மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?


இதென்ன கேள்வி?? பொண்டாட்டி தொந்திரவு வேணாம்னு தானே, மாஞ்சி மாஞ்சி பேஸ்புக்கு முன்னாடி மணிக்கணக்கா கெடக்கிறாய்ங்க… இதுலெ.. கூப்புட்றது எப்படின்னு…. நல்லா கேக்குறானுங்கப்பா கொஸ்சினு…இப்படி உங்க மனசுலெ ஓடும் படம் எனக்கும்.. கொஞ்சம் கேக்கத்தான் செய்யுது.. ஏன்ன்னா… நானும் உங்க கட்சி தானே!! மனைவியை எப்படி அழைப்பது? என்ற கேள்வி வந்த்துமே…. செத்த இருங்க… என் வீட்டுக்காரி அழைப்பு வந்திருக்கு.. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, அப்புறம் வாரேன்…(ஐ பி எல்லுக்கு கமான், புலாவா ஆயா ஹைன்னு சொல்லிட்டு ஓட்ற மாதிரி ஓட வேண்டி இருக்கு பாருங்களேன்!)

மனைவியை எப்படி அழைப்பது என்பதற்குப் பதிலா… மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்ற வித்தையை கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே… அவங்க உங்க கிட்டெ கேக்கும் போதே, அவர்களிடம் அந்த கேள்விக்கான பதில் இருக்கும். ரொம்பக் கவனமா கேக்கிற மாதிரி மொகத்தெ வச்சிக்கிடுங்க.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி மொக பாவனையா வச்சிக்கனும். எதிர் கேள்விகள், உங்கள் மேதாவித்தனைத்தைக் காட்டாமல், அவர்களின் மேதாவித்தனம் வெளிப்படும்படி கேக்கலாம். [என்ன சொதப்பலா சொன்னாலும், மேதாவித்தனம் மாதிரி, உச்சுக் கொட்டியிரனும்]. எல்லாம் முடிச்சு அவங்க என்ன நெனெச்சாங்களோ, அதை அவய்ங்க வாயிலிருந்து வரும் வரை பொறுமையா வெயிட் செய்யனும். அது வந்து விழுந்தவுடன், அட,,.. இதெத்தானெ நானும் நெனெச்சேன்ன்ன்ன்ன் என்று புளுகனும்… நல்ல தாம்பத்யத்தின் ரகசியம் வெளியே சொல்லிட்டேனோ??

சரீ… கூப்பிடு தொலைவில் இருக்கும் மனையாளை எப்படி கூப்புடுவது என்று கேட்டேனே… என்னங்க… ஏனுங்க.. ஏண்ணா, மச்சான், மாமா, மாமோய், என்று கணவர்களை கூப்பிடுவது தெரிகின்றது. மனதிற்குள் கடன்காரன் சனியன் என்று அழைப்பது இங்கு நாகரீகம் கருதி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அப்படியே, மனைவியை கூப்பிட அகராதிகள் தான் தேட வேண்டியுள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் இப்போதைக்கு வந்துவிட்டது. என் அன்பே, காதலியே, உயிரே, கண்ணே, அமுதே.. என்று கல்யாணத்துக்கு முன்னர் கொஞ்சிவிட்டு, அப்புறம் கல்யாணம் ஆன மயக்கத்தில், செல்லம்…செல்லக்குட்டி, செல்லக் கழுதெ..என்றெல்லாம் அழைப்பதும், அப்படியே கொஞ்ச வருடங்கள் கழித்து நாயே, பேயே என்று மனதிற்குள் அழைப்பதும் கணக்கில் வராது.

வட இந்தியர்களுக்கு ஒரு சௌகரியம் இருக்கிறது. டாக்டரின் டக்கர் மனைவியினை டாக்டராயின் என்றும், ஆசிரியனின் ஆசைமனைவியை உபாத்யாயின் என்றும் அழைப்பார்களாம். அப்பொ இஞ்ஜினியரான என் இனிய மனைவியை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன். இஞ்ஜினியராயின் என்று பதில் வந்தது.

