”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).
நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.
நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.
சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).
அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.
ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.
விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.
Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).
கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.
கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.
கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.
ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.
தூய்மை வெளிநாடுகளில் மட்டும் இல்லை . இந்தியாவிலும் இருக்கிறது. அதை யார் நிர்வாகிக்கிறார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விசயம். தனியார் வனிக வளாகங்களில் யாரும் அசுத்தம் செய்வதில்லை. டெல்லியில் metro railway station உள்ளே யாரும் அசுத்தம் செய்வதில்லை.ஆனால் வெளியே வந்தவுடன் அசுத்தம் செய்கிறார்கள். எல்லோரும் தனது வீட்டை சுத்தமாக தான் வைக்கிறார்கள். இதனால் சொல்ல வருவது என்னவென்றால், யாருடைய இடமோ அவர்கள் எந்த வழியை பின்பற்றியாவது பாதுகாத்துகொள்ள வேண்டும். பொது இடங்களை அரசு இடங்கள் என மக்கள் கருதுவதால் அதை பற்றி மக்கள் கவலை படுவதில்லை.
no need to go to andaman..look at pondicherry…cannot say very very clean…but, seems mostly cleaned streets, leveled parking where the same Chennai and Villupuram dist. people used to visit this place..any explanation on this governance?
Good Observation Sir…
தமிழில் எழுதத் தெரியாதவர்கள் ஏன் தமிழில் எழுத வேண்டும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இது யாருக்கு? எனக்கா??