ரொம்பவும் தெரிஞ்ச (ஆனாலும் தெரியாத) நாலு விஷயங்கள் என்ன தெரியுமா? 1. நண்பரை நண்பராகவே தொடர்ந்து வைத்துக் கொள்வது.2. நண்பரே சில சமயங்களில் எதிரியாய் ஆவது. 3. எதிரி எதிரியாகவே தொடர்வது. 4. எதிரியாய் இருந்தவர் நண்பராய் மாறுவது
நண்பர்களா இருக்கிறதுக்கு என்ன தேவை… என்ன தேவை என்று கேட்பதற்கு முன்னரே இந்தா வச்சிக்க என்று தருபவன் தான் நண்பன். எதையும் எதிர்பார்க்காமல் வருவது. காதலுக்கும் இந்த definition ஐ கடல் ஓரமாய் கடலை போடும் போது கொடுத்துவிட்டு, பின்னடி அல்லாடும் கில்லாடிகள் பலர். ஒருவர் பொறுத்துப் போக வேண்டும் இருவரின் மத்தியில் நட்பு தொடர. யார் விட்டுக் கொடுப்பது என்பது கேட்காமலேயே நிகழ வேண்டும். அந்த நிகழ்வின் அச்சானியே இருவருக்கும் இடையே இருக்கும் பர்ஸ்பர நம்பிக்கை தான். நான் மட்டும் தானா எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி வந்தாலே நட்பு வட்டத்தில் லேசாய் விரிசல் வந்ததாய் வைத்துக் கொள்ளலாம். (ஏதோ தனிக் கட்சி ஆரம்பிக்கவோ அல்லது வேறு எங்கோ கூட்டனி வைக்கவோ கூட பிளான் இருக்கலாம் என்பதும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம்)
நல்ல நண்பர்களை அடியாளம் கண்டு கொள்ள ஒரு பழைய கதை சொல்வார்கள். ”எடுக்கவா? கோர்க்கவா?” என்று கர்ணபரம்பரைக் கதை என்றால் ரொம்ப அரதப் பழசாயிடும். கொஞ்சம் புதுக்கதை (நண்பண்டா… என்ற ஸ்டைலில் சொல்லியும் படிக்கலாம்). ரெண்டு நண்பர்கள் ஜாலியா பீச்லெ வாக் போயிட்டு இருந்தாங்க. ஏதோ பிரச்சினை. ஒரு ஆளு டப்புன்னு அடிச்சிட்டார். அடி வாங்கின ஆளு அழுகாமெ மணல்லெ ”நண்பன் அடித்து விட்டான்” என்று எழுதி சமாதானம் ஆய்ட்டு இருந்தாராம். அப்பொ திடீர்னு ஒரு மாடு வேகமா முட்ட வந்திருக்கு. அடிச்ச அதே நண்பன் ஓடிப்போய் காப்பத்தி இருக்கார். குஷியா நண்பன் மறுபடியும் பக்கத்திலெ இருக்கிற பாறையில ”நண்பன் காப்பாற்றி விட்டான்” என்று எழுத ஆரம்பித்து விட்டாராம். (நம்மள மாதிரி எதையவது அப்பப்பொ எழுதுற பார்ட்டியா இருக்குமோ??)
முதலில் அடிச்சி அப்புறம் காப்பாத்தின ஆசாமிக்கு ”டாடீ..எனக்கு ஒரு டவுட்டு” மாதிரி டவுட்டு வந்திடுச்சாம். ”ஏம்பா அடி வாங்கின சமாச்சாரத்தை மணல்லெயும், காப்பாத்தின சங்கதியெ பாறையிலேயும் எழுதினே?” என்று. பதில் சிம்பிள் தான். நட்பு காப்பாற்றப் பட இது தான் ஒரே வழி. பிறர் தனக்கு செய்த தீமைகளை மணல் மேல் எழுதியது போல் வைத்து மறந்து விடுங்கள். நல்லவற்றை மனதில் திடமாய் சேமித்து வையுங்கள், பாறை மேல் எழுத்தாய். நட்பும் மலரும். மனநிலையும் நல்லாவே இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் என்ன செய்றாய்ங்க… சிரமம் கொடுத்ததை ரொம்ப சிரமப்பட்டு ரீவைண்ட் செய்து செய்து மனதிற்குள் பாத்து பொசிங்கிப் போவாய்ங்க… ஆமா நீங்க எப்படி?? என்ற சுய ஆலோசனை செய்ங்க… (அதுக்குள்ளெ நானு அடுத்த கட்டத்துக்கு நொண்டி ஆடப் போறேன்).
நண்பன் விரோதி ஆகும் இடம் எப்படி?? ரொம்பவே சிம்பிள். மேலே சொன்ன விஷயங்களில் பிக்கல் பிடுங்கல் இருந்தால், நட்பு என்பது புட்டுக்கும். தோள் மேலே கை போட்டு போன காலமெல்லாம் போய், கோர்ட் வாசப்படி மிதிக்க வைக்கும் நட்பிரோதமான கதை எல்லாம் இருக்கு. நடு நிலை என்று சொல்லி ஒரு சார்பு இருக்கும் ஆட்களால் சிக்கல் அதிகம் வரும். அதுக்கு மொதல்லெயே சொல்லித் தொலைக்கலாமே? சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்த்ப்பொ சூப்பரா, நான் ஒரு சார்பில் தான் இருப்பேன் என்று சொல்லியே தனது பத்திரிக்கையை படியுங்கள் என்று சொன்னார். அது நண்பர்களை ஏமாற்றாது இருக்கும் பாருங்க.
