கணக்கு சிலருக்கு இனிக்கும். பலருக்கு கசக்கும். ஒரு காலத்தில் கணக்கில் நல்ல மார்க் எடுத்தாத் தான் இன்ஜினியரிங் காலேஜ்களில் சீட் கிடைக்கும் என்ற நிலை.. (இப்பொ அந்த சமாச்சாரமெல்லாம் லேதண்டி..). அதான், எல்லார்க்கும் குடுத்தது போகவே, இம்புட்டு சீட்டு காலியா இருக்குன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிகினே கீறாங்களே..) ஒட்டுமொத்தமா கணக்குக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்களோ??
இந்தியர்களுக்கு கணக்கு ரொம்பவே நல்லா வருதுங்கிறதும், மனப்பாடமா வாய்ப்பாடுகள் அத்துபடி என்பதும் உலகமே ஒப்புக் கொள்கிறது. இந்தத் திறமை தான் இந்தியர்களை உலகம் முழுதிலும் வேலைக்கு வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதான காரணமாய் சொல்கின்றனர். (அப்படித்தானா??) இவர்களின் இந்த திறமையினைக் குறைத்து விட்டால், அதாவது கால்குலேட்டர், கம்ப்யூட்டர் இல்லாட்டி ஒரு வேலையும் செய்ய முடியாத ஆளாக்கி விட்டால், நம் மக்களும் பல நாட்டு மக்களோடு சமமான சாமான்யர்கள் ஆகி விடுவர். இந்த மாற்றத்துக்குத் தான் நம்முடைய பாட திட்டங்கள் மாறி வருகின்றனவோ என்ற பரவலான குற்றச்சாட்டு உண்டு. (இதற்கு ஆதாரம் ஏதும் இருக்கா? என்று கேட்டால்.. சாரி.. என்றும் கை விரிக்கிறார்களே சார்)
ஏடும் எழுத்தாணியும் மட்டும் வச்சிட்டு எவ்வளவோ ஜாதகம் தொடர்பான ஓலைகளும், கிரகணம் பற்றிய குறிப்புகளும் நம் ஆட்கள் குறித்து வைத்து சொல்லி வைத்தனர் என்பது இன்று நினைத்தாலும் பிரமிப்பாய் இருக்கும். மூன்று கிலோமீட்டருக்கும் மேலான தொலைவிலிருந்து 63000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பெரிய்ய கல்லை கோபுர உச்சிக்கு கொண்டு செல்லும் கலையை சும்மா வெறுமனே Trial & Error முறையில் செய்திருக்க முடியாது. அதுக்கு முன்னாடி கணக்கு போடாமலா இருந்திருப்பர் நமது மூதாதைய சோழர் தாத்தாக்கள்!!!!
அந்தக்கால கணக்கு இப்பொ நெனைச்சாலும் கதி கலங்க வைக்கும். சரியான நாலாஞ் சாமத்திலெ பொறந்தவன் என்கிறார்கள். இந்த ஜாமம் கணக்கு தான் ஜாதகத்தில் பெரிய பங்கு வகிப்பதாய் விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ”அனா” கணக்கு தொடங்கி, ”படி”, ”ஆழாக்கு” எல்லாமே கணக்கு தொடர்பானவை தான். இன்னும் எத்தனை கன்வெர்ட்டர்கள் வந்தாலும் இந்த மில்லியன், டாலர், Feet, Inch, மைல் இப்படி மாற்ற பல குழப்பங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. காவேரி பிரச்சினையில் கியூசெக் அடிக்கடி அடிபடும். குடிநீராக அதே தண்ணீர் வரும்போது கேலன்களில் மாறும். வீடுகளுக்கு வரும் போது லிட்டர்களாய் நிற்கும். அந்தத் தண்ணிக்கு குவாட்டர், கட்டிங் இதெல்லாம் தனி. அந்தமானில் 180, 375, 750 என்று மில்லிகளையே பெயராக சொல்கிறார்கள்.
