தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

8 thoughts on “தொப்பி கழட்டிய வணக்கங்க…

  1. இன்கோமியம்ஸ் வந்துண்டே இருக்கு ! கேட்கிறத்துக்கு நல்லா இருக்கு.

  2. praba says:

    பாராட்டுக்கள் குவிகிறது…கம்பனின் பத்தாயிரம் மீது உங்கள் கவனம் இன்னும் குவியும்..குவியட்டும்…

  3. jayarajanpr says:

    //பி கு: இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.//

    அது எப்படியோ எல்லோரும் உங்கள் இரசிகர்கள் ஆகி விடுகிறார்கள்….!

  4. Anbu Jaya says:

    என்னடா இது நம்ம TNK தான் இப்படி எழுதராருன்னு பாத்தா, அந்த முனைவரையும் அப்படி எழுத வச்சிட்டாரே. பலே ஆசாமிதான். வாழ்த்துகள் பல.

  5. Tamil Nenjan says:

    ஒரு தாக்கம் இருக்கத்தான் செய்யுது அன்பு ஜெயா சார்…

Leave a reply to Tamil Nenjan Cancel reply