”நான் ஏன் பிறந்தேன்?” என்று டிஎம்எஸ் குரலில் வாத்தியார் பாடிய பாட்டை எல்லாரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் ”எதுக்குடா பிறந்தேன்?” என்று மட்டும் தங்களின் மனசாட்சியை பார்த்துக் கேட்டிருக்க மாட்டீர்கள். நீ மட்டும் கேட்டியா? என்று திருப்பிக் கேட்கிறீர்களா? நான் கொஞ்சம் மாத்திக் கேட்கிறேன். ஏதாவது சிக்கல் வரும் போது என்னை நானே கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி: “ஆமா..இதெச் செய்றதுக்குத்தானா நான் பொறந்தேன்?” ஆகக் கூடி ஒரு மார்க்கமாய், அதே கேள்வியை நோக்கித்தான் பயணம் தொடர்கிறது.
பட்டிமன்றப் பிதாமகன் சாலமன் பாப்பையா அவர்கள் தனது நூலில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். [ஆமா அவருக்கு இந்தப் பட்டம் யாரு கொடுத்தா? தேசப்பிதா என்று அண்ணல் காந்தியை சொல்லும் போதே, ”யாரு அதைக் கொடுத்தது?” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு சின்ன வாண்டு (ஐஸ்வர்யா லக்னோவிலிருந்து) கேட்டு, அரசே தகவல் இல்லை என்று கை விரித்து விட்டது). அதாவது தான் பட்ட அவமானங்களில் இருந்து தன்னை விடுவித்து, ஒரு தன்னம்பிக்கை தந்தது தமிழ் இலக்கியம் என்கிறார் பாப்பையா அவர்கள். உண்மையில் பிறந்ததின் காரணம் இலக்கியம் சொல்லுமா?
சமீபத்தில் ஒரு குடும்பப் பஞ்சாயத்து வந்தது. அது ஏனோ தெரியலை பலர் தங்களுடைய பிரச்சினைகளை நம் வீட்டில் வந்து கொட்டி விட்டுச் செல்வர். (ஆபீசிலும் இதே தொடர்வதும் உண்டு). சரி யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். (நமக்கு டென்சன் ஆகும் என்பது தனிக்கதை. சில சமயம் இவர்களின் பிரச்சினை வைத்து நம் குடும்பத்தில் பிரச்சினை ஆரம்பம் ஆவதும் உண்டு). எதுக்குடா பொறந்தீங்க?? இதுக்காகவா?? இதுக்குத்தானா? என்று உரிமையோடு கேட்டு விட்டால் சற்றே தெளிவாகிற மாதிரி தெரியுது. [நெட்டில் உலா வரும் மக்கள் மட்டும் என்னிடம் தங்கள் பிரச்சினைகளை சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பிளாக்கில் எழுதிவிட்டால் என்ற ஒரு பயம். ஆமா… நாம ஏதோ பஞ்சாயத்துக்கு போயிட்டோமே… அந்த நண்பரின் பஞ்சாயத்துக்கே வருவோம்.
அந்தக் குடும்பச் சிக்கலின் வித்து, மனைவி கணவனை நாயே என்று சொல்லியது தான். அதுவும் ஏதோ வார இறுதிப் பார்ட்டி முடித்து வந்த போது நடந்த ஊடலின் பின் விளைவு. அது வாய்சண்டை பெரிதாகி பஞ்சாயத்து செய்ய செம்பு இல்லாமல் கிளம்பிவிட்டோம். இரு தரப்பு நியாயங்கள் கேட்ட போது கணவன் வாயிலிருந்தே வந்தது அந்த அருமையான வார்த்தைகள். “நானு இவங்களுக்காக நாயா ஒழைக்கிறேன்… இவ என்னை நாய் என்கிறா…” இது எப்படி இருக்கு? ஒருவர் பயன் படுத்தும் சொற்கள் மற்றவரை பாதிக்கிறது. ஆனால் அவருக்கே அது சாதாரணமாய் படுகின்றது.
அந்தமானில் இந்தச் சிக்கல் அதிகம். ”சாலா” (ஹிந்தி வார்த்தை தான்) என்று ரொம்பச் சாதாரணமாய் தமிழ் பேசும் மக்களும் தங்கள் பேச்சில் பயன்படுத்துவார்கள். ஆனால் இதே சாலா பிரயோகம் சில சமயங்களில், சாலா என்று சொல்லிவிட்டான் என்று சண்டைக்கும் வழி வகுத்திருக்கும். இன்னும் சில கெட்ட வார்த்தைகள் ஹிந்தியில் ஜாலியாய் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதையே தமிழில் சொல்லிய போது கலவரமே வந்திருக்கும். நாம் உபயோகிக்கும் சொற்கள் நாம் வாழும் வழ்க்கையையே பாழ்படுத்தி விடுகின்றதே?? கொஞ்சம் யோசிக்கலாமே…. இது தேவையா? இதுக்குத்தானா பொறந்தோம்?
