எதுவுமே சரியாக வெளங்காமல் தவிக்கும் போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கு என்பார்கள். (வெளங்கலையே என்பது பாப்பையாவின் தமிழ் வழக்கு). பொதுவா காட்டுலெ போனாலே, வழி தவறித்தான் போவோம். அதுலெ கண்ணை வேறு கட்டிகிட்டு போனா.. அதோ கதி தான். (ஆமா… நம்ம சந்தன மர வீரப்பன் அதுலெ கில்லாடி என்கிறார்களே, அவர்கிட்டெ GPS மாதிரி சமாச்சாரமெல்லாம் இருந்ததுங்களா?). அந்தமான் தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் (உழங்குவானூர்தி) & Sea Plane (கடல் விமானம்) ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, மேகங்களுக்கு நடுவே போகும் போதும் அனாவசியமாய் இந்த ”கண்கட்டு வித்தை” என்று சொல்வார்களே, அது தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ”இந்த ஜி பி எஸ்ஸை முழசா நம்பிடாதீங்க”ன்னு வேறெ அங்கங்கே எழுதியிருக்குது படிச்சாலும் கூட கதி கலங்கும். (ஆமா.. அழகான கண்ணைக் காட்டி மயக்கி அலைக்கழிக்கும் மகளிரை எந்த லிஸ்டில் சேக்க??)
அதே மாதிரி ஒரு கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாட்டி, கிணத்திலெ போட்ட கல்லு மாதிரி என்பார்கள். ஆமா, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறார்களே! அந்த கிணத்துக் கல்லு மட்டும் ஒண்னும் ஆகாதா என்ன? வெளங்கலையே!!! சமீபத்தில் டெல்லி போன போது, குதுப்மினாரை கொஞ்சம் எட்டிப் பாத்தேன்.. இல்லை இல்லை அன்னாந்து பாத்தேன். அதே வளாகத்தில் கிணறு ஒன்றும் இருந்தது. கெணத்தெக் காணோம் என்று வடிவேல் செய்யும் கலாட்டாவை மனசிலெ நெனைச்சி சிரிச்சிகிட்டே எட்டிப் பாத்தேன். கெணறு முழுக்க நம்மாளுக பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்து வைத்திருந்தனர். இப்பொ அதெயும் பூட்டி வச்சிருக்காக. நல்லது தான்.. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு பூட்டி வச்சா அச்சா ஹோகா.. தில்லி அரசு அல்லது அரசி யோசிக்கட்டும். இல்லாங்காட்டி கிணத்திலெ போட்ட பிளாஸ்டிக் மாதிரி என்று எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
கள்ளக்கடத்தல் செய்வதை திறமையோடு செய்வதை மணிரத்னம் நாயகனில் சொல்லிக் கொடுத்தார். (அந்தமானில் இப்பொ கடல் படம் எடுத்து வருகிறார். என்ன சொல்லித் தருவாரோ?) உப்பு மூட்டைகளை கடத்தல் பொருளோடு கட்டி கடலில் போட்டது.. இப்படி எல்லாம் சொன்னா, உங்களுக்கு ஞாபகம் வராது. ”நிலா அது வானத்து மேலே..” என்று பலானதைப் பாத்து ஜனகராஜ் பாட்டு பாடுவாரே… ம்… இப்பொ ஞாபகம் வந்திருக்குமே!!! ஆமா கடத்தல் என்றாலே கள்ளத்தனமா கடத்துறது தானே? அதுலெ கள்ளக் கடத்தல் எதுக்கு? காதல் என்றால் ஒருவனின் அன்பை அடுத்தவரிடம் கடத்துவது. கள்ளக்காதல், என்பது அடுத்தவரின் காதலியையே கடத்துவது. இப்பொ ஓகே தானே.
ஒரு காலத்தில் சோழர்கள் வந்து வென்று சென்ற அந்தமான் தீவுகளான நன்கவ்ரி தீவின் அருகில் இருக்கும் டிரிங்கட், தெலிங்ச்சான் போன்ற தீவுகளுக்கு அலுவல் காரணமாய் போயிருக்கேன். சின்னஞ் சிறு ஓடம் வைத்துத்தான் போக வேண்டும். நிகோபாரி மொழியில் ஹோடி என்கிறார்கள். கடல் மட்டம் ஏறி இருக்கும் போது மட்டும் தான் பயணம் செய்ய முடியும். எந்த வழியாக, எப்படி போக வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஓடத்தில் கயிற்றுடன் கட்டிய கல்லும் தவறாமல் இருக்கும். ஓடத்தை நிறுத்தி வைக்க உதவும் நங்கூரமே அது தான்.
