உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்


ennai paathu 1

”இந்த வீக் எண்ட்டா… சாரி என்னால் முடியாது. பாண்டிச்சேரிக்கு போகிறேன்” என்று சில இடங்களில் சொன்னேன். எல்லோரும் ஒரே விதமாய், ”ம்..ம்… தனியாத்தானே போறீங்க… என்ஜாய்…” என்று வாழ்த்து சொன்னார்கள். அப்படி என்ன பாண்டிச்சேரியில் இருக்கு? அரவிந்த ஆஸ்ரமம், ஆரோவில், பாரதியார் இல்லம் இப்படி இவற்றுக்கு எல்லாம் இல்லாத ஒரு கிக்கான விஷயம், இளைஞர்களை மட்டுமல்ல, அனைத்து பாண்டிச்சேரி தரிசனவாசிகளையும் உற்சாகமூட்டும் அதிசயம் அந்த ”உற்சாகபானம்” தான். சமீபத்திய வார இறுதியின் என் புதுவைப் பயணம் பற்றிய எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இது.

’பாண்டிச்சேரிக்குப் போனோமா, நாலு பெக் போட்டோமோ, குப்புறப் படுத்தோமா என்று இல்லாமல் எதுக்கு இப்படி விலாவாரியா எழுதணும்?’ என்று நீங்களும் கேக்கலாம். கேக்காட்டியும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா? ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்கள், ’புதுவை விஜயம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்’ என்று முகநூலில் ரெண்டுவரி அன்புடன் எழுதி இருந்தார். இந்த தூண்டில் போதாதா நமக்கு? இதெ ரொம்பப் பெருமையா என்னோட பொண்ணுகிட்டெ சொல்லி பீத்திகிட்டேன் நான், ’பாத்தியா சிட்னியிலேர்ந்து என்னோட எழுத்துக்கு வரவேற்பு’ என்று. பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… இந்தக் காலத்து பசங்ககிட்டெ வாயெக் குடுத்தா இப்படித்தான்.

ஒரு காலத்தில் சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போவாய்ங்க… இப்பொ நல்ல சரக்கு அடிக்க அங்கே போவதாகக் கேள்வி. அப்பொ நான் எதுக்கு போனேங்கிற கேள்வி தானே… இந்த குடி பத்தின கேள்விக்கு இந்தப் பரமக்குடிக்காரன் (கவனிக்க, குடிகாரன் அல்ல), காரைக்குடிக்கு போய் வந்த சின்ன ஃப்ளாஷ்பேக்கோட ஆரம்பிக்கணும். போலாமா.. அப்படியே..

கடந்த மார்ச் மாதம் காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாம் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. அந்தமானில் இருப்பதால் இது போன்ற பட்டிமன்றங்களை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாது போனதால், அந்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு அனுபவித்து ரசித்துப் பார்த்தேன். பரதன், சடாயூ கும்பகர்ணன் பற்றிய தலைப்பில் காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள் அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால் நீதிபதி தப்பா நெனைக்கமாட்டாரா?” இப்படிக் கேட்டேன், சின்னப்புள்ளெத் தனமா. பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).
மனசுலெ நெனைக்கிறது எல்லாம் எப்படி நமக்கு ஃபுல்லாத் தெரியும்? அது சரிரிரீரீ…ஏதோ ஃபுல் சமாச்சாரம் சொல்ல வந்த மாதிரி இருந்ததே… அது தான் ஓடுது.. அந்த ஃப்ளாஷ் பேக் இன்னும் முடியலை.

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர் அவர். நானு கம்பரைத்தொட்டு 40 மாசம் கூட ஆகலை.. அவரோ, 14 புத்தகங்கள் எழுதியவர் சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர், அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் தழும்பாத நிறைகுடம். அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்.

IMG_0599

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் ஒரு கரிசனம் காட்டினார். (இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்று அரித்து எடுத்தது… கவுண்டமனி செந்திலிடம் கேட்டது போல்)

இப்படித்தான் நாம புதுவைக்கு வந்து சேர்ந்தோம். இப்படி வந்த காரணத்தினாலே, ஃபுல்லு ஆஃபு அந்தப் பேச்சுக்கே எடம் கெடையாது இப்பொ. விழா துவங்கும் முதல் நாள் இரவே ஒரு ரவுண்ட் அடித்தேன். (நீங்க மறுபடியும் அந்த ரவுண்ட் நெனைக்காதீங்க). கம்பன் அரங்கை. கிட்டத்தட்ட அந்தமான் அரங்கை விட மூன்று மடங்கு பெரியது. அரங்கம் நிறையுமா? என்ற சந்தேகம் வழக்கமாய் வந்து தொலைத்தது..

