சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

13 thoughts on “சுனாமி சுந்தரி

  1. M.S.Sekar says:

    கம்பனை வம்பிழுக்கும் உங்கள் மீது யார் வழக்கு போடுவது. கம்பன் கழகம். அவர்களை எப்படி மயக்கினீர்களே , அவர்கள் உங்களை அழைத்து, பரிவட்டம் கட்டி பரிசும் கொடுத்து விட்டார்கள். எனவே PIL தாக்கல் வெய்வது என முடிவெடுத்துள்ளேண்.

  2. M.S.Sekar says:

    இந்த சுனாமியை ஊழி பேரலை என ” பென்னியில் செல்வன்” கதையில் விளக்கப்பட்டிருக்கும். அது நேரில் பார்காதவர்களுக்கு கண்முன்னே காட்சி விரியும். நீங்களும் படித்திருப்பீர்கள்

  3. Sunami Sundar! Ninaithal Pavama yirukku, kavalaya yirukku!

  4. Yilakya Patt yenaku puriyathu!

  5. Anbu Jaya says:

    நல்ல பதிவு நண்பரே. மீண்டும் நம் கம்பநாடனுடன் வாருங்கள். நன்றி

  6. chacha M Rajendran says:

    Unngal sevai Eangalukku Thevai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s