ஒரு சின்ன பிளாஷ்பேக்.. (இந்த இடத்தில் நான் கொஞ்சம் வானத்தைப் பார்ப்பேன்.. நீங்களும் கூடவே பாருங்க..) நான் அப்போது பரமக்குடியில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று தலைமை ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். வழக்கமாய் அவர் வகுப்புகளுக்கு வரமாட்டார். அவர் வகுப்புக்கு வந்தாலே ஏதாவது வில்லங்கம் இருக்கு என்று அர்த்தம். வில்லங்கம், கையில் இருந்த கவர்மெண்ட் கவரில் இருந்தது.
இந்த கிளாசில் படிக்கும் யாரோ ஒரு ஸ்டூடண்ட் புகார் மனு கொடுத்திருக்காங்க. எனக்கோ லேசா உள்ளூர உதறல். (இப்பொ தெரிஞ்சிருக்குமே… அந்தப் புகார் குடுத்ததே அடியேன் தான் என்று). அது வேறு ஒன்றும் இல்லை. ப்ளஸ் டூவில் English மீடியத்தில் படிக்க மாதம் ரூ 40 கட்ட வேண்டும். ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருந்தது. ஆனா பிற்படுத்தப் பட்டோருக்கு மாதம் 20 ரூபாய் கட்டினால் போதும் என்று யாரோ, என் காதில் ஓதினார்கள்.
சரி.. அடிச்சுத்தான் பாப்போமே என்று துக்ளக் புத்தகத்தில் வரும் புகார் பகுதியில் எழுதினேன். துக்ளக்கிலிருந்து அந்தப் புகார் கல்வித்துறை, பிற்பட்டோர் நலத்துறை என்று போய், கடைசியில் ரூ 20 மட்டும் வசூல் செய்யும்படி உத்திரவு அந்தப் பழுப்பு நிற அரசாங்க கவரில் வந்தது. நல்ல வேளை, யார் என்ன என்று அதிகம் விசாரிக்காமல் நிலமை சுமுகமாய் முடிந்தது.
பிளாஷ்பேக் முடிந்தது.
இதுவரை எனது பால காண்டத்தைப் பார்த்தோம். இனி எனது பையனின் பால காண்டத்தைப் பாப்போமே… என் பையன் தனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு சொல்லி படுத்தி எடுத்தான். (கேட்டா வாங்கித் தர வேண்டியது தானே… என்று நீங்க மனசுலெ கேக்கிறது எனக்கும் கேக்குதுங்க..) வாங்கிக் கொடுக்க கடைக்குப் போகும் போது தான் அது யானை விலை, விலை குதிரை விலையாய் இருக்கிறது. (அது சரி விலை அதிகம் என்று சொல்லும் போது மட்டும், ஏன் யானை குதிரை என்று சொல்கிறார்கள்?) கியர் வைத்த சைக்கிள்தான் வேணும் என்று கொரங்குப் பெடல் போட்டான் பையன். காரில் கூட கியர் இல்லாமல் இருந்தா எவ்வளவு சௌரியமா இருக்கும் என்று நினைப்பவன் நான். கார் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு கியர் இல்லாத வண்டியில் டிரயல் போய், அது மேடு ஏறாததால் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனா பையனோ, அடம் பிடிக்க, வழக்கம் போல் இல்லாள் திட்ட நான் வாங்கிக் கொடுத்தேன். (வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக் கதை)
அந்த கியர் சைக்கிளை வாங்கிய பின்னாடி, என் பையன் ரசித்து ஓட்டினானோ இல்லையோ, நான் சில சமயங்களில் ரசித்து ஓட்டியதுண்டு. ஆதாவது சைக்கிளிங் செய்த மாதிரியும் இருக்கணும், செய்யாத மாதிரியும் இருக்கணும் (அலுங்காமெ குலுங்காமெ) என்ன செய்யலாம்? சும்மா காசு பாக்காமெ ஒர் கியர் சைக்கிள் வாங்கி ஓட்டுங்க.. யாராவது ஒரு மாதிரியா பாத்தா, Eco Friendly, Environment Friendly, Energy Conservation, ozone Layer bachaave அப்படி இப்படி என்று ஏதாவது பீலா விட்டுப் பாருங்கள். அடுத்து ஒரு பய உங்களை ஏதாவது கேப்பாகளா என்ன??
