வரலாறு என்பது பலருக்குக் கசக்கும். சிலருக்கே அது இனிக்கும். இப்படித்தான் அந்தமானில் ஒரு மூத்த தமிழாசிரியரும் கல்வி அதிகாரியுமான ஒருவர் சொன்னார். ’இந்த ஆண்டில் இந்த அரசர் பிறந்தார். வளர்ந்தார். சண்டையெப் போட்டார்.. மண்டையைப் போட்டார். அதன் பின்னர் இன்னொருவர் வந்தார் என்பதை வெறும் தகவல் தொகுப்பாய் வரும் செய்திகள் கொண்ட வரலாறுகள் எனக்கும் அறவே (ஆமா… இதுக்கும் என்ன பொருள்?) பிடிப்பதே இல்லை’ என்றார்.
நான் அவரிடம் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். ”நீங்கள் அந்தமானுக்கு எப்போது வந்தீர்கள்?” சரியான தேதியுடன் தொடர் செய்திகள் பலவும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படு சுவாரஸ்யமாக. ”உங்கள் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லும் போது, மன்னர்கள் வரலாறு மட்டும் கசக்கிறதா?” என்றேன்.
நான் 1986 மே மாதம் அந்தமானில் வந்தேன். இது சாதரணமாய் ஒரு, போரடிக்கும் வரலாற்று நிகழ்வு. ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட பல செய்திகள் சொன்னால் மெருகு கூடும். அப்போது மழை செமெயாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. (அந்தமானில் பருவ மழை மே மாதத்தில் தொடங்கும் என்பது செய்தி) அப்போது ஆட்டோவே அந்தமானில் இல்லை. (டாக்சிகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தன அப்போது). ஒரு பைக் கூட அப்போது பார்க்க முடியலை. (பஜாஜ் ஸ்கூட்டர் தான் அந்தமான் ரோடுக்கு உருவானது என்று அப்போது நம்பினர். 1998 வாக்கில் தான் ஆட்டோவும், பைக்கும் வர ஆரம்பித்து இப்போது ஸ்கூட்டரை வைத்திருப்பவரை ஒரு மாதிரியா பார்க்கும் அளவு வரலாறு மாற்றிவிட்டது).
ஆக, வரலாற்றில் பிழை இல்லை. அதனைச் சொல்லும் வகையில் தான் பிழை நிகழ்ந்துள்ளது என்று சொல்லலாமா? ஆனால் வரலாற்றுப் பொக்கிஷங்களாய் வந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே நின்றன ஒரு காலத்தில். பொன்னியின் செல்வன் தொடங்கி, கடல் புறாவில் பயணித்தவர்கள் வரலாற்றையும் சேர்த்தே பின்னிப் பினைந்து ரசித்துப் படித்தவர்கள் தானே. வரலாறு உங்களுக்கும் இனிக்க வேண்டுமா? மதன் எழுதிய “வந்தார்கள்..வென்றார்கள்” படிங்க. ஆடியோ புத்தகமாவும் வந்திருக்கு. நீண்ட பயணங்களில் ஜாலியா கேட்டுக் கொண்டே போகலாம்.
வரலாற்றை நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ, இன்றைக்கு சாதாரண நிகழ்வுகள் நாளை சுவாரஸ்யமான் (பிற்கால மக்களும், உங்களைப் போலவே வெறுக்கும்) வரலாறாக மாறும் என்பதே வரலாறு. சிலர் வரலாற்றைப் படிக்கின்றோம். சிலர், அதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரலாற்று நாயகன்… இல்லை இல்லை… நாயகர் நரேந்திர மோடி. அப்படி என்ன தான் செய்து விட்டார் அந்தக் குஜராத்தில்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்திருக்கும் என் மூதாதையர்கள் வாழ்ந்த வரலாற்று இடங்களையும் என் வாரிசுகளுக்கு காட்டவும் ஒரு டிரிப் அடித்தேன்.