காலையில் குறித்த நேரத்தில் ஆளுநர், முதல்வர், மந்திரிகள் என்று வர, விழா துவக்கம் களைகட்டியது. பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.. கம்பன் விழாவை குடும்ப விழா ஆக்கிவிட்டனர் இப்புதுவை மக்கள். முதல்வர் பேசினாலும் சரி, கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் சரி, கம்பன் பாடல்களைப் பாடும் போதும், கம்பன் போற்றிகள் போரடிக்காமல் சொன்ன போதும், வழக்காடுமன்றம், நீண்ட சொற்பொழிவு இப்படி எல்லா இடத்திலும் அமைதி காத்தமர்ந்த மக்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அனைவருக்கும் இடையில் சுண்டல், இத்யாதி நொறுக்குத் தீனிகள் வருவதும் அரங்கை கட்டிப் போட வைக்கிறது. ஆனால் அப்போது மட்டும் கை தட்டல் குறைந்து விடுகிறது. நமக்கென்ன கம்பன் படைத்த இராவணன் மாதிரி கூடுதல் கையா இருக்கு, சாப்பிட்டுக் கொண்டே கையும் தட்ட??

முதல் நாள் நிகழ்ச்சியில் சுகி சிவம் ஐயா வராமல் போக, அதே தலைப்பில் உடனடிப் பொறுப்பு ஏற்று செவ்வனே பேச்சில் வென்றவர் நம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் ஐயாவே தான்.

சிறப்புரை ஆற்ற வந்த, அறவாழி அவர்கள் தனது பேச்சில் சீதையும் மண்டோதரியும் ஒரே அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மதிய உணவு நேரத்தில் (கொஞ்சம் அடக்கமாய்) கேட்டேன், ’கம்பர் எங்கே அப்படிச் சொன்னார்?’ என்று. கிடைத்த பதில்: இராமன் சொன்ன அடையாளங்கள் வைத்து, அனுமன் பார்வைக்கு அப்படி பட்டதாய், கம்பன் சொன்னதாய், ஐயா சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்புறம் சாப்பாட்டைப் பாப்போம். அரசே, முன்வந்து கம்பன் விருந்தினர்களை கௌரவித்தமை இன்னும் மகிழ்ச்சி. வேளை தோறும் புரவலர்கள் விருந்து உபசாரம் அந்தமான் வரை மணக்கிறது. காரைக்குடி செட்டி நாட்டை, அதன் உபசரிப்பை, முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு மூச்சுக்கு மூச்சு தெரிகின்றது. ஆரோக்கியமான போட்டி. எப்படியோ நமக்கு நல்ல சாப்பாடு கெடெச்சா போதாது???

ஐயா இராமலிங்கம் தயவில், என்னையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். இப்படி எதையாவது வம்பா எழுதி கடைசியிலெ கம்பரை புடிச்சி இழுத்ததுக்காக. மேடையிலிருந்து இறங்கி வந்ததும், பக்கத்தில் இருந்தவர் ஆச்சரியமாய் விசாரித்தார்.

அந்தமானிலிருந்தா வந்தீக? எவ்வளவு செலவாகும்?

நான்: ஆமா.. 10000 ஆகும்

ஆச்சரியத்தில் அவர்: போக வரவா?

என் பதில்: இல்லை. வர மட்டும். போய் வர 20000.

அவர் தொடர்ந்தார்..இந்த 100 ரூபா பொண்ணாடை வாங்க, 20000 ரூவா செலவழிச்சீகளா? [என் பொண்டாட்டி கேக்க மறந்த கேள்வி இது… ஞாபகமா யாரோ முகம் தெரியாத நபர் அக்கரையோட கேட்கிறார்] என்னத்தெச் சொல்ல, மன்மோகன் பதில் சொல்லி(?) முகம் திருப்பினேன். அப்புறம் அந்தாளு மொகத்தெப் பாக்குறப்பெல்லாம் கிறுகிறுங்குது…

அந்தமானில் இப்படி தலைசுத்துது என்பது கிறுகிறுன்னு வருது என்பார்கள். ஒரு முறை நான் டாக்டரிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாத தமிழர் (அட நானும் அந்த ஜாதி தானுங்க) இந்த கிறுகிறுன்னு வருது என்பதை ஹிந்தியில் சொல்லுங்க என்றார். எனக்கும் அப்படியே தலை சுத்த ஆரம்பித்தது.