நிலம் பட்டா போன்ற சமாச்சாரங்களில் ஏக்கர், ஹெக்டேர், செண்ட் கிரவுண்ட் என்று பேசிவிட்டு கடைசியாக சதுர அடிக்கு வந்து நிற்பர். படிக்கும் போது மீட்டரில் படித்து, வேலைக்கு அடியில் என்பது எல்லாம் மாறியே ஆக வேண்டிய கட்டாயங்கள். இன்னொரு குழப்பும் மேட்டர் தங்கம். சவரன், பவுன், கிராம் ஆகிய குளறுபடிகள். மகளிருக்கு கூட இதில் ரொம்பவே குளறுபடிகள் இருப்பது இமான் அண்ணாச்சியின் சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க மூலம் தெரிந்தது. இன்றைய இளைய தலைமுறை தங்கத்தில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி.. (தங்கத்தின் விலை அந்த உயரத்தில் இருப்பதும் ஒரு உண்மையான காரணம்)
கணக்கு மேல் சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கு. 6 லிருந்து 8 போகலையா? கடன் வாங்கு. ஆக இந்தக் கடன் வாங்குதலைக் கற்றுத் தந்ததே கணக்குத் தான் என்று சொல்வார்கள். எனக்கு என்னவோ, அப்படித் தெரியவில்லை. இல்லாத போது அல்லது குறைவாக இருக்கும் போது, அதன் அருகிலேயே அதிகம் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து எடுப்பது. அதுவும் நல்ல காரியத்துக்கு. பார்க்கப் போனா, இது ஓர் ஏழ்மையைக் கழித்து, செழுமையினைக் கூட்டி, சமதர்ம சமுதாயம் அமைத்திட வழி வகுக்கிறது (இங்கும் கணக்கு தானோ!). இதில் வேடிக்கை என்ன வென்றால், எடுக்கும் இடம், எடுத்த பிறகும் கூட பெரிய எண்ணாகவே இருக்கும்.
கணக்கு போட்றது, கணக்கு தீர்க்கிறது, கணக்கு பன்றது இப்படி எல்லாத்துக்கும் (ம்…எல்லம் தான்) இந்த கணக்கு ஒட்டி உறவாடுகிறது. மனக் கணக்கு மகாதேவன்கள் பலரை நான் பாத்திருக்கிறேன். அந்தமானில் கடைக்கோடி கிரேட் நிகோபார் தீவில் ராஜாமணி என்று சிண்டிகேட் வங்கியில் நண்பர் இருந்தார். 1986 களில் 500க்கும் மேற்பட்ட அக்கவுண்ட் நம்பர்களை ஆள் முகம் பார்த்தே சொல்லி விடுவார். கல்லூரி காலத்தில் ஒரு முறை மட்டும் ரோல் நம்பரினைக் கேட்டு அப்படியே 1200க்கும் மேற்பட்ட நம்பர்களை ஞாபகம் வைத்திருக்கும் வில்லேஜ் விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு கணக்கு. உங்களுக்கும் எனக்கும் ஒரு மாசப் போட்டி. தினமும் எனக்கு ஒரு வணக்கம் சொன்னா ஒரு லட்சம் தருவேன். பதிலுக்கு நீங்க ஒரு ரூபா குடுங்க. அடுத்த நாள் நான் ஒரு லட்சம் தருவேன். நீங்க ஒரு ரூபாயை ரெட்டிப்பாக்கி 2 ரூபா குடுங்க. அடுத்த நாள் 4 ரூபா கொடுத்து லட்சம் வாங்கிட்டுப் போங்க. இப்படியே நீங்க அடுத்தடுத்து 8, 16, 32, 64, 128 ரூபாய் கொடுத்து லட்சம் லட்சமா அள்ளிட்டுப் போங்க.. நீங்களும் வெல்லலாம் 30 லட்சம். ஜாலியா இருக்கா கணக்கு. கால்குலேட்டரோ, அல்லது கம்ப்யூட்டரில் எக்செலோ வைத்து கணக்கு போட்டுப் பாருங்க… உங்க பேங்க் கணக்கே தீந்திருக்கும். [ஜாக்கிரதை நீங்க எனக்கு 30 நாட்களில் 107 கோடி க்கு மேல் குடுக்க வேண்டியிருக்கும்]
கம்பராமாயணத்தில் இப்படி குழப்பும் கணக்கு இல்லாமலா இருக்கும். கம்பர் பயன்படுத்தும் படைகளின் கணக்கு புரியாமலேயே இருந்தது. (அப்பொ கம்பரோட மத்ததெல்லாம் புரிஞ்சதா என்ன??) வெள்ளம் என்று அடிக்கடி கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார். பில்லியன் மில்லியன் இப்படி ஏதோ இருக்கும் என்று நினைத்து இருந்து விட்டேன். அன்மையில் அந்தமான் வந்திருந்த சரஸ்வதி ராமநாதன் அவர்கள் ஒரு அருமையான கம்பன் உரை நூலைக் கொடுத்தார்கள் அன்போடு. பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்). நம்ம சுவாமி பப்ளிஷர் வெளியிட்டிருக்கும் Discipilinary Proceedings புத்தகத்தை விடவும் சற்றே பெரிசு. இதில் வெள்ளம் என்பதற்கு விளக்கம் வருது.