குஜராத் தலைநகரில் தங்கி இருந்த போது, வழக்கம் போல் அந்த ஊர் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன். (இப்படி ஜாலியா டூர் வந்த இடத்திலும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று மனைவி வழக்கமாய் கேட்டார்.) அன்றைய செய்தியில் ஒரு சுவையான தகவல் இருந்தது. ஒரு சூட்கேஸ் தொலைந்து போன சந்தோஷத்தில் இருந்தவர், அளித்த மகிழ்வான பேட்டியின் செய்தி அது. பொட்டி காணாமப் போனா, சந்தோஷமா பேட்டி குடுப்பாகளா என்ன? இருந்ததே…. விஷயம் இது தான்…
பெட்டி தொலெஞ்சி போனதெப் பத்தி அந்த குஜராத்திக்காரர் அவ்வளவு கவலைப் படவில்லையாம். அதில் இருந்த ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்டுகள், லைசன்ஸ் இப்படி பல கார்டுகளும் அதே பொட்டியில் இருந்திருக்கின்றன. என்ன தான் இ கவர்னன்ஸ் என்று சொன்னாலும் கூட, ஒட்டுக்கா எல்லா கார்டும் போனதில் கதி கலங்கி இருந்தார் அவர். ஓரிரு நாட்களில் ஒரு கவர் தபாலில் வந்திருக்கிறது. பொட்டியைத் திருடின நபர், பொறுப்பாய் இதெல்லாம் அனுப்பி உதவி செய்துள்ளார் என்பது தான், நான் படித்த செய்தி. ஆக, குஜராத்தில் திருட்டுப் பசங்களே இவ்வளவு யோக்கியமா இருக்கிறச்சே, நல்லவங்களைப் பத்திச் சொல்லவும் வேண்டுமோ??
குஜராத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாய் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. மகளிர் அதுவும் இஸ்லாமிய மாதுக்கள் கூட மது இல்லாத வீதிகளில் இரவு நேரங்களில் உலாவுவதைக் காண முடிந்தது. சாலைகள் எங்கும் சோலார் லைட் வசதிகள். (அதெப்படி குஜராத்தில் மட்டும் இந்த சோலார் விளக்குகள் ஒழுங்கா எரியுது?) ரோட்டில் சுத்தும் போது தொடர்ந்து வரும் காற்றாலைகள் எங்கு பாத்தாலும் இருக்கிறது. திடீரென்று சாலை ஓரங்களில் அதிக மரங்கள் தென்பட ஆரம்பித்தாலே, அப்புறம் ஏதோ தொழிற்சாலை வருவதை அறிவிக்கும்.
குஜராத் புராணத்தை விட்டுவிட்டு, லேசா நம்ம மீடியாக்கள் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யும் மோடி புராணத்துக்கு (மறுபடியுமா?) வருவோம். மோடி நாய் பற்றி பேசினாலும் சரி, டீ பற்றிப் பேசினாலும் சரி, அது தான் தலைப்புச் செய்திகள், எல்லா டீவிகளிலும். (ஆதித்யா போன்ற டீவிகள் நீங்கலாக). இதில் ஹைலைட்டான செய்தி, மோடி அவர்கள் அந்த எமோஷன் ஆன நிமிடங்கள். ஆனால் நம் மீடியாக்கள், நமோஷனல் என்று அலங்கரித்து ஆங்கிலத்துக்கே புது வார்த்தை வார்த்துத் தந்து விட்டார்கள்.
இப்படித்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி நம்ம ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முன்பு ஒரு புத்தகம் எழுதினார் ஹிந்தியில். தகவல் பெறும் உரிமை சட்டம் என்பதை ஹிந்தியில் ஸூசனா கா அதிகார் என்பர். (இதில், இந்தக் கா போடவா? கீ போடவா? என்பது ஹிந்தியில் நமக்குப் பெரும் தலைவலி) ஆனால் நூலுக்கு அவர் ”ஸூசனாதிகார்” என்று பெயர் வைத்து புது வார்த்தையினை ஹிந்திக்கு வழங்கினார்.
அப்படியே சேனல் மாத்தி நம்ம “கம்பர்” டீவிக்கு மாற்றிப் பாக்கலாம். அங்கும் இதே மாதிரி புதுப்புது வார்த்தைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் தமிழ் வயலும் வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. கம்பன் வயலில் செம அறுவடை நடக்கிறது. எம்பி, உம்பி, நும்பி இப்படிப் பல. என் தம்பி, உன் தம்பி, நுன் தம்பி இப்படிப் பல அரத்தங்கள் வரும் படி புதுசு புதுசா பாட்டு வைக்கிறார். என்ன நான் கதை உட்ற மாதிரி தெரியுதா? ஒரு பாட்டு சொன்னா நம்புவீங்க தானே?