500 பயணிகள் பயணிக்கும் வகையில் MV Chowra & MV Sentinel என்று தீவுகளுக்கு இடையே சென்று வரும் கப்பல்கள் இருந்தன. அக்கப்பல்கள் சவுரா, தெரெசா போனற தீவுகளில் அவ்வளவு ஆழம் இல்லாத காரணத்தினால் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும். சில மாலுமிகள் தங்கள் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று ரெண்டு கிலோமீட்டர் தள்ளி நங்கூரம் பாய்ச்சுவர். தீவுவாசிகள் (அனைவருமே நிகோபாரி ஆதிவாசிகள் தான்) அந்த ரெண்டு கிலோமீட்டர் ஹோடியில் வந்து ஏறி இறங்கிச் செல்ல வேண்டும். ரிஸ்க் எடுப்பதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று நினைக்கும் கப்பல் கேப்டன் மஜும்தார் என்று ஒருவர் இருந்தார். கப்பலை எவ்வளவு பக்கத்தில் கொண்டு வரமுடியுமோ அம்புட்டு பக்கம் கொண்டு வருவார். அவரை நிகோபாரி மக்களும் மரியாதை செய்து தெய்வமாய் பாவித்தார்கள். எப்படி அவருக்கு மட்டும் இப்படி சாத்தியம் என்ற போது கிடைத்த தகவல். இவர் நங்கூரம் இடாமல் காற்று வாக்கில் தவழ விட்டு அவசர காலத்தில் போக தயாராய் இருந்தது தான் என்று பதில் சொன்னார்.
கல்லில் கட்டி கடலில் எறிவது அந்தக் காலத்து தண்டனை. தசாவதாரம் படத்தில் சைவர்களை கொடுமைக்காரர்களாய் காட்டும் காட்சி வருகிறது. வைணவரான கமலை இப்படி சைவர்கள் கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்.(ஆமா கமல் வைணவரா என்று கேக்காதீங்க… இதெப்பத்தி ஆத்திகம் நாத்திகம் கமல்த்திகம் என்று ஒரு போஸ்ட் ஏற்கனவே போட்டிருக்கேன்). சமணம் ஓங்கி இருந்த காலத்தில் சைவர்களை இப்படி செய்திருக்கிறார்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லி பாயன்ஸியினை மாத்தி மிதந்து வந்ததாய் தேவாரம் சொல்கிறது.
இம்புட்டு பாத்துட்டு, கம்பர் கிட்டெ கேக்காமெப் போனா, அவர் கோவிச்சிக்க மாட்டாரு?? கல்லைக் கட்டி கடலில் எறிந்த கதை ராமாயணத்திலும் வருது. கம்பர் காதையில் வரும் கிளைக் கதை: இரணியன் வதைப் படலம். இது ஏதோ நம்ம சீரியலில் யாரோ ஒருத்தருக்காய் சில கேரக்டர் கொடுக்க கதை நீளுமே, அப்படித் தான் தெரியுது. ராமாயணத்தின் தொடர்பே இல்லாத (இப்படி 100% சொல்லிட முடியாது) பக்த பிரகலாதன் படம் கொஞ்சம் ஒரு ரீல் ஓட்டிக் காட்டுறார் நம்ம கம்பர். (அது அந்தக் காலத்து இலவச இணைப்பா இருக்குமோ?)
எல்லரும் கல்லைக் கட்டிக் கடலில் எறிய, கம்பர் வரியில் மலையோடு கட்டி கடலில் எறிந்தார்களாம். (சாரி.கொஞ்சம் ஓவர் என்று மதன் பாணியில் சொல்லாமல் சொல்லியிருப்பாரோ?) திருமாலின் பெயரை பிரகலாதன் சொல்ல, அந்த மலை மரக்கலம் ஆகாமல் சுரைக்குடுவையா ஆயிச்சாம். பாட்டெப் பாக்கலாமா??
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.
என்ன தான் நீங்க கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கம்பன் போஸ்டிங்கள் தொடரத்தான் செய்யும்.
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதில் உங்களுக்கு உள்ள சாமர்தியர்த்துக்காக அந்தமான் தீவிற்க்கு அதிபதியாக்குகிறேன்.
முடிச்சு போடவே மொட்டைத்தலையில் ஒரு ஆணி அடிச்ச மாதிரி வைத்திருக்கேன்.. ஏதாவது வம்பு சிக்காதா முடிச்சு போட என்று தான் இருக்கிறேன்…. அதுக்காக..அதிபர் ரேஞ்சுக்கு போயிட்டீங்களே… ஆமா..என்னெயெ வச்சி காமெடி கீமடி பன்னலையே???
good indeed.
நன்றி தலைவரே
அதெப்பெடி? கண்ணைக்கட்டி மயக்க முடியும்? கண்ணைக் காட்டித்தானே மயக்க முடியும். அது சரி, மொட்டைத்தலையிலெ ஆணி இருக்கிற மாதிரி தெரியலயே? ஓங்கி அடிச்சி அது இருக்குற இடம் தெரியாதது மாதிர் செஞ்சிட்டிங்களோ? காமெண்ட் அடிக்கணும்னா ரொம்ப கூர்ந்து படிக்க வேண்டியிருக்குது. ஏதோ எம்மால் முடிந்த அள்வுக்கு நாலு வரி எழுதிட்டேன் !
ஓ.எஸ்.ஸுப்ரமணியன்.
என் பதிவுகள் கூட கூர்ந்து படிக்கும்படி இருக்கா?? சந்தோஷம் தான்.