மனிதன் பாதி தெய்வம் பாதி…


தெய்வத்தை சமீபகாலமாக யாரும் பார்த்தது இல்லை என்றாலும் இப்படிப்பட்ட டயலாக் மட்டும் கேக்காம இருக்க முடியாது. சார்… தெய்வம் மாதிரி வந்து உதவி செஞ்சிருக்கீங்க சார்; கடவுளாப் பாத்து, உங்களை அனுப்பி இருப்பாருன்னு நெனைக்கிறேன்; தெய்வத்தெப் பாத்த மாதிரி இருக்கே, உங்களெப் பாக்குறது; தெய்வ மச்சான் (ஜோதிகா மாதிரி அழகான தங்கச்சி வைத்திருக்கும் அத்தனை அண்ணன்மார்களும் – உபயம்: தெனாலி திரைப்படம்); உங்களை எல்லாம் கோவில் கட்டி கும்பிடனும் (சொல்வது அப்படி… ஆனா கோவில் கட்டுவதோ குஷ்புவுக்கு…)

இதுக்கு முற்றிலும் மாறாக, மனுஷனா அவன்??…. மனுஷனாப் பொறந்தவன் செய்ற காரியமா அது? மனிஷனே இல்லெ அவன்… இப்படியும் கேப்பாங்க.. ஆக மொத்தத்தில் மனிதன் என்பவன் இதெல்லாம் செய்யாலாம். இதெல்லாம் செய்யக்கூடாது என்று எல்லாருமே அவங்களுக்கு தெரிஞ்ச ஸ்கேல் வச்சிருக்காங்க… ஆனா இந்த ”ஸ்கேல்” என்பதில் பல கருத்து வேறுபாடுகள்.

மனிதன் இருக்கிறான்… ஆனா தெய்வம் ??? எத்தனை விதமான கேள்விகளும் பதிலகளும் சந்தேகங்களும்…
இருக்கிறான். இருக்கிறார். இருக்கானா என்ன? எங்கே இருக்கார்? இல்லை. இல்லவே இல்லை. கல்லா கிடக்கார். உருவமில்லாமெ இருக்கார்.. இருந்தா நல்லா இருக்கும் (நன்றி – தசாவதாரம் கமல்). உருவமில்லமெ இருக்கார். மனிதம் தான் கடவுள். மனிதனும் தெய்வமாகலாம். அன்பே சிவம். அன்பே கடவுள். ஏழையின் சிரிப்பில் இறைவன்… இந்தா வந்து கொண்டிடுக்கிறார் (என்று போஸ்டர்களிலும்) பல விதமாய் கடவுள்கள்.

கடவுளின் அவதாரங்கள் என்றும் ஒரு வகை உண்டு. அவர்கள் மனிதர்கள் மாதிரியே இருப்பாய்ங்க.. அப்பப்பொ அவங்க குணம் மாறிடும். (ஒரு வகையில் போலிஸ்காரங்க மாதிரி.. நல்லா பிரண்ட்லியாத்தான் பேசுவாங்க.. திடீர்னு போலீஸ் குணம் வந்திடும்). சமீபத்தில் தான் அருணா சாய்ராம் பாடிய “மாடு மேய்க்கும் கண்ணே..” பாடலை You Tube மூலம் என் பையன் உதவியுடன் download செய்து கேட்டேன். (நாமெல்லாம் பசங்களுக்கு படிப்பில் உதவி செய்தது அந்தக்காலம். ஆனா, பசங்க இப்போது சொல்லிக் கொடுத்து கத்துக்கும் அளவுக்கு நாம இருக்கிறோம் என்பதை என் வயது ஒத்தவர்கள் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.)

சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் பட்டியலில் நான் இருந்தாலும், அந்தப் பாடலை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். என் கீழ் வீட்டுப் பாட்டி தன் பேத்திக்குச் சொல்லிக் கொடுத்து (தொந்திரவு செய்து). பேத்தியின் மழலைக் குரலில் அதைக் கேட்டிருக்கிறேன். குட்டிக் கண்ணனும் யசோதையும் பாடுவதாய் வரும் அந்தப் பாட்டு. கண்ணன் சொல்வதை அந்த சின்னக் குரலில் கேட்பது கண்ணன் பாடுவது போலவே இருக்கும்.

யசோதை சொல்கிறாள்: யமுனை நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம். கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மனியே…மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்…
இதுக்கு கண்ணன் சொல்லும் பதிலும் கொஞ்சம் பாக்கலாமே: கள்ளனுக்கோர் கள்வன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லுமம்மா… கள்வர் என்னை அடித்துதைத்தால் கண்டதுண்டம் ஆக்கிடுவேன்… போக வேணும் தாயே.. தடை சொல்லாதெ நீயே..
இப்படிப் போகுது பாட்டு. இதை ரெண்டு விதமா பாக்கலாம். சின்னப் பசங்க கிட்டெ, அங்கே போகாதெ பூச்சாண்டி வரும் என்று சொல்றச்சே, வாண்டுகள் பதில் சொல்லுமே, பூச்சாண்டி வந்தா பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என்று… அப்படி பசங்க உட்ற பீலாவா வச்சிக்கலாம். ஏற்கனவே அந்தக் குட்டிக் கண்ணன் ஏகப்பட்ட சித்து விளையாட்டுகள் செஞ்சிருக்கான். அதை சொல்லாமல் சொல்வதாயும் வச்சிக்கலாம். மனிதர்கள் சொல்வார்கள். செய்யலாம்… செய்யாமலும் போகலாம். ஆனா தெய்வமே மனிதனா வந்தா, சொல்லிட்டா, செஞ்சிடுவாங்க.. அது தானே வித்தியாசம்.

