கொரங்கை வளத்து கிளி கையில்…


awas anjin

பொதுவா நாய் பட்ட பாடுன்னு சொல்றதெக் கேள்விப் பட்டிருப்பீங்க… [எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.. ’இந்தக் ”கேள்வி”ப்படுதல் என்று ஏன் வந்தது?’ என்று. எதாவது ஒரு பதில் சொல்லிவிட்டு, சொல்லக் ”கேள்வி” என்று சொல்வதும் உண்டு. இது மாதிரியான “கேள்வி” பற்றிய கேள்வி ஞானம் அதிகம் எனக்கு இல்லாததால், மீண்டும் நாய் டாபிக்குக்கே தாவலாம்] ஆனா எனக்கு என்னவோ, நாயை வளர்ப்பது தான் நாய்பட்ட பாடு என்பது சமீபத்தில் தெரிந்தது.

என் பையனுக்கு அடிக்கடி இந்த மாதிரி எண்ணம் வரும். ’டாடி… நாம ஒரு நாய் வளத்தா என்ன?’. வழக்கமாய் முடிவெடுக்கும் ’சக்தி’ படைத்த, இல்லத்தரசியிடம் மெஸேஜ் ஃபார்வேர்ட் ஆகும். ’இவனை வளக்கிறதுக்கே நமக்கு நாக்கு தள்ளிப் போகுது. அதிலெ இன்னொரு நாய் வேறெயா?’ இத்தோடு அந்த டாபிக்குக்கு முற்றுப் புள்ளி போடப்படும். நம்ம வீட்டுக் கதை இப்படி இருக்க, நாய் வளர்க்கும் அனுபவம் எனது பக்கத்து வீட்டுக்காரர் மூலம், எங்கள் வீட்டில் தீனிக்காய் திணிக்கப்பட்டது தான், அந்த நாய்க்கு வந்த சோதனைக் காலம்… நமக்கும் தான். (இப்படி இதெல்லாம் எழுதப் போறேன்னு அந்த நாய்க்குச் சத்தியமாய்த் தெரியாதுங்க..)

என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மிருக வைத்தியர். 16 வயதினிலே படத்தில் மயிலை மடக்கப் பார்க்கும் அதே மாட்டாஸ்பத்திரி டாக்டரே தான். ஆனால் வயது மட்டும் இன்னும் 16 மாதத்தில் பதவி ஓய்வு பெறும் வயது. செய்யும் தொழிலில் பக்தியும் அதிகம். பல ஆண்டுகளாய் நாய் குடும்பத்தை வளர்த்து வருகின்றார் அந்த வங்காளத்து பிராமணர். வாசலில் ஆவாஸ் அஞ்ஜின் (ஞபகம் இருக்கா…? விவேக் கடிபட்ட காட்சி?) என்ற போர்ட் தான் இல்லையே தவிர, ஒரு ஆளையும் உள்ளே விடாது… காத்து நிற்கும், அந்தக் காளி என்ற தாய் நாயும், கல்லூ என்ற மகன் நாயும்.

திடீரென நமது பக்கத்து வீட்டுக்காரருக்கு குடும்ப சகிதமாய் அவசரமாய் கொல்கத்தா கிளம்ப வேண்டிய வேலை வந்தது. ஆஃபீசில் அவரது வேலையினை கூடுதல் பொறுப்பாய், ஒரு டாக்டர் பார்ப்பார் என்று உத்திரவு கிடைத்தது. அப்படி எந்த வித அரசு உத்திரவும் இல்லாமல், அந்த தாய் மகன் நாயை பராமரிக்கும் உபத்திரவம் நம் கைக்கு வந்து சேர்ந்தது.

பை நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பெரிய்ய சைஸ் பிரட்டும் நம் கையில் குடுத்து, “என் கண்ணெயே உன்க்கிட்டெ கொடுத்துட்டுப் போறேன். ஆதில் ஆணந்தக் கண்ணீர் தான் எப்போது பாக்கணும்” என்று நம்மிடம் சொல்லாமல் சொல்லி, கண்கலங்கி அந்த நாய்களிடமும் விடைபெற்றுச் சென்றார்.

