ஊதா ஆ ஆ ஆ ஆ கலரு…


uudhaa

சில தினங்களுக்கு முன்னர் அந்தமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ”தகவல் பெறும் உரிமைச் சட்டம்” பற்றிய ஒரு நிகழ்ச்சி. நீங்கள் அதில் கலந்து கொண்டு, நேயர்கள் நேரில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிட வேண்டும் என்பதாய் கோரிக்கை வந்தது. இது வரை நான், என் மடிக்கணிணி வைத்து படம் காட்டித் தான் பயிற்ச்சி வகுப்புகள் நட்த்தி வருகின்றேன். அதே மாதிரி வசதி இருந்தால் நன்றாய் இருக்கும் என்றேன். அதனாலென்ன? செய்தால் போச்சு.. ஒரே ஒரு விண்ணப்பம்… ஊதா கலர் சட்டையினைத் தவிர்க்கவும்”. இப்படி வந்தது தான் அந்த நேரலை வாய்ப்பு.

நேரலை என்பதால் கேள்விகள் கேட்க ஏதுவாய் அன்றைய அந்தமான் தினசரிகளில் உங்கள் சந்தேகங்களுக்கு ஆர் டி ஐ எக்ஸ்பர்ட் (இப்படி ஒரு பட்டம் அவங்களாவே கொடுத்துட்டாங்க) பதில் அளிக்கிறார் என்று என் பெயரோடு போட்டும் விட்டார்கள். (டாக்டர் எஸ் காளிமுத்து ரேஞ்சில் அப்பப்பொ உங்க பேரு பேப்பரிலெ வருது என்று என் நண்பர்கள் கலாய்ப்பதும் உண்டு). போதாக் குறைக்கு ஃபேஸ்புக்கில், போட ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷம் வேறு… (ஆமா அதுக்காக, பீத்திக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது என்று உண்மை சொல்ல முடியுமா என்ன?)

இந்த மாதிரி நிகழ்ச்சிகள், மேடை ஏற்றம் இப்படி எல்லாம் சந்தர்ப்பம் வரும் போது, புதிய செட் டிரஸ் வாங்கித் தரும் வழக்கம் என் இல்லாளுக்கு இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. இன்றும் இப்படித்தான் நல்லதாய் (நானே சொல்லிக் கொண்டால் எப்படி?) புதுசு வாங்கி, புதுசா வாங்கினாலும் அதன் மடிப்பின் சுருக்கங்களையும் பெட்டி போட்டு தேய்த்து சுடச்சுட போட்டு அனுப்பி வைத்தார். (சென்று வா… வென்று வா என்று வெற்றித் திலகம் இடாத குறைதான்). லேசான மேக்கப் உமனின் டச்சப் எல்லாம் செய்து முடித்து ரெக்கார்டிங் ரூமில் சென்றேன்.

”நீங்க கேள்வி கேக்கிற ஆள் தானே? இங்கே உக்காருங்க” என்று கஷ்டப்பட்டு, இஷ்டமின்றி அவர் நாக்கில் ஹிந்தி வார்த்தைகள். ஒரு சேர் காட்டப்பட்டது. (என்னெப்பாத்தா பதில் சொல்ற ஆள் மாதிரி தெரியலையோ என்ற கவலையும் வந்தது… என்ன செய்ய…? என் முகராசி அப்படி). நான் பதில் சொல்ல வந்த ஆள் என்றேன் சரளமான ஹிந்தியில். அப்புறம் இருக்கை இடம் மாறியது. அதிகரிகள் ஊழியர்கள் என்று எல்லாமே முழுக்க தென்னிந்தியர்களாய் அதுவும் தமிழர் குழுவாய் அங்கு குழுமியிருந்தனர். இன்னொருவர் உள்ளே வந்தார். என்னை முழுதும் பார்த்தார். எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்து, “இந்த ஊர்க்காரங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சொல்லச் சொல்ல, ஊதா முழுக்கால் சட்டை போட்டு வந்து நம்ம உயிரை எடுக்கிறாய்ங்க… ” (புளு என்பதற்கு ஊதா என்றும், பேண்ட்க்கு முழுக்கால் சட்டை என்றும் எனக்குப் புரியாமல் பேசுறாகளாம்…. தமிழன் அறிவு மெச்சத்தான் வேண்டும்.)

