சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…


cheers

மதுக்கோப்பைகள் மோதும் போது உண்டா(க்)கும் இந்தக் கூப்பாட்டை பல படங்களில் பாத்திருப்பீங்க… நேரிலும் பாத்திருக்கலாம். ஏன் உங்களில் சிலர் (ஏன் பலராகவும் இருக்கலாம்) கூட சொல்லியிருக்கலாம். அல்லது சொல்லக் கேட்டிருக்கலாம். ஏன் இப்படி கின்னத்தை இப்படி ஒன்றோடு ஒன்று (கன்னத்தோடு கன்னம் ஒட்டுவது போல் மெதுவாய் பக்குவமாய்) மோதுகிறார்கள் என்று நீங்கள் யாரிடமாவது கேட்டதுண்டா? [பார்ட்டிக்குப் போகும் போது இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? என்கிறீர்களா?]

ஆனா நான் ஒரு நாள் கேட்டு வைத்தேன். அருமையான பதிலும் கிடைத்தது. (நல்லவேளை பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே..). பொதுவாய் இத்தகைய பார்ட்டிகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் சில இருந்து கண் சந்தோஷப் பட்டு விடுகிறது. சில பல சைட் டிஸ்ஸுகள் இருப்பதால், வாய் ஓகே என்கிறது. நாசியில் வாசனை வந்ததால் அதுவும் நாசூக்காய், நலமென்று இருந்து விடுகின்றது. ஆனா அந்தக் காது மட்டும் சும்மா தேமேன்னு பார்ட்டியில் கலந்துக்காத ஆட்கள் மாதிரி இருக்குமாம். எனவே இப்படி இடித்தல் சத்தம் அந்தக் காதுக்கு காணிக்கை ஆக்குவதற்காய் ஆனதாம். [இதுக்கு மேலும் விளக்கம் தேவைன்னா… கூகுலாண்டவரெப் பிடியுங்க…]. நானு என்ன நெனெச்சேன்னா, கூடக் கொறெச்சி ஊத்திட்டு பின்னாடி சண்டை வராமெ இருக்க அளவு சரியா இருக்கான்னு பாக்கிறாகளோ!!!

இன்னும் சில சம்பிரதாயங்களும், அந்த உற்சாக பானக் கொண்டாட்டங்களில் நடக்கும். மறக்காமல் குப்பியினைத் திறக்கும் போது அதன் கீழே ஒரு தட்டு தட்டுவது, பூமாதேவிக்கும் குளிரூட்ட சில துளிகள் தெளித்து, தீர்த்தம் போடுவது இப்படிச் சில. என்ன தான் டிசைன் டிசைனாக ஓப்பனர்கள் கைவசம் இருந்தாலும், பல்லால் கடித்துத் திரவியக் குப்பி திறக்கும் பல் திறப்புப் பயில்வானய் ஒருவர் கண்டிப்பாய் இருப்பார். ஏதாவது ஒரு பொருள் கீழே விழுந்து உடைவதோ, யாரோ ஒருவருக்கு அதிகம் போதை ஏறுவதோ கண்டிப்பாய் அடுத்த பார்ட்டி வரை சபைக் குறிப்பில் வைத்துக் கொள்ளப்படும். (அதெப்படி எவ்வளவு போதையிலும் இதெல்லாம் சாத்தியம் என்று சாதாரண குடிமகன் கேட்கப்படாது).

சியர்ஸ் என்ற சத்தம் போல், சிலபல சந்தச் சத்தங்களும் பிரபலம். பல தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வேலையினைச் செய்யும் போது அப்படி சத்தம் செய்வார்கள் அப்படி உண்டாக்கும் அந்தச் சத்தங்களினால் ஒரு களைப்பு நீங்கி, ஜாலியாய் அந்த வேலை செய்ததாய் உணரலாம். தொட்டது தொன்னூறுக்கெல்லாம் கிரேன் வந்துவிட்ட இந்தக் காலத்தில் அந்தச் சந்தச் சத்தங்களும் காலப்போக்கில் மறைந்து விட்டன என்பதும் உண்மைதான். அந்தமானில் மரங்கள் உருட்டிய போதும் சரி, பெரிய பெரிய அஸ்திவார கான்கிரீட் பைல்களை புரட்டும் போதும் சரி கோரஸாக, ஒன் டூ ஃபோர் என்பார்கள். (மூனு என்ன ஆச்சி என்ற கேள்விக்கு பேச்சு மூச்சே இல்லை)