அடுத்த நாள் காலையில், பொறுப்பாய், அந்த வாயுள்ள ஜீவன்களுக்கு உணவளிக்க (ஜாக்கிரதையாய் பூட்டிய கேட்டுக்கு வெளியேயே இருந்து, அவசரத்திலும் குறுக்கே கம்பி இருப்பதை மறவாமல்) பேப்பர் இலை பரப்பி அழைத்தேன். எனக்குத் தெரிந்த தமிழ் ஆங்கிலம் சௌராஷ்ட்ரம் ஹிந்தி தெலுங்கு என்று எல்லா பாஷையிலும் கூப்பாடு போட்டுப் பாத்தேன். ம்..ஹும்…ஒன்றும் பயனில்லை. கூப்பிட்ட குரலுக்கும் பதில் இல்லை. இந்த நாய்க்கு சோறு போட, ஒரே நாளில் பெங்காலி கற்றுக் கொள்ள பாலாஜி பப்ளிகேஷன்ஸ் எந்த நூலும் போட்ட மாதிரி தெரியல்லை.

இதே யுத்தம் இரண்டாம் நாளும் தொடர்ந்தது. அன்றும் அந்த நாய்கள் அன்னாவிரதம் செய்து அடம் பிடித்தன. (உண்ணாவிரதம், இந்த அன்னா ஹஜாரே வரவுக்குப் பிறகு அன்னாவிரதம் ஆகி விட்டிருப்பதை, நாய்க்கு மத்தியில் சற்றே மோப்பமிடவும்). ரெண்டு நாள் பிஸ்கெட்டை, நாமெ தின்னு தீத்துட்டு நாய்களை கவனிக்காமெ விட்டோம் என்ற பழிக்கு அஞ்சி, கொல்கொத்தாவுக்கு ஃபோன் செய்து நிலவரம் சொன்னேன். அவரும் அழு குரலில், அது அப்படித்தான், ரெண்டு நாள் நான் இல்லாவிட்டால் இப்படி பட்டினி கிடக்கும், நாளை முதல் சாப்பிட ஆரம்பிக்கும் என்று ஹிந்தியில் அழுதார்.

அதெ முன்னாடியே சொல்லியிருக்கலாமே. அப்படி சொல்லி இருந்தா, ரெண்டு நாள் கழிச்சே வந்திருப்பேனே என்று கேட்டேன் அப்பிராணியாய், அந்த பிராணி அபிமானியிடம். [விவேக் நடத்தும் கோன் பணேகா குரொபதி நிகழ்சியில், மயில்சாமி கேட்கும், ’அந்தக் கடைசி கேள்வி மட்டும் கேளுங்க ஒரு கோடி ரூபாக்கு’ சீன் மனசில் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது]. ”இதெச் சொல்லியிருந்தா, ரெண்டு நாள் பட்டினி + உங்களுடன் ‘வாங்க பழகலாம்’ ஸ்டைலில் பழக ரெண்டு நாள், ஆக நான்கு நாள் ஆயிருக்கும். அதனால் சொல்லலை” என்று தன்னிலை விளக்கம் அளித்தார். [இதில் ’வாங்க பழகலாம் ஸ்டைல்’ மட்டும் என் இடைச் சொருகல்].

போதாக் கொறைக்கு வீட்டிக்குள் இருந்து, ”ஒரு நாய்க்கு சோறு ஊட்ட முடியல்லெ… நீங்கள்ளெல்லாம் என்னத்தெ ஆஃபீசில் குப்பெ கூட்டி..” என்று அங்கலாய்ப்பு வேறு. (ஒரு நாயா?? ரெண்டு நாய்கள் ஆச்சே !!! – திட்டு வாங்கும் போது எண்ஜாய் பண்ணனும்..இலக்கணம் எல்லாம் பாக்கப் படாது – இது கமலின் திட்டுவாக்கு). முத்தாய்ப்பாய், கிளியெ வளத்து கொரங்கு கையிலெ கொடுத்த கதையாப் போச்சி என்று சொல்ல, நான் இடை மறித்து, கொரங்கெ வளத்து கிளி கையில் கொடுத்துட்டாரு என்றேன்.

எந்தப் பொண்ணுமே கிளி மாதிரி இல்லாட்டிக் கூட, கொரங்கு மாதிரியான கணவன் வந்து வாய்க்கின்ற போது, அந்த கிளிப் பட்டம் அவங்களுக்கு இலவசமாய் தரப்படுது. அது கிடக்கட்டும் ஒரு பக்கம். மரத்திலெ, சம்பந்தமே இல்லாமெ எதுக்கு கிளியையும் குரங்கையும் எதுக்கு ஒன்னு சேத்துப் பேசணும்? இந்த இந்த மாதிரி ஏதாவது டவுட்டு வந்தா, நாம நேரே, கம்பர் ஸ்டோருக்கு ஓடிப் போயிடுவோம்.