இதே மாதிரி பிஞ்சிலே பழுத்தது என்பது பற்றி நமக்குத் தெரியுமோ இல்லையோ, ஆனா முனிகளுக்குத் தெரியும். தங்கள் தவத்திற்கு இடைஞ்சல் செய்யும் அரக்கர்களை அழிக்க ராம லெட்சுமணர்களை கேட்டதும் இதில் சேத்தி தானே?? நேரா போயி… தசரதனையே ஒரு படையோடு வாங்க என்று அப்ளிகேஷன் போட்டிருக்கலமே!! செய்யலையே… (ஏற்கனவே தண்ணீர் முகரும் சிரவணனை யானை என்று அம்பு விட்டுக் கொன்ற தயரதன், அரக்கன் என்று வேறு யாரையாவது அம்பு விட்டா…இப்படி சந்தேகம் வந்திருக்கலாம் என்று என் மனதில் ஒரு சின்ன சந்தேகம்). எப்படி இருப்பினும் தெயவக் குழந்தை வெற்றி பெறும் என்பது அவங்களுக்கும் நமக்கும் தெரியுது.

ராமன் கடவுளா? மனிதனா? மனித உருவில் வந்த தெய்வமா? அல்லது ரெண்டும் கலந்த கலவையா… சின்ன வயதில் மனிதத்தனமாய் (குழத்தைத் தனமாய்) கூனியிடம் கல் எறிந்து விளையாடியது, மனைவியை இழந்து தவித்தது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (ஆனா அப்பப்பொ அந்த தாடகை வதம், சிவதணுசை உடைத்தல், கால்தூசில் கல்லை பெண் ஆக்கல் இப்படி எல்லாம் தெய்வ தரிசனமும் தொடர்கிறது).

ராமனுக்கு இவ்வளவு இருக்கும் போது சீதைக்கு இப்படி இருக்காதா என்ன? ராமாயணத்தை விமர்சிக்கும் பலர் சுட்டிக் காட்டும் இடம் அந்த அக்னிப் பிரவேசம். சீதையும் தெய்வப் மகள் என்பதை ஒப்புக் கொண்டால், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். கம்ப ராமாயணத்தை மேய்ந்த போது சின்ன பொறி தட்டியது. அக்னிப் பிரவேசத்துக்கு கம்பர் சப்போர்ட் செய்து ஏற்கனவே எழுதி வச்ச மாதிரியே இருக்கு.

கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அந்தக் காலத்தில் மனைவி பிறந்த வீடுக்குப் போவார். (அந்தமானுக்கு கல்யாணம் செய்திட்டு வந்த புதிதில் என்ன ஊரு இது? ஒரு சண்டை போட்டுக் கூட அம்மா வீட்டுக்கு போக முடிய மாட்டேங்குது என்று என் மனைவி புலம்பியது உண்டு). அப்படியானால், அந்ந்ந்தக் காலத்திலும் இப்படித்தானே இருந்திருக்கும்??.

ராமன் சீதை இடையே (இடையே இல்லை என்பது கம்பரின் வாதம்..அது வேறு சங்கதி) பிரச்சினை வர வாய்ப்பே இல்லை. அப்படியே விவாதம் வேறு நபர்களால் வந்தால், அம்மா வீட்டிற்குத் தானே அனுப்புவார் (அல்லது) சீதை போவார். சரி..சரீ…சீதையின் அம்மா வீடு எது? மிதிலை..அப்படியும் சொல்லலாம். ஆனால் அது சீதை வளர்ந்த ஊர். பிறந்தது வயலில் தானா?? சரி… இதுக்கும் முன்னாடி போகலாமா??

யுத்தகாண்டத்தில் தான் நமக்கு ஒரு Clue வைக்கிறார் கம்பர். (அங்கே கொண்டு போயா வச்சார் என்று விவேக் பாணியில் கேட்றாதீங்க). வீடணன் இராவணனிடம் நல்ல விதமாய் சொல்லும் இடம் அது. (என்ன கையெப் புடிச்சி இழுத்தியா? மாதிரி டயலாக் ஓடுது பாருங்க.)
வீடணன்: ஏற்கனவே வேதவதிக்கும் நமக்கும் ஆவாது..
இராவணன்: என்ன ஆவாது?
வீடணன்:அழிச்சே தீருவேன்னு சபதம் வேறெ போட்டிருக்கா
இராவணன்: என்ன சபதம் வேறெ போட்டிருக்கா??
வீடணன்: அது சும்மா விடுமா?
இராவணன்: என்ன சும்மா விடுமா?
வீடணன்: ஏற்கனவே அவர் தீயில் முழுகியவள்..தெய்வத்தண்மை கொண்ட..கற்பினை உடையவள்..
இராவணன்:என்ன?????
வீடணன்: அவளே சீதை ஆவாள்

அப்பொ தீயிலிருந்து வந்தவர் தானே சீதை.. அப்பொ சீதையின் தாய் வீடு தீ தானே.. அதில் போக என்ன சிரமம்?? பாட்டும் பாக்கலாமே…

தீயிடைக் குளித்தவக் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்

அது என்ன வேதவதி கதை என்று கேட்டுறாதீங்க… அதுக்கு பதில் சொல்ல யாராவது வராமயா போறாங்க..

2 thoughts on “மனிதன் பாதி தெய்வம் பாதி…

  1. We have seen Sankaranarayanan and Ardhanaareeswar only. You are the person now telling that half Man and half God ! How is that?

Leave a reply to O.S.Subramanian Cancel reply