இப்படி நானே ஆசை ஆசையா ஓட்டின சைக்கிளைக் கொண்டு போய் கார் செட்டில் பூட்டி வச்சிட்டான் பையன் கொஞ்ச நாளா. வெவரத்தெக் கேட்டா ரோடு இப்படி இருந்தா நான் எப்படி ஓட்ட முடியும்றான். நியாயமான கேள்வி தான். முழுக்க முழுக்க அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தினரும் மட்டுமே பயன் படுத்தி வரும் ரோடு அது. நமக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு என்று விலகும் மனப்பாங்கு.
ஒரு முறை ஒரு ஆட்டோ அந்த மோசமான ரோட்டில் சிக்கி நின்று விட்டது. ஆட்டோவை எடுக்க முயற்சிக்காமல் எங்க வீட்டைப் பாத்து ”நீங்களெல்லாம் மாசாமாசம் சம்பளம் வாங்கிட்டு நிம்மதியா இருங்க. இந்த ரோடு பத்தி யாராவது ஒரு வார்த்தை கேக்கிறீங்களா? நல்லா இருங்க…” என்று நல்லா(??) வாழ்த்திவிட்டும் போனார்.
சைக்கிள் ஓட்டம் நின்னு போனதில் கடுப்பாய் இருக்கும் என் பையன் இன்னும் கொஞ்சமாய் உசுப்பு ஏத்தினான். ”ஏதோ RTI அது இதுன்னு அடிக்கடி சொல்லிட்டு கிளம்பிட்றீங்களே… இந்த ரோடு பத்தி கேக்கக் கூடாதா?”… ”ஆமா.. கேக்கலாம் தான்..அது சரி நீ ஏன் கேக்கக் கூடாது” பையன் சந்தேகமாய் “யார் யாரெல்லாம் கேக்கலாம்?” ”Any Indian Citizen Can ask” என்றேன். ”அப்பொ என்கிட்டெ ஆதார் அட்டை இருக்கு நான் கேக்கிறேன்” என்ற முடிவோடு RTI application தயாரானது. பையன் படிக்கும் பள்ளிக்கூட முகவரியிலிருந்து பொதுப்பணித் துறைக்கும் முனிசிபல் கவுன்சிலுக்கும் RTI application பறந்து போனது.
20 நாட்கள் அமைதியாய் கழிந்தது. பையன் இன்னும் 10 நாளில் எந்தப் பதிலும் வராட்டி என்ன செய்வது என்பதில் ஆர்வமாய் இருந்தான். அந்தமான் தீவில் ஆர் டி ஐ யினை பயன்படுத்தும் முதல் சிறுவன் என்பதில் சற்றே கூடுதல் ஆர்வம். அதற்கும் மேலே Central Information Commission வரை போகலாம் என்றவுடன் இன்னும் குஷியாய் இருதான். ஆனால் அதுக்கெல்லாம் வழி வைக்காமல் முனிசிபலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பள்ளிக்கூடத்துக்கும் அப்போது தான் இப்படி RTI போட்ட விபரம் தெரிந்தது.
எந்த ரோட்டைப் பற்றிய விபரம் கேட்டிருக்கிறான் என்பது புரியாமல் ஆபீசுக்கு வந்து விளக்கும் படி வந்தது கடிதம். ஏற்கனவே சரியில்லாத ரோட்டை போட்டோ எடுத்து வைத்தது ஞாபகம் வர, அதையும் கூகுள் மேப்பில் ரோடு இருக்கும் இடத்தையும் காட்ட முனிசிபல் ஆபீஸ் சென்றான் பையன். நல்ல உள்ளம் கொண்ட பெண் அதிகாரி உட்கார வைத்து எல்லாம் பார்த்து (நல்ல வேளை அப்பா யார் என்று மட்டும் கேக்கலை) நாளை தகவல் வரும் என்று அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் காலையில் பாத்தா… மேஜிக் மாதிரி ஜல்லி வந்து எறங்குது, தார் பீப்பாய் வந்து எறங்குது.. கூட்டமாய் ஆட்கள் வந்து, ரோடு போடும் வேலை ஆரம்பம் ஆயாச்சி..(சத்தியமா இதை நானே கூட எதிர்பாக்கலை).. ரோடு வேலை ஆரம்பித்தவுடன் பையன் கேட்ட அடுத்த கேள்வி, ”உங்க ப்ளாக்கில் இதெ கண்டிப்பா எழுதிடுவீங்களே!! ஆமா ராமாயணப் பாட்டுக்கு எங்கே போவீங்க?” ஆமா..அது என் கவலை..ஆளைவிடு என்றேன் அப்போதைக்கு..
