இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)
நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)
முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.
சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.
சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)
பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.
இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)
கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??
வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)
சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)
அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.
ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??
pirivuth thuyar aankalaiyum vittuvaikkavillaai polum!aananappatta ramanae azhuthirukkannaa namellaam emmaaththiram?
katturaiyaa ithu?kotturai!ennaa,padikkumpothe sirichchi sirichchi kannilerunthu thanneer athanga ananathak kanneer kottum urai!
நன்றி..நன்றி…
Awesome Sir! Very difficult to write such eloquent stuff in Tamil.Great going! Will certainly read all the posts as and when I get the time.
உங்களின் தமிழ் ஆர்வத்திற்க்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் – super wordings
வாலி உண்மையிலேயே உணர்ந்து எழுதி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??- illai enbadhillai nangal vazhim naattile
இருக்கா?? இல்லையா?? விளங்கலயே…!!!
நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்.சிரித்து கொண்டே அழுகின்றேன்
.கே.ஆர்.விஜயா -நாகேஷ் படம் பெயர் சட்டென்று நினைவினில்.இல்லை.நாகேஷ் அழுது கொண்டே இருக்க
கதாநாயகி தேற்றி அவரை இயல்பாக்குவார்.(அனுபவி ராஜா அனுபவிதானா சார் ? )
ஆனந்த கண்ணீர் உண்டல்லவா? சுகமான சோகம் என் ஒரு சொலவடை கூட உண்டு .சோகம் ஒரு சுகமாகிறது.–(நோட் பண்ணுங்க இயக்குனர்களே நல்ல தலைப்பு ) மேத்தாவின் கவிதை கண்ணீர் பூக்கள் , எம் ஆர் ராவின் இரத்தக்கண்ணிர்
அம்மாவின் கண்ணீர் சாரதா- கண்ணீர் உப்பிட்டு …அடிக்க ஆளில்லை (சினிமாவிற்கு.காசு கொடுத்து விட்டு அழுகிறீர்கள்(நம் பெண்கள்) நடிகைகள் காசு வாங்கி விட்டு (கிட்டு) அழுகிறார்கள்-நன்றி லேட்.வாரியார் சுவாமி) ஆண்கள் அழுத கதையெல்லாம் சொல்ல மாட்டார்கள்.கம்பர்
மிகைப் படித்தல் காவிய அழகு தான்.
சிறப்பாக வே அமைந்துள்ளது.ஆரா .
உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி…
என்ன நண்பரே, தங்களது ராமாயண கட்டுரை வந்து நீண்ட நாட்களாகி விட்டனவே. சரக்கு தீர்ந்துவிட்டது என்பது காரணமாகாது. அடிக்கடி எழுதவும்.தாங்கள் அனுப்பிய தூது செல்ல ஒரு தோழி, கடல் முதல் குடம்வரை இரண்டும் தமிழ் ஃபாண்டில் இல்லையே? என்ன பிராப்ளம்?