1 யானை + 1 தேர் + 3 குதிரைகள் + 5 காலாள் = ஒரு பத்தி3 பத்திகள் = ஒரு சேனாமுகம்3 சேனா முகங்கள் = ஒரு குடமம்3 குடமங்கள் = ஒரு கணம்3 கணங்கள் = ஒரு வாகினி3 வாகினிகள் = ஒரு பிரதனை3 பிரதனைகள் = ஒரு சமூ3 சமூக்கள் = ஓர் அனீகினி10 அனீகினீக்கள் = ஓர் அக்குரோணி8 அக்குரோணிகள் = ஓர் ஏகம்8 ஏகங்கள் = ஒரு கோடி8 கோடிகள் = ஒரு சங்கம்8 சங்கங்கள் = ஒரு விந்தம்8 விந்தங்கள் = ஒரு குமுதம்8 குமுதங்கள் = ஒரு பதுமம்8 பதுமங்கள் = ஒரு நாடு8 நாடுகள் = ஒரு சமுத்திரம்8 சமுத்திரங்கள் = ஒரு வெள்ளம்..
அப்பாடா.. பேசாமெ ஒரு விளம்பர இடைவெளி விட்றலாமோ!!!! ராமாயண சீன்லெ எங்கே வருதுன்னும் பாக்கலாமே. கிஷ்கிந்தையில், அனுமன் சொல்கிறான்.. வள்ளலே, இந்த வாலியிடம் 70 வெள்ளம் சேனைகள் இருக்கிறது என்கிறார். மறுபடியும் அதே சிக்கலான கேள்வி? ஒரு வெள்ளம் என்றால்..? பதில் 5.87 லட்சம் கோடி யானைகள், அதே அளவு தேர்கள். 17.61 லட்சம் கோடி குதிரைகள். 29.35 லட்சம் கோடி வானரங்கள். (அப்பா…இப்பவே கண்ணெக் கட்டுதா???)
வெள்ளம் ஏழு பத்து உள்ள; மேருவைத்தள்ளல் ஆன தோளரியின் தானையான்;உள்ளம் ஒன்றி எவ்வுயிரும் வாழுமால்வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.
மீண்டும் வேறு ஏதாவது கம்பக் கணக்கோடு வருகிறேன்.
புதிய புதிய தகவல்கள் ஒவொரு எண்ணிக்கைக்கும் ஒரு பெயர் …நினைவில் கொள்ள சற்று கடினமே என்றாலும் தமிழின் வலிமையை உணர முடிகிறது ….மிக்க நன்றி நண்பரே ….
எனது பதிவைப் படித்து கருத்தும் ஆதரவும் தரும் உங்களுக்கு நன்றிகள்.
கணக்கு வழக்கு இல்லாமல் கம்பரைப் பற்றி எழுதி வருகிறீர்கள்.
நன்றாக எழுதுங்கள்.
நுணுக்கமான கணக்குகள் ஏதாவது இருந்தா அதை கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் !
நீங்கள் எழுதியதை நான் படித்து விட்டேன் என்று சொல்ல வந்தேன். அம்புட்டு தான் !
O.S.Subramanian.
நான் கணக்கு வச்சிக்கிறேனோ இல்லையோ, அந்த வலைப்பூத் தளம் கணக்கு போட்டு 200 பதிவு ஆயிடுச்சி என்கிறது… சும்மா நானும் கமெண்ட் படிச்சிட்டேன் என்று காட்டி விட்டேன் தான்.
வாங்க..! வாழ்த்துக்கள்..!
நன்றி..ஆதரவுக்கு நன்றி.
இப்படிப் பார்த்தால் மஹாபாரதப் போர் ரொம்ப சிறுசு போல இருக்கே. மஹாபாரதத்தில் வருகின்ற புள்ளி விவரப்படி 11 அக்குரோணி சேனைகள் கவுரவரிடமும், 7 அக்குரோணி சேனைகள் பாண்டவரிடமும் இருந்தன.
ஒரு அக்குரோணி என்பது 3x3x3x3x3x3x3x10x18 = 393660 பத்திகள்
அதாவது அதாவது 3,93,660 ரதங்கள், 3,93,660 யானைகளும், 11,80,980 குதிரைகளும், 19,78,300 வீரர்களும், போர்க்களத்தில் அணிவகுத்து நின்றிருக்கலாம்.
இது மகாபாரதக் கணக்கு. இராமயணக் கணக்கு அப்படி அல்ல.
வானரப் படையிடம், குதிரை, யானை, தேர் எதுவும் கிடையாது.
5.87 லட்சம் கோடித் தேரை வச்சுகிட்டா இராமனும் இலட்சுமணனும் தரையில் நின்று போர்புரிந்தார்கள்? அப்புறம் ஆஞ்சனேயர் தேரில் ஏறி????
குதிரை, தேர், யானை இருக்குமோ இல்லையோ, ஆனால் எண்ணிக்கை அவ்வளவு என்பது சரியாய் இருக்கும் போல் இருக்கிறது. உலக மக்கள் தொகை போல், அசுரர் தொகை ஆயிரம் கோடி வெள்ளம் என்றும் பின்னர் இரண்யன் வதைப் படலத்தில் வருதே….