புதுவை பானமோ மற்ற எந்த பானமோ அருந்தினால் அந்த கிறுகிறுன்னு ஏறுவது தான் அதன் உச்சமான கிலுகிலுப்பு… அதிகம் ஏறிவிட்டால் வாந்தி அது இது என்று பார்ட்டியே கெட்டு விடும்…

கம்பராமாயணத்தில் இப்படி ஒரு கிறுகிறுன்னு சுத்தும் இடம் வருது. அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, வேகம்னா வேகம்… அம்புட்டு வேகமாப் போகின்றார். நாம வழக்கமா ரெயிலில் போனா, எதிர்திசையில் மரங்கள் எல்லாம் ஓடுமே…பாத்திருப்பீக.. அதேமாதிரி இங்கே தெற்கு வடக்கா தானே மத்தது மூவ் ஆகனும்..? இங்கே தான் கம்பனின் மூளை வேலை செய்யுது. கிறுகிறுன்னு சொன்னது இதுக்குத்தான். வழக்கமா கிழக்கு மேற்கா சுத்தும் சூரியன் மேற்கு கிழக்காய் சுத்தினதாய் கம்பர் சேட்டலைட் சொல்லுது. ஒரு வேளை கம்பரும் அனுமனோட மேலே போய், அட சூரியன் நிக்குது..பூமி தான் சுத்துது அதுவும் உல்டாவா என்று சொல்ல வந்திருப்பாரா… இருக்குலாம். அவர் தான் சகலகலா வல்லவராச்சே..

வாங்க அப்படியே லேசா பாட்டு பாக்கலாம்.

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளு முடையான் றானே
அடக்கியைம் புலன்கள் வென்ற தவப்பயனறுத லோடும்
கடக்குறி யாகமாகங் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பரிதிவா நவனு மொத்தான்.

என்ன தலை கிறுகிறுன்னு சுத்துதா?

[பாண்டிச்சேரியில் உதவிய நாகராஜுலு, அவர்தம் சகோதரிகள் குடும்பத்தார் & ரமணி ஆகியோர்க்கு நன்றி.]

17 thoughts on “உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்

  1. Ramany.S says:

    டியர் சார்,
    புதுவையைப் பற்றிய அழகான பதிவுக்கு நன்றி.
    புதுவை வந்து கம்பனை மட்டும் களித்துவிட்டு, ஒரு வம்பனை சந்திக்காமல் போனது உங்கள் அதிர்ஷ்டம்… அல்லது எனது துரதிஷ்டம்…! வேறென்ன சொல்ல..!
    நான் மட்டும் இருந்திருந்தால் உங்கள் கையால் ‘புதுவையும் புட்டியும்’ என்கிற தலைப்பில் ஒரு சிறப்பு சிறுகதை எழுத முயற்சி செய்திருப்பேன்..! என் ஆஸ்திரேலியா பயணத்தால் உங்கள் புனிதம் பிழைத்ததற்கு கம்பனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்..!
    ( பின்குறிப்பு: புட்டி என்பது Bottle என்பதின் புதுவை செல்லச் சொல்)

    • Tamil Nenjan says:

      புட்டிப்பால் குடிச்சி வளராவிட்டாலும் கூட, புடி என்றால் என்ன மீனிங்கு என்ப்து எல்லா ஊர் பாஷையிலும் நீங்க நினைக்கும் அதே தான்.

      ஆனால் புதுவைக் கம்பனின் தரிசனம் அடுத்த பொன்விழா கம்பன் விழாவிலும் தொடரும்…

    • Asokan says:

      I missed TNK by chance. Other wise I would have made to take bath in Pondy water.TNK make it next time(forget Kamber… only ..

