Do or Die செய் அல்லது செத்துமடி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீங்க.. வாழ்க்கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான்… இதனை விட்டால் வேறு வழி இல்லை.. என்கின்ற போது தான் இந்த வார்த்தைகளின் பிரயோகம் வரும். ஆனா இப்பொ எல்லாம் பைக்கில் சிலர் வேகமாப் போவதைப் பாத்தால், அந்த பயணம் தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதாய் போகிறார்கள். சில சமயம் அதுவே அவர்களின் கடைசிப் பயணமாகவும் மாறி விடுவது தான் வேதனை. இப்படி வேகமாகப் போகும் ஒருவரை மடக்கி கேட்டேன்: “அப்படி என்ன அவசரம்?”. கிடைத்த பதில்: அநிட்3கோ (அந்தமானின் டாஸ்மாக்) கடை மூடி விருவார்கள்.. அதான். அடப்பாவிகளா.
நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்காய் எரிந்தும் போய் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். ஹிட்லர் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. (இப்படியும் நடக்குமா என்ற பில்டப்புடன் ஆரம்பிக்கலாம் இந்தச் சம்பவத்தை)
ஹிட்லரின் திறமையினைக் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர், அவரிடம் (கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டாராம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஹிட்லர் தன் அடியாளான படையாளனைக் கூப்பிட்டு, இந்த மூனாவது மாடியிலிருந்து குதி என்றாராம். அவனும் ஒன்றும் யோசிக்காமல் குத்தித்து உயிரை விட்டானாம். இதுலெ ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் (பத்திரிக்கைக் காரங்களுக்கு கூடவே எப்பவுமே அது தான் இருக்குமே?) ஒருத்தர் தான் இப்படியா?? என்று இழுத்தார் அந்த நிருபர். ஹிட்லர் அடுத்த படைக் காவலரை கண்ணால் ஜாடை காட்டினார். அடுத்த உயிர் போனது.
நம்பவே முடியலையே…இது நிருபர். ஹிட்லர் மூன்றாவது ஆளை அழைத்தார். நிருபர் காலில் விழாத குறையாய் வேண்டாம். எனக்காய் ரெண்டு உயிர் போனது போதும் என்றார். படைக்காவலன் பேசினான். யோவ் ஆளை வுடுய்யா… இந்த ஆள் கிட்டெ குப்பெ கூட்றதெ விட சாவுறது மேலுண்ணு அவனவன் சந்தோஷமா சாவுறான். (தகவல் உபயம் சுகிசிவம்). இது எப்படி இருக்கு?
செய்யும்தொழிலில் சிரத்தையோடு செய்யணும் என்பது தான் எல்லாரும் எதிர் பார்க்கிறார்கள். சும்மா ரெண்டு நிமிஷத்தில் செய்யும் நூடூல்ஸில் எத்தனை நுணுக்கம் இருக்கு தெரியுமா? (அவனவன் நொந்து நூல் ஆகும் போது, நூடுல்ஸில் நுணுக்கம் வேற கேக்குதா?) நான் செய்யும் நூடூல்ஸில் எப்பவும் அந்த மசாலா சரீய்யா கரைஞ்சிருக்காது. கட்டி கட்டியா இருக்கும். வீட்டு அம்மணி செய்யும் போது லேசா எட்டிப் பாத்தப்பொ நானு செஞ்சிட்டு வந்த தப்பு விளங்கிடுச்சி. முதலில் தண்ணியிலேயே மசாலா போட்டு விட்டால் அந்த பிரச்சினை தீந்தது. (என்ன ஒரு பெரிய்ய கண்டுபிடிப்பு?)
வாத்தியார் படத்துப் பாட்டில் வரும் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வசனம். “எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் கொஞ்ச்சம் நீளம்”. திறமைசாலிகள் கூடவே இருப்பது வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை. ஜால்ராக்களை கூடவே வைத்து இருப்பதில் தான் ஆபத்து ஜாஸ்தி. 100வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டி அழகு பார்க்கும் ஜால்ராக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில “கீழ்படிந்துள்ள” என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருப்பார்கள். ஆபீசில் ஒரு பைல் வேண்டும் என்றால் உடனே ஓடி விடுவார்கள் தேட. என்ன பைல் என்பதைக்கூட கேட்காமல் (ஆளை உட்டா பொதுமடா சாமி என்ற ரகம்).
அதே மாதிரி வச்சிட்டு வாடான்னா, பத்த வச்சிட்டு வருகின்ற ஆட்களும் உண்டு. இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சிக்கும் உண்மை என்னவென்றால் சொல்ல வேண்டிய சேதியை பக்குவமா பாத்து பதமா சொல்ல வேணும் இல்லாட்டி இப்படி ஏதாவது ஏடா கூடமா நடக்கும். யார் கிட்டெ சொல்றோம் என்பதையும் குறிப்பா சொல்லாமல் விட்டாலும் சிக்கல் தான் வரும்.
ஒரு தலை வச்சிருக்கும் தறுதலைகளான நமக்கே (சாரி.. சாரி.. எனக்கே) இவ்வளவு சிக்கல வந்தா ஒன்பது தலையை extra fitting ஆ வச்சிருக்கும் ராவணனுக்கு வராதா? வந்ததே. “தீ வை” என்ற உத்திரவு பொதுவாய் வந்து விழுந்தது. அனுமன் வாலில் வைத்தனர் அரக்கர் தீயை. அனுமனோ, ஊருக்கே தீயை வைத்தான். அரசாங்க உத்திரவை அச்சரம் பிசகாமல் follow செய்தார்கள் இருவருமே. “என் வாலைக் கொளுத்தும் இவர்களது செயல், இந்த ஊரைக் கொளுத்துக” என்று அனுமனுக்கு பட்டதாய் கம்பர் சொல்கிறார்.
கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றே இவர் வென்றி
சுடுவிக்கின்றது இவ்வூரைச் சுடுக என்று உஐத்து துணிவு என்று
நடு உற்று அமையம் உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்.
என்ன இனிமே ஏதாவது சொல்லும் போது சரிய்யாச் சொல்லுவோமா???