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்
ஆழமான கங்கையில் படகோட்டியான சிம்பிள் குகனிடம்,” என் தம்பி உன் தம்பி; நீ நன்பெண்டா; சீதை உனக்கு மச்சினி, மச்சி…” இப்படி தன் மச்சான் சொன்னதை நினைத்து சீதை கலங்கிய இடம் தான் இந்தப் பாட்டின் இடம் பொருள் விளக்கம். இந்தப் பாட்டை வைத்து பலர் பலவிதமான விளக்கம் சொல்லிவிட்ட காரணத்தால் நான் வெறும் எம்பி – என் தம்பி எனபதை மட்டும் சொல்லி கலண்டுக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய “அம்பறாத் தூணி” படியுங்கள்.
வரட்டுமா??
இபோதைக்கு இதே போதும் !
உங்கள் ஒரு வார்த்தைக்கே பல பொருள் இருக்கும். இந்தப் பதிலுக்குள் ஏதும் பொருள் உண்டோ?
நல்ல சிந்தனை. வழக்கம்போல உங்க பாணியில மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் பொருத்தமான முடிச்சு போட்டுட்டீங்க நண்பரே. பாராட்டுகள்.
எனது பதிவின் தொடர் கருத்துக்கு நன்றி.
இளமையில் படித்து படித்து புளகாங்கிதமடைந்த சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். திரும்பி பார்க்கும் போது அதில் சாமானிய மக்களின் வாழ்வைப் பற்றி செய்தி குறைவெனவே தோன்றுகிறது. குடந்தை சோதிடரையும்,ராக்கம்மாளையும்,வைத்தியர்மகன் பினாகபாணியையும் சாமானியர்களாய் நாவல் காட்டாது .அரசு அல்லது அரசியல் பணியில் ஈடுபாட்டிருக்கும் நபர்களாகவே சித்தரிக்கும். ஒரே ஒரு இடத்தில் குதிரையின் குளம்புகளுக்கு இரும்பு லாடம் அடிப்பவரை தொட்டுச் செல்லும்.இத்தனைக்கும் ஐந்து பாகம்.
வால்டர் ஸ்காட்டின் சரித்திர நாவல்கள் வாசித்த உந்துதலில் நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்றைச் சார்ந்து எழுதிய சரித்திர நாவல். அப்படித் தானிருக்கும்.
நீலகண்ட சாஸ்திரியின் narrative historyஇல் இருந்து முரண்பட்டவர்கள் உண்டு.
மார்க்சிய வரலாற்றாய்வாளர்களும், அமெரிக்க வரலாற்றாய்வளர்களும் நிறையவே முரண்பட்டிருக்கிறார்கள்.
சாமானிய மக்களின் வரலாற்றை சொல்லாத எந்த வரலாறும் முழுமையாகாது…
(தமிழில் கே.கே. பிள்ளை அவர்களின் தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும் ஒரளவு சாமானியர்களை தொட்டுச் செல்லும்).
இத்தனைக்கும் இன்றுவரை சாமானியர்களே பெரும்பாண்மையானவர்கள்.
பெருந்தனக்கார்ர்களும்,அரசியல்வாதிகளும், புதிதாய் கொஞ்சம் காசு பார்த்த நடுத்தர மக்களும் ஆக கூடி 20 விழுக்காட்டை தாண்ட மாட்டார்கள்.
இந்த பெரும்பாண்மை சாமானியர்கள் மதச்சார்பற்றவர்கள்,அதாவது மதத்தை அதிகம் நாடி அதனால் லாபமடையாதவர்கள்.மூன்று வேளை சோற்றுக்கே வழியில்லாதவர்கள்..ஆன்மாவை தேட எந்த வழி சரியான வழியென்று எங்கே சிந்திக்க போகிறார்கள்?
அந்த பெரும்பாண்மையினர் முக்கியம் பெறும் வகையில் வரலாறு மாறட்டும்.
பிரபா….
உங்கள் ஆம் ஜனதா வரலாற்றில் இல்லையே என்ற கவலை நியாயமானது தான். “உடையாரில்” 2ம் பாகத்திலேயே பொது மக்கள் பங்கு தூள் கிளப்புகிறது…
கருத்துக்கு நன்றி.