விவேக் காமெடி ஞாபகம் வந்தது. “பாஸ்போர்ட் போட்டோதானே என்று அன்னெக்கி ஜட்டி கூடத்தான் போடாமெப் போனேன்… அதெல்லாம் உமக்குத் தேவையா ஓய்” என்று டிராஃபிக்கில் மடக்கும் போலீசிடம் விவேக் சொன்ன டயலாக் சொல்லி, நிலைமையை சகஜமாக்கினேன். நீங்க தமிழா சார்? என்ற கேள்வியோடு, இடம் கலகலப்பானது.

Picture1

லேப்டாப்பா… படமா… சொல்லவே இல்லையே… வழக்கமான அரசு இயந்திரத்தின் கம்யூனிகேஷன் கேப் பல்லை இளித்துக் காட்டியது. கடைசியில் அவரே, இன்னெக்கி பேச்சு (பேச்சோடொ) மட்டும் இருக்கட்டும். அடுத்த முறை அந்த படம் காட்ற வேலை எல்லாம் வச்சிக்கலாம் என்று உடன்படிக்கை ஆனது.
முகநூல் நண்பர்களான, அமெரிக்கா கார்த்திக் பாபு, சேலம் ஜெயராஜன் இப்படி இவர்களும் கேள்விக் கணை தொடுக்க, நேரலை உலகளாவிய நிகழ்வாய் மாறியது. [சார் நான் கேள்வி கேட்க நெனெச்சேன்..லயனே கெடெக்கலை.. இந்த புகார் இன்றும் வருகின்றது..]

RTI in DD PB

நேரலையில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று நான் எதிர் பாக்கவே இல்லை. கேள்வி கேக்கும் நபரை பாக்கவே படாது. கேமிராவை பாத்தே பேச வேண்டுமாம். (பேசாமெ ஒரு ஜோதிகா படமாவது அங்கே மாட்டி வச்சிருக்கலாம்) தொலைபேசி வழியாக கேள்விகள் வரும் போது, ”என்னது??” என்று முகத்தை விகாரமாய் ஆக்கிவிடக் கூடாது. (இயற்கையாவே கொஞ்சம் அப்படி இருக்கு.. என்ன செய்ய?) கூடுமானவரைக்கும் கூடுதலாக ஆங்கிலம் உபயோகிக்காமல் ஹிந்தியில் பதில் தர வேண்டும். (அமெரிக்கா சேலம் போர்ட்பிளேயர் என மூன்று கேள்விகள் தொடர்ந்து ஆன்கிலத்தில் வந்து சென்றது) இத்தனைக்கும் மேலே, வீட்டில் மனைவியும் பையனும் பாத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உதறல் வேறு. இத்தனைக்கும் நடுவில் ஈசியான ஒரே வேலை, ஆர் டி ஐ கேள்விக்கு பதில் சொல்வது தான்…

நிகழ்வு முடிந்தவுடன், ஊதா..ஆ..ஆ…ஆ… கலரு என்று சத்தமாய்ப் பாடினேன். கருப்பூக் கலரு….. என்று பதில் பாட்டு வந்தது. ”யாரது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது?” என்று தேடினேன். பின்னே சாந்தமாய் கம்பர்.

கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு இப்படித்தானே சாமி பாட்டு வரணும் – இது நான்.
சுந்தர காண்டம் (படம் பாக்க ஓடிட வேண்டாம்), ஊர் தேடு படலம் படிச்சா புரியும். ஐயன் கம்பர் சொல்லிட்டா, படிக்காமெ இருக்க முடியுமா என்ன?