பாப்பையா சொல்லிட்டாரே… அதுக்காக, இலக்கிய பக்கம் எட்டிப் பாக்கலாமே… நமக்கு ஈசியா கெடைக்கிற ஆளு வள்ளுவர் தான். (அந்தமான்ல கூட ஆட்டோ பின்னாடி குறள் எழுதி வைத்திருக்கிறார்கள்). அய்யன் வள்ளுவர் சூப்பரா சொல்றார். அதுவும் நச்சு நச்சுன்னு சொல்லிட்டே போறார். ஏழு வார்த்தைக்குள் எல்லாத்தையுமே அடக்கும் எமகாதகன் அவர். (இந்த வார்த்தைப் பிரயோகத்துக்காய் அவர் சண்டைக்கு வரமாட்டார் என்ற குருட்டு தைரியம் தான்)
அறிவுடையார் வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். ஏதோ ஒண்ணு ரெண்டு அறிவுள்ள ஆட்கள் சொல்லிட்டா போதுமா? அடுத்த பிட்டை போட்றாரு அதே வள்ளுவர். அறிவுடையார் பலரும் வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். எப்போது வெறுப்பு ஏற்படும்? கேட்கும் போது தானே? அது வள்ளுவர் யோசிக்காமலா போவார். அறிவுடையார் பலரும் கேட்டு வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். இவ்வளவு கேட்ட மனிஷன், எதை என்று கேட்டு, அதுக்கும் பதிலும் சொல்லாமெ உடுவாரா என்ன? இதோ பதில் ”அறிவுடையார் பலரும் வெறுக்கும்படி சொற்களைச் சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான்.
கேள்வி முடியலை. எப்பேற்பட்ட சொற்கள்?
பயனிலாத சொற்கள்.
யாரால வெறுக்கப் படுவான்?
இதுக்கும் பதில் உண்டு. எல்லோராலும்.
இதோ குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
மேலும் விவரங்கள் வேண்டுமா? பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள் எழுதிய வாழ்வியல் வள்ளுவம் (தமிழ்நாடு பெண்கள் எழுத்தாளர் பேரவை வெளியீடு) படியுங்கள்.
ஒரு சின்ன இடைச் சொருகல்: 2008 ஜனவரியில் சென்னை இலயோலா கல்லூரியில் நடந்த சர்வதேச தமிழ் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நான் கலந்து கொண்ட முதல் தமிழ் சார்ந்த கருத்தரங்கம் அது. (பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் இல்லாமலா?) அதை பார்த்த பிறகு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இந்த நூலை பரிசாய் அளித்தார். பிரித்துப் பார்த்தால் ஓர் இன்ப அதிர்ச்சி. அதில் “ தமிழ் உணர்வின் அடையாளம் தாங்கள்” என்ற குறிப்போடு அவரின் கையொப்பம். (உண்மையில் அந்த அளவுக்கு ஒர்த்தா நானு…??)
இன்று காலை காலார நடைப் பயணம் சென்ற போது பக்கத்து வீட்டு மிருக வைத்தியரும் கூட வந்தார். மிருக உரிமை வாரம் வர இருக்கிறது என்று சொன்னார். மனித உரிமையே சீ சீன்னு கெடக்குது. இதுலெ இது வேறெயா என்று அவர் ஒரு அங்கலாப்புடன் தெரிவித்தார். ஆனால் இந்த மிருகங்கள் மீதும் அன்பு காட்டும் குணம் தமிழரிடையே இயல்பாய் இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு.
அன்பு காட்டுவது என்று ஆரம்பித்துவிட்டால், அதை குடும்பம், வீடு, தெரு ஊர் தாண்டியும் செய்ய நினைத்திட்டவர்கள் தான் அனைவராலும் புகழப்படுகின்றார்கள்.
சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவன் சென்ற வேலை முடிந்து திரும்பி வருகிறான். வேகமாக வருகிறான். மனைவி, தலைவி, காதலி, கேர்ள்பிரண்டு இப்படி யாரையோ பாக்க ஆவல். அதை அறிந்த தேரும் குதிரையும் அதே வேகத்தோடு போகுதாம். (குதிரைக்கும் கேர்ள் பிரண்டு இருக்காதா பின்னெ?). ஊடல் கூடல் கனவில் வரும் அந்த ஹீரோவின் வேகமாய் வரும் தேர் எழுப்பும் மணிச் சத்தம், வழியில் இருக்கும் பூவில், இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்த வண்டுக்ளுக்கு தொந்தரவாய் இருந்ததாம். பார்த்தார் நம் ஹீரோ. வண்டியை ஓரம் கட்டி மணிகளை கயிற்றால் சத்தம் வராதபடி கட்டி வண்டுகளுக்கும் தொந்திரவு தராமல் வந்தாராம்.
குறுங்குடி மருதனார் பாடல் இதோ:
தாது உண்பறவை பேது உறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
ஒரு வண்டின் மனம்கூட நொந்துவிடக் கூடாதே என்று யோசித்த பரம்பரையில் வந்தவர்கள் நாம். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது தான் நாம் பிறந்ததின் நோக்கம் என்று சொல்கிறேன் நான். நீங்க என்ன சொல்றீங்க?
super
மறுமொழி இட்டு உற்சாகமூட்டியமைக்கு நன்றி.
remarkable quote.
பதிலுக்கு நன்றி.
சி.மோகனின் ‘சொல்’ நினைவுக்கு வருகிறது…
ஒரு சொல்
எதிர்பாராமல் இடறி விழுந்ததென்றே
நினைத்திருந்தேன்.
ஆனால்
கூர்தீட்டிய வாளாய்
நம்மிருவருக்கிடையே குத்தி நின்று
கடகடவென வளர்ந்துகொண்டிருக்கிறது
நீ சொல்லிய சொல்..
ஒரு சொல்
குதூகலத்தில் துள்ளிக் குதித்ததென்றே
நினைத்திருந்தேன்
ஆனால்
விஷம் ஊறிய பாம்பாய்
நம்மிருவரிடையே தலை தூக்கி
கிறுகிறுவென ஆடிக்கொண்டிருக்கிறது
நான் சொல்லிய சொல்.
பதில் “சொல்”லியமைக்கு நன்றி.
Nice