அவங்க ஊர் பழக்கம் விட்டுத்தள்ளுங்க. அந்தமான் நிலவரம் பாக்கலாமே. பேர் சொல்ல குழந்தைகள் வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பெல்லாம் கொழந்தைகளோட பேரெ வச்சித்தான் அவங்க அப்பா அம்மாவைக் கூப்பிடராங்க… ரக்சிகா அப்பாவோ, விஜயம்மா என்றும் தான் வழக்கமாய் ஆகி விட்டது.

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா? (அப்பாடா அங்கே சுத்தி, அந்தமான் சுத்தி இப்பொ தலைப்புக்கு வந்தாச்சி…) மனைவியை தாய் என்ற உயர்நத இடத்தில் வைத்துப் பார்ப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே…இந்த இடத்தில் கமபரைக் கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ என்று படுது… கொண்டாந்துட்டாப் போச்சி…

காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே” என்று, இப்பொ சொல்லும் அதே ரேஞ்சுக்கு கம்பன் காட்டும் ஓர் இடம் இருக்கு. வாலிவதம் செய்த காட்சி.. ”ராமனே ஆனாலும் மறைந்திருந்து வாலியை கொன்னது சரியா?” என்று இன்னும் சர்ச்சை நடந்திட்டுத்தான் இருக்கு. அப்படி கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த சுக்ரீவன் அப்புறமா, ஓவரா ‘ஹேங்க் ஓவர்’ ஆகும் அளவுக்கு ஓவரா குடிச்சிட்டு இருந்தானாம். பார்த்தார் இளவல் இலக்குவன்… கோபம்னா கோவம்.. உங்கவூட்டு எங்கவூட்டு இல்லெ… அம்புட்டு கோவமா வேக நடை போட்டு கிஷ்கிந்தையில் நுழைந்தார். தடுத்தார் தாரை… விதவைக் கோலத்தில் வாலியின் மனைவி… பார்த்தவுடன் தன் தாயார்கள் நினைவு வந்ததாம். (தாயார்கள் என்பதில் கைகேயியும் அடக்கம்). கோபம் அடங்கியதாம்…
மனைவியின் கோபம் நம்மீது பாய்வதை தடுக்க, அல்லது ஒடுங்க, மனைவியை தாய் மாதிரி நினைக்கலாமோ!!??

அது வரைக்கும் சரீரீரீ…இதென்னெ மம்மீ என்று அழைப்பது? இதுக்கு விளக்கம் சொல்ல நீங்கள் என்னோடு இன்று பாஸ்போர்ட் விசா இல்லாமல் குவைத் வரவேண்டும்.

mammii

அங்கே தான் என் நண்பர் பழனிகுமார் தன் மனைவியை மம்மீ என்று அழைத்து வருவதைப் பார்த்தேன். சற்றே வித்தியாசமாகப் பட்டது. ”ஏன் இப்படி?” என்றேன். ”பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன். என் குழந்தைகளும் நாம் செய்வதையே அப்படியே செய்வது போல், அவர்களும் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன வம்பாப் போச்சே என்று, மம்மீ என்று குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க செய்த வேடிக்கையான ஏற்பாடு இன்றும் தொடர்கிறது” என்கிறார்.

எப்படி இருக்கு கதை..? இளைய தலைமுறை நல்லா இருக்க என்ன என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கு? உறவுமுறைகள் உட்பட..!!!

மீண்டும் ஒரு முறை கம்பர் கிட்டே போலாமே… அங்கே கணவரைக் குறித்துச் சொல்ல வேண்டும், அப்போது, மனைவியின் கணவர் என்று பிட்டுப் போடுகிறார் கம்பர். விரிவாப் பாக்கலாமா? இராமன் மேல் பாசம் கொண்டுள்ள கைகேயி இராமனை காடு அனுப்பும் போது தான் இப்படி வருகின்றது. ரெண்டு வரம் தர்ரதாச் சொன்னியே, ஒன்னிலெ எம் புள்ளெ நாடாளவும், இன்னொன்னுலெ சீதை புருஷன் காடாள்வதுமாக வரங்கள் ரெண்டும் கேட்பதாக வருகிறது கம்பனில்.