அனுமன் இலங்கையில் நுழைந்து சீதையைத் தேடும் இடம். ஒரு மாளிகை தெரிகிறது. பளிங்கினால் ஒரு மாளிகை… பவளத்தால் மணி மண்டபம்…. இது சினிமா பாட்டு இல்லீங்க.. கம்பர் சொன்னதுங்க. அந்த வெளிச்சத்திலெ போக சிரமமா இருக்குமாம். கற்பக மரங்களோட நிழல் இருக்கிறதாலெ தேவலையாம் அனுமனுக்கு. அந்த மரத்திலும் தேன் கொட்டுதாம்… அந்த மாளிகையில் வீடணன் மறைந்து மறைந்து வாழ்ந்தாராம். எப்படி? எப்படி? மறைந்தது எப்படி?

தருமத்தின் நிறம் வெண்மையாம். ஆனா, அரக்கர்கள் கருப்பா இருக்கிறச்சே, அவர்களோடு நாம் இருக்க முடியாதே என்று தன் கலரை மாத்தி கருப்பா…(பயங்கரமா – இது கம்பர் சொல்லாத்துங்க) மாறி வாழ்ற மாதிரி விபீஷணனும் மறைந்து வாழ்கிறாராம்.

பளிக்கு வேதியைப் பவளத்தின் கூடத்து பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

இனிமே… ஊதா கலரு ரிப்பன் பாட்டும், கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு பாட்டும் கேட்டால், மாளவிகாவையும் மீறி கம்பர் ஞாபகத்துக்கு வரணும். என்ன சரியா???

22 thoughts on “ஊதா ஆ ஆ ஆ ஆ கலரு…

  1. jayarajanpr says:

    //இந்த மாதிரி நிகழ்ச்சிகள், மேடை ஏற்றம் இப்படி எல்லாம் சந்தர்ப்பம் வரும் போது, புதிய செட் டிரஸ் வாங்கித் தரும் வழக்கம் என் இல்லாளுக்கு இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. //

    மிக அருமையான நல்ல பழக்கம்… 🙂

  2. jayarajanpr says:

    [சார் நான் கேள்வி கேட்க நெனெச்சேன்..லயனே கெடெக்கலை.. இந்த புகார் இன்றும் வருகின்றது..]

    அது ஒரு மாதிரி ‘லக்’ அடிக்கணும்..

    • Tamil Nenjan says:

      அந்தமானில் உள்ளூர் ஃபோன் கிடைப்பதே குதிரைக் கொம்பு (அந்தமானில் குதிரையே கிடையாது…கொம்புக்கு எங்கே போக?)

      அதில் அமெரிக்கா, சேலம் என்று கிளம்பிய நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி…

      • jayarajanpr says:

        நான்தான் அங்கெ வந்து லைன் கிடைக்கமே அவஸ்தை பட்டேனே…. எனக்கெல்லாம் சுத்தமா நம்பிக்கையே இல்லே..
        சரி… பண்ணிப் பாப்போம்…கிடைச்சா பேசுவோம் என்று பட்டனை அமுக்கினேன். கிடைக்கிற மாதிரி ‘கொய்ங் …கொய்ங் … கொர்…கொர்..” என்ற சில பல நல்ல சப்தங்கள் வர ஆரம்பித்தன… அப்போதே எனது நம்பிக்கை அதிகமாகி விட்டது. விடா முயற்சியில், மற்றொரு எண்ணில் தொடர்பு கிடைத்து விட்டது. உங்களுக்கு அங்கெ ஒரு பதற்றம் என்றால், எனக்கு நான் எந்த மொழியில், என்ன பேசுவது என்று திடீரென்று எனக்கு ஒரு பதற்றம் இங்கு.

      • Tamil Nenjan says:

        எப்படியோ ஊர் கூடி தேர் இழுத்து விட்டோம்..