பரமக்குடியில் வைகை நதியில் (நதி என்று பெயர் தான்). எப்போதாவது தான் தண்ணி வரும். ஆனா அப்படி வந்தா அது பாலத்தையெல்லாம் ஒடெச்சிட்டுப் போற மாதிரியும் வந்து கலக்கும். (இங்கும் கலக்குதோ?). சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் (நல்ல அழகர்தான் – என் செல்லம்; திருட்டுக் கழுதை என்று சொல்லுவோமே, அப்படித்தான்) ஆற்றில் இறங்கும் போதும் கோவிந்தா கோவிந்தா என்று ஆரம்பித்து, கோய்ந்தோவ்..என்று இடையில் மாறி, கடைசியில் கோந்தா..கோந்தா என்றும் மற்றும் பல குரல்வடிவங்களாயும் மாறும். அதே திருவிழாக்களில் சில (பல) நேரங்களில் கை கலப்புகளும் நடக்கும் என்பது தவிர்க்க இயலாதது.

மனிதர்கள் வாழும் இரு நாடுகளுக்குள் பிரச்சினை வந்தால் யுத்தம் என்கிறோம். இரண்டு மனங்களுக்குள் மட்டும் பிரச்சினை என்றால் மவுன யுத்தம் என்று ஏன் சொல்கிறோம்? நமது தமிழ் இலக்கியங்கள் மட்டும் தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு நல்ல பெயர் வைதிருக்கிறது, ஊடல் என்பதாய். ஒரு பிர்ச்சினைக்குப் பேரு வச்சிட்டா, பிரச்சினை தீந்து போச்சா? என்று புலம்புவது கேக்குது. என்ன பேர் வைக்கிறதுங்கிற பிரச்சினையாவது அட்லீஸ்ட் தீந்து போச்சா இல்லியா?

காதலன் காதலி அல்லது கணவன் மனைவிக்குள் ஊடல் வந்தால் என்ன செய்வது? எப்படி பிர்ச்சினைகளைச் சமாளிப்பது? இந்த மாதிரி ஏதாவது சந்தேகம் வந்தா…., நான் நாடும் நம்பகமான ஒரே நபர் திருவாளர் கம்பர் தான். ஸ்கைப்பில் கம்பர் ஆன்லைனில் இருப்பதாய் தெரிந்தது. லேசாய் ஒரு தட்டு தட்டிக் கேட்டுப் பார்த்தேன். அவர் சொன்ன விபரம் இது தான். சுந்தர காண்டத்தின் ஊர் தேடு படலத்தில் இருக்குதாம் அதன் சூத்திரம். சொல்லிவிட்டு உடன் ஆஃப் லைனுக்குப் போய் விட்டார். நம்மள மாதிரி இன்னும் எத்தனெ பேத்துக்கு. அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கோ? யாரு கண்டா?

சீதையினைத் தேடும் நேரத்தில் அகஸ்மாத்தமா அனுமன் கண்ணில் பட்டதை, அப்படியே கம்பர் வர்ணிக்கின்றார். அப்பொ கட்டெப் பிரம்மச்சாரி அனுமனா வர்ணிப்பார்? (அதுசரீரீ அந்த பிரம்மச்சாரிக்கு பக்கத்திலெ கட்டைன்னு ஏன் அப்படி கொட்டையா சொல்றாய்ங்க?) அங்கே பாக்கிற எடத்திலும் சியர்ஸ் சொல்ற இடம் வருது.. ஆமாங்க…கம்பரும் கேட்டுச் சொல்றார். நீங்களும் கேளுங்க நல்லா காதை தீட்டிகிட்டு…