நாங்க என்ன ஆபீசில் சும்மாவா இருக்கோம்? எங்களுக்கு வேற வேலையே இல்லையா என்ன? இந்த லட்சனத்தில் இந்த RTI க்கு வேறு 30 நாளில் பதில் தரணுமாமே!! இப்படி புலம்பும் ஆட்களை அதிகமாய் ஆபீசில் பாத்திருப்பீங்க. ராமாயணத்தில் ஒரு தடவை இந்த 30 நாள் கெடு வருது. சீதையை அனுமன் தேடிக் கொடுக்க, சுக்கிரீவன் கொடுத்த கெடு நாள் 30 தான். இதிலெ ஒரு பியூட்டி என்னன்னா, சீதை இருக்குமிடம் அனுமனுக்கு தெலுஸலேது. சீதையைப் பாத்திருக்காரா?? Not at all. போகும் பாதை தெரியுமா? நஹி மாலும். இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியில் 30 நாளில் முடிங்க என்று அந்தக் கால அரசு உத்திரவு. இந்த RTI ல் உங்க ஆபீசிலெ இருக்கிற, உங்களுக்கே நல்லா தெரிஞ்ச தகவல் தர 30 நாள் போதாதா என்ன?
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்சுற்றி ஓடித் துருவி ஒருமதிமுற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடைகொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
இந்தக் கால அரசு அதிகாரிகளிடம்/ஊழியர்களிடம் இருக்கும் Resources களை விட அனுமனின் இருந்த Resourse அதிகம். எவ்வளவு தெரியுமா? இரண்டு வெள்ளம்.. ஆமா வெள்ளம் என்றால்??? அதுக்கு ஒரு தனி போஸ்ட் வருது.. அப்பொ பாக்கலாமே… வரட்டா???
குட்டி பதினாறு அடி பாய்ந்தது உண்மை தான் புரிகிறது.(என் மகன் -பொறிஞர் கவிதை எழுதிய போது மிக மிக மகிந்தேன்) அஃதே போல் நீரும் சான்றோன் எனக் கண்ட தந்தை ஆகி மகிழ்ந்திருப்பீர்——-வாழ்க தனயனுக்கு வாழ்த்து .தொடர்க.
கம்பன் இழுக்காவிடின் ஆகுமோ ? லவகுசா ராமனை போருக்கு-சமருக்கு அழைத்தனரே — எப்ப்படி –சம்பந்தபடுத்தி விட்டோமல்லவா —நல் நாள் என்றும் அன்பு ஆரா
(தம்பிக்கு மீண்டும் மீண்டும் தொடர ஆர்வம் எழட்டும்.பெயர் மின் அஞ்சலில் தெரிவிக்க)
கம்பன் வீட்டு கட்டுத்தறியும்
கவிபாடும் என்று தான் கேள்வி பட்டேன் …
இங்கே கைராட்டையே …போட்டு இருக்கு
கம்பன் வீட்டு கட்டுத்தறியும்
கவிபாடும் என்று தான் கேள்வி பட்டேன் …
இங்கே கைராட்டையே ..RTI.போட்டு இருக்கு
மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துத் தரணுமா என்ன??.. அதுவா ஆரம்பிச்சிடுச்சி… முந்தா நாள் என்னோட லெக்சர்லெ தன்னோட அனுபவம் + வெற்றிக்கதை சொல்லி, கைதட்டல் வாங்கிட்டான்.
இது வடிகால் அல்ல..
வாய்க்காலே தான்
உங்களின் கருத்துக்கு நன்றி..
குட்டி பதினாறு அடி பாய்ந்தது
மனிதப் புலிகள் செய்வதை அந்தக் குட்டிப் புலிகள் அப்படியே கற்றுக் கொள்கின்றன. இப்பொ தெரியுதா? இளைய தலைமுறையின் தவறுக்கு யார் காரணம் என்று.
பதில் கருத்து பதிந்தமைக்கு நன்றி.