அப்படியே, விரோதியினை விரோதியாவே வச்சிருக்கும் வித்தையை லேசா டச் செய்து பாக்கலாமே… நம்ம முன்னோர்கள் எல்லாத்துக்கும் பழமொழி வச்சிருப்பாங்களே… இதுக்குச் சொல்லாமலா இருப்பாய்ங்க. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. (ஆனா சில சமயம் துஷ்டர்களே மேலதிகாரிகளாகவோ, மனைவி அல்லது கணவனாகவோ வந்து வாய்த்து விடுவதும் உண்டு.) என்ன செய்ய, மழை பெய்யும் போது, அதெ நிப்பாட்டவா முடியுது? ஏதோ நம்மாலெ முடிஞ்ச, ரெயின்கோட் போட்டு மறைச்சிட்டு போற மதிரியே ஒரு செட்டப்பா, கெட்டப்பா, வாழ்க்கையெ ஓட்ட வேண்டியது தான்.
எதிரியை நண்பரா மாற்றும் பகுதிக்கு வதுட்டோம். முடியப் போகுது. அதனாலெ இதிலெ கண்டிப்பா கம்பர் வந்தே ஆகனுமே??..ம்…எந்த சீனுக்கு கூட்டிட்டு போலாம் உங்களை… யாராவது சண்டெ போட்டா, நாம ஓடிப் போயி எட்டித்தான் பாப்போம்? அப்பொ இந்த ராமாயணப் போர் நடக்கிற எடத்துக்கே போகலாம். ராவணன் ஒரு அம்பு உட்றாரு நம்ம லெட்சுமணன் நெஞ்செப் பாத்து. விபீஷணன் பாய்ந்து முன்னாடி வருகிறார். அதெப்பாத்து அங்கதன் முன்னடி வந்து நிக்கிறார். சுக்ரீவன் பாத்துட்டு சும்மா இருப்பாரா என்ன? அவரும் முன்னடி வந்து நிக்க, ஹனுமன் போங்கய்யா எல்லாரும் அந்தாண்டெ என்று நெஞ்சை காட்டுகிறார். புரோட்டாக் கடையில் 50 புரோட்டா சாப்பிடும் ஸ்டைலில் இலக்குவன், எல்லாம் அழிங்கப்பா நான் மொதெல்லேர்ந்து வர்ரேன் என்று சொல்லி, மீண்டும் இலகுவன் நிக்க, அம்பு தைக்குது மயங்குவது எல்லாம் வேறு வேறு கதை.
நம்ம பிடிக்கிற எடம் சுக்ரீவன் தன் உயிரைக்கூட பணயமாய் வைக்கும் இடம் தான். (ஒரு வேளை அங்கதனுக்காக வந்திருப்பாரோ??). ஆரம்பத்தில் வீடணன், ராம் கோஷ்டியில் சேத்துக்க Object செய்த முதல் பார்ட்டியே சுக்ரீவன் தான். பிரச்சினையான நேரத்துலெ உட்டுட்டு வர்ர ஆளை எப்படி நண்பரா நெனைக்கிறது?? விரோதி தானே என்கிறார் சுக்ரீவன். அப்புறம் பொதுக்குழு கூடி முடிவு எடுக்குது வீடணனை கூட்டனியில் சேத்துக்கலாம் என்று. அந்த நேரத்தில் வீடணனை எதிரியாய் பாக்கிறார் சுக்ரீவன். இந்த இருவரையும் நண்பராக்க ராமர் சூப்பரான ஐடியா வச்சிருக்கார். சுக்ரீவனையே பாத்து, போப்பா, அந்த ஆளை கூட்டியா என்கிறார்.
”ஒரு ஆளு அடைக்கலம்னு வந்துட்டா அதை அப்புறம் நோண்டி நொங்கெடுக்கக் கூடாது. ஏதோ என் மேலெ இருக்கிற பிரியத்திலெ வீடணனை வேண்டான்னு சொல்றீங்க. சூரியணின் மகனான சுக்ரீவனே (லேசா ஐஸ் கூட தேவைப்படுது ராமருக்கே). ஒரு குத்தமும் செய்யாத அந்த வீடணனை நீயே அழைத்து வருக” என்று ராமர் சொல்வதாக கம்பர் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லும் பாடல் இதோ:
ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம்ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்தகாதலான் இனிவேறு எண்ணக் கடவது எனகதிரோன் மைந்தகோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி என்றான்.
என்னங்க… நீங்களும் இந்த கம்பர் டெக்னிக்கை யூஸ் செஞ்சி பாருங்க… சந்தோஷமா இருங்க…
மனைவியிடம் முதலில் படிக்க கொடுத்து விட்டு பின்பு பிரசுரிக்கவும்
என் மனைவியிடம் தொனதொனவென்று பேசியவை தான் இப்போது எழுத்தில் வருகிறரது.
Andha “Dhushta Meladhikari” yaaru?
சார்… ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பார்கள். அதுவும் மேலதிகாரிகள் பேரா…. மூச்…வேண்டவே வேண்டாம் சார்…
கெ3டி3க் பாஞ்சு கொ4டா3க் தெ3ஸ்ஸு
ஐஸ்துக் ஸஸரு ஹாத் ப2ராம்
து3தூர் து3ஷ்டுக் ஸொடி3ன் ஜேண்ணொ
தெ3க்குதாம் தென்னெ வேங்கு3னும். ஸௌ.நீதி ஸம்பு 102
வண்டிக்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம்
யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி சென்று விட வேண்டும். ஆனால் துஷ்டனைக் கண்டால், பார்த்த உடனே, தூரவிலகிச் சென்றுவிட வேண்டும். ஆம், நாம் துஷ்டனுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து தூர தள்ளி நிற்க வேண்டும் !
ஜுக்கு ஸொந்தோஷ்..
நட்புக்கு நல்ல definition வாழ்த்துக்கள்.
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.