கம்பர் கடையில், கம்பர் ஐயா சம்மணம் போட்டு உக்காந்திருக்க, ”இந்த கொரங்கு கிளி சமாச்சாரமா ஏதும் சரக்கு இருக்கா?’ என்று கேட்டேன். அவர் தன்னோட ஐபேடில் தேடிப் ப(பி)டித்து தந்தார். அவர், எப்பொ எது நான் கேட்டாலும், அக்கவுண்டில் எழுதி வச்சிட்டுக் கொடுத்திடுவாரு. நமக்குள் ஒரு சின்ன சின்ன அண்டர்ஸ்டாண்டிங். காந்தி கணக்கு மாதிரி, நமக்குள்ளெ ஒரு கம்ப கணக்கு..

நாம பைக் ஸ்டார்ட் செய்யும் போது, ஒரு ஒதெ ஒதெச்சி செய்யும், அதே ஸ்டைல் கம்பர் காட்டுகிறார். அநுமன் மகேந்திர மலையிலிருந்து ஒரு ஒதெ ஒதெச்சி (ஏர் லங்கா விமானம் இல்லாமல்) இலங்கைக்கு டேக் ஆஃப் ஆகின்றார். அந்த ஒரு உதையில் என்ன என்ன நடந்தது? என்பதை ரொம்ப விரிவா சொல்றார் கம்பர். (அப்பொ கவுண்டமணி செந்தில் உதைக்கும், கம்பர் தான் முன்னோடியோ… நீங்க உதைக்க வர்ரதுக்கு முன்னாடி ஒரு சாம்பிள் மட்டும் சொல்லிட்டு ஓடிப் போயிர்றேன்)

அந்த மலையில் வித்யாதரர்கள் கீறாங்களாம். அவங்களை அவய்ங்க மனைவிமார்கள் கட்டி ஏற்றாகளாம். (அங்கேயுமா???) வெறுத்துப் போயி அவய்ங்க கட்டிங் அடிக்கிறாங்களாம். போதையோடு வந்தவங்களை மேலும் கூடுதலா கட்டி ஏற…. அப்பொத்தான் அநுமன் மலையை உதைக்க, மலை ஒரு ஆட்டம் போடுதாம். அந்த ஆட்டத்தில், கட்டி ஏறிய கட்டழகிகள், பயந்து போய்… பயம் போக, கட்டிப் புடி கட்டிப்புடிடா என்று பாட ஆரம்பிக்கிறார்களாம். அப்படியே மகிழ்ச்சியின் உச்சிக்கே போகும் போது, அடடே…. நாம மட்டும் உச்சிக்கு வந்துட்டோமே!!! வந்த அவசரத்திலெ, நம்ம வீட்டிலெ இருக்கும் கிளியெ மறந்திட்டோமே… என்கிறார்களாம்.

இது தான் குரங்கு உதைக்க, கிளி ஞாபகம் வந்த கதை. இதெப் படிக்கும் போது உங்களுக்கு எந்தப் பைங்கிளி ஞாபகம் வந்ததுன்னு ஒரு வரி எழுதுங்க.. அதுக்கு முன்னாடி கம்பரோட நாலு நல்ல வரியெப் படிச்சிடுங்க ப்ளீஸ்…

ஊறிய நறவு முற்ற குற்றமு முணர்வை யுண்ணச்
சீறிய மனத்தர் தெய்வ மடந்தைய ரூடல் தீர்வுற்று
ஆறின ரஞ்சு கின்றா ரன்பரைத் தழுவி யும்பர்
ஏறின ரிட்டு நீத்த பைங்கிளிக் கிரங்கு கின்றார்.

வில்லங்கப் பொருள் விளக்கம்:
ஊறிய நறவு – அந்தக் கால ஊறல் (இந்தக் கால கட்டிங்)
சீறிய – கட்டி ஏற
மடந்தையர் – நல்ல குட்டிங்க அல்லது சூப்பர் பிகருங்க
உம்பர் – ஆகாசம்

நாயை அப்போவென்று விட்டுவிட்டதால், ஒரு சின்ன பின் குறிப்பு: இலட்சத்தீவுகளுக்கு செல்லும் முன் கவனிக்க. இந்த தீவுகளில் “ஆவாஸ் அஞ்ஜின்” என்ற போர்டு பாக்கவே முடியாது. வாயில்லா ஜீவன் அந்த நாயில்லா தீவுகள் அது.

கம்பன் தேடல்கள் தொடரும்.

