு காமத்தை விடவும், காமத்துப் பால் அதிக சுவை என்று சொல்லக் கேள்வி.

வாட்ஸப்பில் நோட்டம் இடச் சொல்லி சத்தம் வந்தது. எட்டிப்பாத்தா, கம்பர்…

ஹை…கிச்சா…

ஹை கம்பரே – இது என் பதில்.

கம்பர்: சந்தேகத்திலெ யானை செத்த கதை சொன்ன மாதிரி தெரியுது..ஆனா, யானைக்கே சந்தேகம் வந்த கதை தெரியுமா??

நான்: சொல்லுங்க ஐயனே தெரிஞ்சிகிடறேன்…

கம்பர்:- சுந்தரகாண்டம்…ஊர் தேடு படலத்தில் அநுமன் கண்ணுக்கே தெரிஞ்சது…ஒனக்குத் தெரியலையா…போய்த் தேடிப்படி..

கம்பர் ஆஃப் லைன் ஆகிவிட்டார்..நான் கம்பரில் ஆழ்ந்துவிட்டேன்..

அந்தக் காலத்து மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும், மற்ற பிற செண்ட் போன்ற ஐட்டங்களும் குளிக்கிறச்சே அந்த அகழித் தண்ணியிலெ கலந்திடுச்சாம். அப்பொ, அங்கெ குளிக்க வந்த யானைகளின் உடம்பிலும் அந்த வாசனையும் கலரும் ஏறிடிச்சாம். அதெப் பாத்து பெண் யானைகள் எல்லாம் சந்தேகத்தோட, எப்படி மற்ற பெண்யானைகளோடு சேரலாம் என்று காச் மூச் என்று கத்தினவாம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை யானைக்கும் கூட சொல்ல வந்த கவிச்சக்ரவர்த்தியின் பாடல் வரிகள் இதோ…

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலப் பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

பொல்லாத சந்தேகம் யானையையும் பாடாப் படுத்தியிருக்கே..

இப்பொ சொல்லுங்க…உங்க சந்தேகம் எதெப்பத்தி?????

4 thoughts on “சந்தேகம் என்னும் ஒரு சரக்கு

  1. Anbu Jaya says:

    “மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும்,….” – என்ன கதையா இருக்குதே. எங்க நக்கீரர் கூந்தலுக்கே இயற்கை மணம் இல்லைன்னு சொன்னாரு….!

    • Tamil Nenjan says:

      எப்பவும் சிவனையே நினைப்பவர்கள் சிவமாகவே மாறுவதில்லையா?
      அன்பு என்று பெயர் வைத்து தினம் பயன்படுத்துவதால் அன்பே வடிவம் (அட நீங்கதானுங்க) ஆனதில்லையா?

      இப்படித்தான் தினமும் அகில் புகையில் கலந்து இருந்து உடம்பே அகில் மணம் ஆகி இருக்கலாம் என்பது என் சந்தேகம்.

  2. nmkathir says:

    “உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? ”

    I understand sir! Tamizum , Tamil nadum than ungal ulagam!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s