  3. jayarajanpr says:

    //நேரலையில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று நான் எதிர் பாக்கவே இல்லை. கேள்வி கேக்கும் நபரை பாக்கவே படாது. கேமிராவை பாத்தே பேச வேண்டுமாம். (பேசாமெ ஒரு ஜோதிகா படமாவது அங்கே மாட்டி வச்சிருக்கலாம்)//

    குபுக்குன்னு சிரிப்பு வந்துடுச்சி… இன்னும் அடங்கலை…!

  4. jayarajanpr says:

    //”என்னது??” என்று முகத்தை விகாரமாய் ஆக்கிவிடக் கூடாது. (இயற்கையாவே கொஞ்சம் அப்படி இருக்கு.. என்ன செய்ய?)//

    அப்படியே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…

  5. எழுத்தாளர் இப்போ மீடியாவில் எக்ஸ்பெர்ட்டும் ஆயாச்சு ,அடுத்து சினிமாவிலும் வரலாமே !

    • Tamil Nenjan says:

      சினிமா சான்ஸ் வந்தே வருஷம் அஞ்சிக்கு மேலாச்சி…. என்ன புரபெஷர் ரோல் குடுத்து அழைப்பு வந்தது. வென்னீராடை மூர்த்தி சான்ஸ் ஏன் கெடுப்பானேன் என்று மறுத்து விட்டேன்,

  6. சொ.வினைதீர்த்தான். says:

    ஜோதிகா படம்? இளைஞர் பட்டம் தாண்டி பத்து ஆண்டுகள் கடந்து இருக்கும் என எண்ணுகிறேன். தர்மம் கருநிற வீடணனிடம் வாழ்வதை அருமையாகக் காட்டும் பாடல். கம்பனுக்குப் பிடித்த வண்ணம் மழைமுகில் வண்ணம் தானே! இராமனைச் சொல்லும்போதெல்லாம் அவன் வண்ணம் தானே முன்நிற்கிறது.

    • Tamil Nenjan says:

      ஐயா…என்னோட “இளைஞர்” காலத்து நாயகி என்றால் பத்மினி தொடங்கி…. அம்பிகா வரை பட்டியல் நீளும்.

      கம்பன் வரிகள் படித்தவுடன் அட..அடடே..என்று பட்டது.. அதான் எப்படியோ புகுத்தி விட்டேன்..

  7. Anbu Jaya says:

    அப்டி போடு அறுவாள!! என்னடா இந்த மனுஷன் ரொம்பநாளா “தகவல் பெறும் உரிமைச் சட்டம்” பத்தி, பேசாராரு, எழுதராரு, நம்ப கம்பன வம்புக்கு இழக்காம போக்கீனே இருக்காரேன்னு பாத்தன். இழுத்துட்றய்யா! நல்ல பதிவு. நன்றி நண்பரே.

    • Tamil Nenjan says:

      எதை நினைத்து கம்பரை எடுத்தாலும் அதில் கம்பர் வருகின்றார். எம் பி ஏ பாடம் படிக்கும் போதும் சரி, ஆர் டி ஐ சட்டம் கையில் எடுத்தாலும் சரி…கம்பர் வருவதை தடுக்க முடியலை…உங்கள் மேலான பதிலுக்கு நன்றி.

  8. Good. All in the game.

  9. Nagaicchuvai thangalukku iyalbai varugirathu. Entha nigazhveninum athil thangalukkei urittha humor mix panni….kambarai veiru vambukku izhutthu pugunth vilaiyadugireergal……best wishes….by ilaval hariharan

    • Tamil Nenjan says:

      நன்றி…

      பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா…ன்பது போல், படிக்கும் இடமெல்லாம் கம்பர் வரும் விபத்து நிகழ்கிறது…

      இது நான் ஏதும் பிளான் செய்து துவங்கவில்லை… ஆனால் அப்படியே நடக்கிறது..

      இளைய தலைமுறைக்கும் கம்பர் சென்று சேர்கின்றார் என்ற நிம்மதியில் தொடர்கிறேன்.

  10. palaniappan.mu says:

    எங்கும் தமிழ் எதிலும் கம்பன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s