      • Tamil Nenjan says:

        விழாவின் பார்வையாளர் வரிசையில் கடலூரிலிருந்து 49 வருடமாய் தொடர்ந்து கம்பன் விழாவிற்கு வரும் அன்பரை சந்தித்தேன். அந்தமானிலிருந்து வரும் நண்பரை சந்திக்க நேரம் ஒதுக்காத நண்பரைவிட அவர் பரிச்சயம் நிம்மதியாய் இருந்தது.

  2. One more feather on your cap ! Are you wearing any cap?

  3. Anbu Jaya says:

    ‘சக்கர் ஆத்தா ஹை’, பாய்.’ – இந்தி என்று நினைத்துக் கொல்லங்க, இல்ல, கொள்ளுங்க. ‘சீதையும் மண்டோதரியும்’ சிதையும் மண்டோதரியும் ஆயிடுச்சே, பாண்டிச்சேரி மகிமை!!!!!

    வழக்கம்போல உங்கபாணியில பயணக்கட்டுரை கம்பனை வம்புக்கு இழுத்து எழுதியதற்காக நன்றி நண்பரே. கோலாலம்பூரில் இருக்கிறேன். இன்று சென்னை செல்கிறேன். நெட் கிடைக்கும்போது எழுதுகிறேன். ஜூன் 12 வீடு திரும்பியதும் வழமை தொடரும்.

    • Tamil Nenjan says:

      ”ஃபேஸ்புக்கில் எழுத்துப் பிழைகள் சகஜமப்பா..” என்று ஏற்றுக் கொண்டாலும், சீதையினை சிதை ஆக்குவதை என் சிந்தை ஒப்புக்கொள்ளவில்லை. சிங்கையில் இருந்தாலும் உங்கள் கண்ணில் பட்டது தான் விந்தை.

      திருத்தி விட்டேன்… தொடர்ந்து தொடர்வதற்க்கு என் தொடர் நன்றிகள்…

  4. jayarajanpr says:

    // பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… //

    எனக்கு பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது…

    • Tamil Nenjan says:

      பட்டுன்னு சிரிச்சிட்டு, சட்டுன்னு எழுதிட்டீங்களோ!!!! நன்றி…

  5. jayarajanpr says:

    இந்தக் கட்டுரையை இன்றுதான் முழுமையாகப் படித்தேன். ஐயாவுடன் உங்களுக்கு ஒரு நல்ல பலமான அறிமுகம் கிடைத்திருப்பது அந்தமானுக்கும் சென்னைக்கும் பாலம் போட்ட உணர்வை எனக்குத் தந்தது. எனக்கு அந்த வாய்ப்பு நழுவி விட்டது. இருப்பினும் எப்படியாவது, அடித்துப் பிடித்து ஐயாவை பார்த்து விட வேண்டும், அவருடன் பேச வேண்டும், நிழற்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவா என் நெஞ்சில் தினமும் நிழலாடிக் கொண்டே இருக்கின்றது.

    • Tamil Nenjan says:

      அந்தமான் பொறியாளருக்கே சந்திப்பு சாத்தியமாகும்போது சேலம் – சென்னை, அதுவும் தொழில்சார்ந்த தொடர்பும் இருப்பதால் சந்திப்பு விரைவில் நிகழும் வாழ்த்துக்கள்.

  6. jayarajanpr says:

    மூத்தவர் இளையவர் என்று இரண்டு கம்பர்களின் சந்திப்பை ஆவலுடன் வாசித்ததால், இராமாயணக் கம்பர் மீது எனக்கு ஆர்வம் இப்போது ஏற்படவில்லை.

    • Tamil Nenjan says:

      மூத்தவரை வேண்டுமானால் கம்பர் என்று சொல்லலாம். இளையவர் வெறும் வம்பர் தான்.

      கம்பனிடன் என்ன இருக்கிறது? என்று கேட்ட பலர், பின்னர் கம்பரிடம் என்ன இல்லை!!! என்று வியந்துள்ளனர்… நீங்களும்….?????

  7. Thangapandian Ramalingam says:

    நல்ல பதிவு திரு கிருஷ்ணமூர்த்தி! கம்பனாலும் தமிழாலும் உறவுகள் எப்போதும் மேம்படும்!

    • Tamil Nenjan says:

      உங்கள் நட்பு கிடைத்தது கம்பனின் அருள். தமிழோடும் கம்பனோடும் தொடர்வோம் ஐயா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s