இந்தப் பாட்டை இப்பொக் கேட்டாலும் கொட்டைப் பாக்கும் வெத்திலையும் ஞாபகம் வருதோ இல்லையோ, குஷ்பு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அந்த இடுப்பு அசைவும், வெத்திலை போடாமலேயெ சிவந்திருக்கும் மேனியும் அது எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடும் அந்த உதட்டுச் சாயமும்… அப்பப்பா.. (போதும் குஷ்பு புராணம் .. அதான் கோவிலே கட்டிட்டாங்களே!!! கொஞ்சம் விட்டு விட்டு நாமும் நகர்வோம்.. அந்த வெற்றிலையை மட்டும் பிடிச்சிட்டு.)
வெத்திலை சாப்பிட்டா, நல்லா ஹெவியா சாப்பிட்றப்பொ, சாப்பிட்ட சாப்பாடு நல்லா ஜீரணம் ஆகும் என்பார்கள். தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. அந்த சுன்னாம்பும் பாக்கும் வெற்றிலையோடு சேரும் போது நடக்கும் வேதியியல் மாற்றத்தில் நாற வாய் செவ்வாயாக மாறுவது தான் இதன் ஒட்டுமொத்த வெற்றியின் காரணம். அந்தக்காலத்து மக்கள் நாக்குக்கு லிப்ஸ்டிக் அடிக்கச் செய்த விஷமத்தனமான கண்டுபிடிப்பாக இருக்கும் என்று என் ஆய்வு சொல்கிறது.
வெத்திலை வத்திலை வெத்திலையோ கொழுந்து வெத்திலையோ.. என்ற செமையான ஒரு பாடல் வரும். ஊரில் உள்ள ஆட்களுக்கு எல்லாம் வெத்திலை வாங்கி வருவது தான் மிகப் பெரிய்ய வேலையாச் செய்யும் சூப்பர் ரோல் அந்த ரோசாப்பூ ரவிக்கைக் காரியில் வரும். நடிப்புக்கு சொல்லவா வேணும். சூரியாவே இப்படி என்றால்..அவங்க அப்பா எப்படி சொல்லவா வேண்டும்? வெத்திலை போடும் அழகே அழகு. துப்புவதும் தான்.
இன்னும் ஒரு பழைய படத்தில் தங்கவேலுவுக்கு ஜோடியாய் நடிக்கும் ஹாஸ்யநாயகிக்கு இந்த வெத்திலை போடும் பழக்கம் இருக்கும். “என்ன துப்பனுமா.. அய்யய்யொ.. போற போக்கெப் பாத்தா, ஒரு பயலை வேலைக்குச் சேத்து அவன் கழுத்திலெ ஒரு செம்பை மாட்டி இங்கே துப்பவும் என்று ஒரு போர்டும் அவன் கழுத்திலெ மாட்டி விடனும் போலிருக்கே.. நீ அந்தச் செம்புலெ துப்பினாலும் சரி அவன் பூஞ்ச்சியிலே துப்பினாலும் சரி..” இப்படி ஒரு காமெடி வரும்.
வெற்றிலை போடும் ஆட்களை திருப்தி செய்வது மிகக் கடினம். ஏகப்பட்ட Option இருக்கும். கொழுந்து வெத்திலை, கருப்பு வெத்திலை சிலர் விருப்பமாய் இருக்கும். பாக்குகளும் பல விதம். கொட்டைப் பாக்கு, சுருள் பாக்கு இப்படி. கும்பகோணம் பகுதியில் சீவல் செம பாப்புலர். புகையிலை – அது ஒரு தனி இலவச இணைப்பு. சுண்ணாம்பும் கலர் கலராயும் தனியே இருப்பது தனிக்கதை.
அந்தமானில் காகஜ் பான் என்பது செம பாப்புலர். வெத்திலை இல்லாத வெத்திலை அது. ஒரு காகிதத்தில் சுன்னாம்பு பாக்கு ஜரிதா சேத்து தருகிறார்கள்.. (என்னென்னவோ நம்பர் சொல்கிறார்கள்..எது ஒசத்தி என்று ஒன்றும் புரியலை..)