இராமன் என்று சொன்னால் எங்கே, ஒளிந்திருக்கும் பாசம் மேலே வந்துவிடுமோ என்று பயந்து, கம்பர் அதனை மறைத்துச் சொல்லாமல், ”சீதையின் கணவன்” என்று சொல்வது, இப்பொ நாம அந்தமான்லெ குழந்தைகள் பேர் சொல்லி அவங்க அப்பா என்று சொல்ற மாதிரி தானே இருக்கு?
வால்மீகி தான், கம்பரின் ”மூலம்”. ஆனால் வரிக்கு வரி காப்பி என்று மட்டும் சொல்லிட முடியாது. வால்மீகியின் வரிகளில், இராமனுக்கு பதவி ஏற்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்படியே பரதனுக்கு செஞ்சிட்டு (இராமனுக்குப் பதிலா பரதன் மட்டும்), இராமனை காட்டுக்கும் அனுப்பிடுங்க என்பதாய் வருகிறது.

பாவம் மாமியார் மருமகள் மீது என்ன பிரச்சினையோ, சீதை பெயரை கைகேயி இழுப்பதாய் கம்பர் சொன்னது இந்த வம்பனுக்குப் படுகின்றது. இதோ பாட்டும்… வருது:

ஏய் வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்..

அந்த கடைசி வரியில் வரும் சிறந்த என்பது இப்பொ வரும், காமெடியில் கலக்கும், “ரொம்ப நல்லவ” மாதிரி தெரியுது எனக்கு. உங்களுக்கு?

10 thoughts on “மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?

  1. jayarajanpr says:

    Janaranjagamaga ullathu…. arumai…

  2. பிரபா says:

    அறியா பருவத்தில்
    அம்மாவை இழந்து
    ஏங்கியவர்கள்…
    மனைவியிடத்தில்
    தாயைக் கண்டதுண்டு…
    தடுமாறி நின்ற போது
    நிறையோடு குறைகளையும்
    ஏற்றுக் கொண்டு அரவணைத்த
    என் மனைவியிடம்
    என் தாயைக் கண்டதுண்டு…
    “அம்மா”{ என்றே சமயத்தில்
    அழைத்ததும் உண்டு..
    விசுவாமித்திரன்
    ஒரு கட்டத்தில்..
    எல்லாம் கடந்து
    மேனகையிடம்
    தாயை கண்ட போது தான்
    மேனகை விலகினாளாம்..
    அவள் அபசரஸ.
    என்ன செய்வாள் …பாவம்..
    தாரத்தின் மார்பகம் ஈர்த்த போது
    அந்த ஈர்ப்பு என்னுள் இருந்து
    பிறக்க துடித்த
    குழந்தையின் பசியோ?
    கேள்வி எழுந்ததுண்டு…
    கணபதி கூட
    தாய் போல தாரம் தேடி
    இன்னும் குளக்கரையில்
    காத்து நிற்கிறாராம்..
    மனைவியை “மம்மீ….”
    அழைத்தாலென்ன…?

  3. I see a great thirst for Kamban’s Ramayanam in your blog. Even when a very complicated subject like how to address your wife, instead of searching models from latest Tamil; Cinemas, you are searching for support in Kamban’s Ramayanam

    • Tamil Nenjan says:

      Thanks for paying visit to my blog & wishing…

      • Anbu Jaya says:

        – “காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே-” இத மாதிரி தொல்காப்பியனே சொன்னதாக ஒரு இலக்கியப் பேச்சாளர் கூறக்கேட்டதாக நினைவு. ‘தாம்பத்திய வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா’-ன்னு சொல்லத் தோணுது

      • Tamil Nenjan says:

        உங்களின் கருத்துக்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s