அங்கே அரக்கர்களுக்கு அரக்கியர் (கிண்ணத்திலும் கன்னத்திலும்) ஊற்றிக் கொடுத்தார்களாம். தேனிசை (தென்றலின் இசையில்லாமலேயே) அதாவது தேன் போன்ற இசைத்தேனை ஆவலுடன் கேட்டார்களாம். கமல் பாணியில் உதட்டோடு உதடு ஒட்டி தேன் அருந்தினராம். (கமல் எனபது அந்தக் கம்பன் சொல்லாமல் விட்டது. இந்த வம்பன் சேர்த்தது). இடையே ஊடலும் ஏற்பட்டதாம். அப்படி இருந்தும் அந்தக் கடும் சொற்களை பிரியத்தோடு கேட்டார்களாம். (மெஸேஜ்… நோட் செய்ங்கப்பா…) கையை மீறின போது அவர்களை வணங்கி கோபம் தெளிந்தனராம். அதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இதை அநுமன் பாத்ததாக கம்பன் சொன்னதுங்கோ…

மெஸேஜ் மட்டும் தனியே உங்களுக்காய்…

தண்ணி அடிக்கலாம்…மனைவி அனுமதித்தால்.
மதுவும் மாதுவும் சேரலாம், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும்.
மனைவியின் இனிய பேச்சை அன்போடு கேளுங்கள்.
கடுஞ்சொல் சொன்னாலும் பிரியமாய் கேளுங்கள்.
கோபப்படறாங்களா…அப்படியே கால்லெ விழுந்து காரியம் சாதிங்க…
எல்லாத்தையும் ஒரு நாடகம் மாதிரி ஜாலியா பாருங்க..

இப்பொ பாட்டு பாக்கலாமா?

தேறன் மாந்தினர் தேனிசை மாந்தினர் செவ்வாய்
ஊறன் மாந்தின ரின்னுரை மாந்தின ரூடல்
கூறன் மாந்தின ரனையவர்த் தொழுதவர் கோபத்து
ஆறன் மாந்தின ரரக்கியர்க் குயிரன்ன வரக்கர்.

வேறு ஏதாவது கம்பர் மெஸேஜோடு வர்ரேன்..

8 thoughts on “சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…

  1. Whether to drink or not to drink?
    It seems it;s left to the choice of the reader !

    • Tamil Nenjan says:

      இதுக்குத்தான் “குடி குடியைக் கெடுக்கும்” என்று படம் போட்டே ஆரம்பித்தேன்.

  2. M.S.Sekar says:

    கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே என்பார்கள். இதற்கு இரண்டு பொருள் உண்டு.
    ஆனால், உங்களுக்கு எப்போதும் எதிலேயும் கம்பனை இழுக்கும் புத்தி மட்டும் உள்ளது.
    அனுமான் ஏன் கடைசி வரை கட்டை பிரமச்சாரியாக இருந்தார் என்பதற்கு கம்பர் எதாவது சொல்லியிருக்கிறாரா.

    • Tamil Nenjan says:

      வம்பனுக்கு புத்தி கம்பனுக்குள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்…

  3. Anbu Jaya says:

    கம்பன வம்புக்கிழுக்கலன்னா தூக்கம்வராது உங்களுக்கு.

    ஊடல் பற்றி கம்பன் இன்னொரு எடத்தில சொல்றான்; தலைவி ஊடல்வந்தா தலைவன அவன் தோள்ள ஒரு எத்து எத்துவாளாம், ஒதபட்ட தோள் செவந்து பூடுமா. எந்த பாட்டுன்னு கேக்குறீகளா?!
    “குதைவரிச் சிலைநுதற் கொவ்வை வாய்ச்சியர்
    பதவுகைத் தொழில்கொடு பழிப்பி லாதன
    ததைமலர்த் தாமரை யன்ன தாளினால்
    உதைபடச் சிவப்பான வுரவுத் தோள்களே.”
    (நகரப்படலம், 49)

    • Tamil Nenjan says:

      அப்புடிப் போடு அறுவாளை… யாரும் யாருக்கும் கம்மி இல்லையே???

  4. Anna Sundaram says:

    தண்ணி தட்டுவதில் இத்தனையா
    அதுலயும் கம்பனா – நீர் சரியான வம்பன் தான்

    • Tamil Nenjan says:

      எங்கும் கம்பன், எதிலும் கம்பன். அனைவருக்கும் கம்பன் – அதுவும் எளிய முறையில் இது தான் இந்த வம்பனின் நோக்கம்.

      உங்கள் பதிலுரைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s