என்னோட அப்பாவுக்கும் இந்த வெத்திலை போடும் பழக்கம் உண்டு (வியாதி என்றும் சொல்லலாம்). 1990 களில் ஒரு முறை கப்பலில் அந்தமான் வந்தார் அவர். (கேப்டன் கோபிநாத் என்ற புன்னியவான் ஒரு ரூபாய் விமானம் அறிமுகம் செய்த பிறகு தான் விமானப் பயணமே கதி என்றாகி விட்டது. அதற்கு முன்பான காலம் வரை கப்பல் தான் கதி). வாயில் பல் எல்லாம் விழுந்து விட்ட போதும் வெத்திலை போடும் ஆசை விட்ட பாடில்லை. வெத்திலை இடிக்கும் இயந்திரம் சகிதம் கிளம்பி வந்து விட்டார்.
கப்பலில் எட்டு மணிக்கே மணி அடிச்சி சோறு போட்டு தூங்கச் சொல்லி விட்டார்கள். என் அப்பாவும் வழக்கம் போல் வெத்திலை பாக்கு என்று போட்டு டிங்க் டிங்க் என்று இடிக்க ஆரம்பித்து விட்டார். வித்தியாசமான சத்தம் கப்பல் கேபினில் அதுவும் முதல் வகுப்பு கேபினில் இருந்து வந்ததால் கப்பல் அதிகாரிகள் எல்லாம் ஓடி வந்து விட்டார்கள்.. வந்ததில் தமிழ் தெரிந்த அதிகாரியாக இருந்தார்.
என்ன சார்… இதெத்தானே இளையராஜா “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்” என்ற பாட்டிலெ நடுவிலெ ஒரு பிட்டா போட்டாரு என்றேன். சிரித்தபடி போய் விட்டார்.
இருந்தாலும் மோசமான கெட்ட பழக்கங்களில் ஒன்று, இந்த வெத்திலை போட்டு துப்புவதைத்தான் சொல்ல முடியும். தெருவெல்லாம் துப்பி.. (சமீப காலமா தணுசை வைத்து கலக்குகிறது ஒரு விளம்பரம்..வெத்திலை போட்டு துப்புறதை கூலா ஹேண்டில் செய்வதை). எல்லாராலும் அந்த மாதிரி கூலாவா ஹேன்டில் செய்ய முடியும். பார்க்கும் இடமெல்லாம் புளிச் புளிச் என்று துப்பி கலரே மாத்தி விடுவார்கள்.
வேண்டாம் என்று துப்பும் சமாச்சாரமான இந்த அவஸ்தையினை அந்தமானில் பாத்து பாத்து பழக்கமாய் போய் விட்டது நமக்கு. வேண்டாம் என்று துப்புவது மாதிரி தூக்கிப் போடுவதிலும் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இப்படி இரு சிக்கல் ராமாயணத்தில் வருவதாய் கம்பர் சொல்கிறார்.
இடம்: முதலாம் ரவுண்டில் அனுமன் இலங்கை வரும் சமயம். சீதையை எல்லாம் பாக்கிறதுக்கு முன்னாலேயே.. இந்த ஊரை எப்படி அழிப்பது என்று யோசிக்கும் இடம்.
பொருள்: அனுமன் யோசிக்கிறான் இப்படி. “நம்ம வாலுங்க எல்லாம் இங்கே வந்தா எல்லாரையும் ஒட்டுக்கா போட்டுத் தள்ளியிரலாம். ஆனா நம்மாள நடக்க முடியாது போலிருக்கே.. இந்த அரக்கி பய புள்ளெக வேணாம்னு தூக்கிப் போட்டதே ரோடு முழுக்க நெறைஞ்ச்சி கெடக்கே?? எப்படி போக…” இப்படி போகுதாம் ரோசனை..
விளக்கம்: இதுக்கும் மேலெயா வேணும் வெளக்கம்???
இதோ பாடல்:
ஒறுத்தலோ நீற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ்வூர் வந்து
இறுத்தலும் எளிதா? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டா?
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இவ் வீதி எல்லாம்.
மீண்டும் சந்திப்போம்.
very nice.