10 thoughts on “கொரங்கை வளத்து கிளி கையில்…

  1. Anbu Jaya says:

    நல்ல ஹாஸ்யமான பதிவு. ஆன, நம்ப கம்ப மாமா பாத்தா கொண்டே புடுவாரு கட்டிங், குட்டிங்-க வார்த்தைகளைக்கு. இல்லை ராமயணத்த திருப்பி எழுதுவாரு இந்த வார்த்தைகள வச்சி. வாழ்த்துக்கள்.

    • Tamil Nenjan says:

      உங்கள் கருத்துக்கு நன்றி..நன்றி.; இந்த மாதிரி எல்லாம் நான் எழுதுவேன்னு முன்னாடியே கம்பருக்கு தெரிஞ்சிருந்தா, அவர் ராமாயணத்தையே எழுதி இருக்க மாட்டாரு என்ற கமெண்ட்டும் வந்தது.

      நானு கம்பரையே கலாய்க்கும் போது, என்னை மததவங்க கலாய்க்க மாட்டாகளா என்ன??.

      • ஹாஹா ஹாஹா:-)))

        எப்படி இவ்வளவு நாள் என் கண்ணில் படாமல் இருந்தீங்க:!!

      • Tamil Nenjan says:

        எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமே.. கம்பரே இப்பத்தான் கையில் வந்துள்ளார்…இப்பொ உங்க கண்ணில் பட்டுள்ளேன்…தொடர்வோம்..தொடர்ந்து..
        .

  2. Hari Krishnan says:

    ஒரு பாடலை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாகப் பார்க்கும் பார்வைக்கு வாழ்த்துகள். சீறிய மனத்தர் என்றால், ஊடலினாலே கோபங் கொண்ட (சீற்றமடைந்த) மனத்தை உடையவர்கள் என்பது பொருள். கட்டி ஏறுதல் என்ற பொருள் எவ்வாறு வருகின்றது என்பது விளங்கவில்லை. இதுவும் ஒரு விளையாட்டோ? வாழ்க.

    • Tamil Nenjan says:

      உங்களின் பதிலுரைக்கு நன்றி ஐயா.. ”சீறிய மனத்தர்” என்பதற்கு இவ்வளவு நெடிய பொருள் இருப்பது தெரியாதய்யா… பாடலைத் தொட்டு எழுதுமுன் அதனை முழுதும் விளங்கிக் கொண்டு எழுதலாம் என்று யோசித்து, வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்களின் உரையினை வாங்கிப் படித்து எழுதிய முதல் பதிவு இது. அவ்வுரையில் “மிக்க சினம் கொண்ட மனத்தை உடையவராய்” என்பதை தழுவி நான் எழுதியதாலும், அந்தத் தழுவல் ஊடல் பற்றிய செய்தி சொல்வதாலும் நான் சொல்லிய “கட்டி ஏறுதல்” என்ற சாதரண சொல் வழக்கு சரியாகும் என்று நினைத்து எழுதியது.

  3. #எந்தப் பொண்ணுமே கிளி மாதிரி இல்லாட்டிக் கூட, கொரங்கு மாதிரியான கணவன் வந்து வாய்க்கின்ற போது, அந்த கிளிப் பட்டம் அவங்களுக்கு இலவசமாய் தரப்படுது. #
    உயர்வு நவிற்சி அணி என்பார்களே ,இதுதானா ?

    • Tamil Nenjan says:

      இருக்கலாம். ஆனால், குரங்குப் பட்டம் என்பது கணவர்மார்களுக்கு மொத்தமாய் தரப்பட்டிருப்பது தான் வேதனையான செய்தி. உங்கள் பதிலுரைக்கு நன்றி.

  4. M.S.Sekar says:

    குரங்கு பட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பது தவறு. இதற்க்காக, உலக கனவன்மார்கள் சங்கத்தின் தலைவன் என்ற முறையில் வன்மையான கன்டனத்தை தெரிவிக்கிறேன். எனது கிளி சொல்லியதின் பேரில் இதை பதிவு செய்கிறேன்.

    அது சரி. நாய்க்கு சாப்பாடு போட்டிங்களா இல்லையா ?

  5. Tamil Nenjan says:

    உலக கணவர்மார்கள் சங்கத் தலைவரே…(பெயரை கணவர் என்று மாற்றவும்)…

    நாய்க்கு சாப்பாடு பத்தியா கேட்டீக?? ரெண்டு நாள் கழிச்சி அரியர்ஸோட சாப்பிட்டு அந்த பிஸ்கெட் காலியாகிவிட. ஒருஞாயிறு முழுதும் அந்த பிஸ்கட் தேடி அழைந்து… ஸ்… அப்பாடா… முடியலை….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s