சின்னக் குழந்தைகள் முன்பு, புத்தகத்தை மூடி வைத்து, சட்டென்று ஒரு பக்கத்தை திறந்து படம் இருக்கா? இல்லையா? என்று கேப்போம்.. அந்தக் காலத்தில். அந்த ரேஞ்ச்சில் ஒரு நாள் திரைப்பாடல்களில் இலக்கியத் தரம் இருக்கா இல்லையா என்று விவாதம் வந்தது. அன்றைய விவாதம் செமெ களை கட்டியது என்பதை சொல்லாமல் விட முடியாது. வீட்டுக்கு லேட்டாப் போயி வீட்டுக்காரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மட்டும் நான் சொல்லவெ மாட்டேன்.
நம்மாளுகளுக்கு ஃபாரின் சரக்குன்னா ஒரே கிக்கு தான். அது பட்டை யாய் இருந்தாலும் சரி.. பாட்டாவே இருந்தாலும் சரி. யோகம் தியானம் என்பது கூட இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போய் வந்து ஆங்கிலத்தில் சொல்லிக் குடுத்தா தான் மண்டையிலெ ஏறுதே… என்ன செய்ய??
அபிராமி அந்தாதி மாதிரி பல அந்தாதி பாட்டுகள் இங்கே எப்பொ இருந்தோ பிரபலம். ஆனா ஹிந்தியிலிருந்து வந்த அந்தாக்சிரியைத் தான் நம் மக்கள் கொண்டாடி குதூகலிப்பர். சினிமாப்பாட்டில் கூட அந்தாதி பாட்டு இருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். இதோ சில சாம்பிள்கள்:
ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
பாட்டுப் பாடி மரத்தை சுத்தும் அந்தக் காலத்து சினிமாவும் சரி, முனுக்கென்று கண் சிமிட்டும் நேரத்தில் கனவு வந்து ஆஸ்திரேலியாவோ அல்லது தாய்லாந்து கடற்கரைக்கோ தயாரிப்பாளர் செல்வில் போய்வரும் இந்தக் காலச் சினிமாவிலும் சரி.. பாடல் என்பது முழுக்க நடைமுறையில் இல்லாத ஒன்று.
தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாட்டால் வளர்ந்த சமூகம் என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப் படுத்தினால் தான் உண்டு. என்ன செய்ய நம்ம மறதி அப்படி. இப்பொவும் ஏதோ சடங்காய்த் தானெ, சடங்கு நேரத்தில் கூட பாட்டு சத்தம் கேக்குது. போகிற போக்கில் நீராடும் கடலொடுத்த பாட்டுக்கெ ரிஹெர்ஷல் தேவைப்படும் போல் இருக்கிறது.
ஆக.. சினிமா என்பதே கற்பனை என்றால், அதில் வரும் பாடல் கற்பனையோ கற்பனை. அதில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தலைப்பாக்கட்டு அல்லது மதுரை முனியாண்டி விலாசில் போய் தயிர் சாதம் தேடுவது மாதிரி தான் இதுவும்.
ஆனால் என்றோ எப்போதோ கேட்ட பாடல்கள் இன்னும் இனிமையாக காதுகளில் ஒலிக்கும் போது அவை அமரத்துவம் பெற்ற லிஸ்டில் அடைத்திடலாம். அதாவது கிட்டத்தட்ட இலக்கியத்தரம் என்று. ஆமா இலக்கியத்துக்கு என்ன தரம் என்று கேக்கிறீங்களா?? (பாமரனுக்கு புரியக்கூடாது. நீண்ட ஆயுசு. எப்பவும் இனிக்கனும் – அது தான் இலக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாருக்கும் ஈசியா புரிஞ்ச்சிட்டா அப்புறம் கோனார் நோட்ஸுக்கு ஏது வேலை?).
நம்ம கம்பர் பத்தி கொஞ்ச நாளா யோசிக்கிறதாலெ, சினிமாப் பாட்டுக்கும் கம்பருக்கும் இருக்கும் தொடர்பையும் லைட்டா டச் செய்து பாத்தேன்.
கற்பாம் மாணமாம், கண்ணகியாம் சீதையாம் என்று TMS கணீர் குரலில் பாடுகிறார். கம்பனைக் கூப்பிடுங்கள் கவிதை எழுதுவார் என்கிறார். இன்னொரு கருப்பு வெள்ளை படம் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறது. (பெண்கள் மலர் போல் இல்லை என்கிறார் அவர்)
அன்றைய இலக்கியம் படித்த உயர்தர மக்களுக்காய். (ஒரு வேளை அந்த இலக்கியத்தமிழ் அன்று எல்லாருக்குமே புரிந்திருக்குமோ? பெண்புலவர்கள் கூட இருந்திருக்காங்களே!! குடும்பத்தோடு இலக்கியம் பேசி மகிழ்ந்திருக்கலாம்).
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அங்கு
மலைத்தேன் என நான் மலைத்தேன்.
இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வந்தது இன்றும் இனிக்கிறது. எல்லார்க்கும் புரியுதே.. அப்பொ அங்கங்கே இலக்கியம் இருக்கத்தானே செய்யுது.
கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் கம்பரின் எண்ணங்களை நவீன சினிமா பாடல்களில் (தெரிந்தோ தெரியாமலோ) புகுத்திய செய்திகள் அங்காங்கே கிடைக்கிறது.
கடலுக்குக் கூட ஈரமில்லையோ? – என்று நவீன கவிஞர்கள் யோசித்து எழுதியது. ஆனால் கம்பரின் கற்பனையோ “மேகத்திற்கே வேர்க்கிறதே” என்று ஆச்சரியப்பட வைக்கிறது. [கார்க்கருள் தடங் கடல்களும் மழைமுகிழ் காணும் வேர்க்க – பார்த்ததுமே மேகமும் கடலும் வேத்து விறுவிறுத்துப் போச்சாம். இது கம்பன் ஸ்டைலில் சொன்னது].
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை.
இது இன்றைய கவிஞர் காதலன் காதலி பேசுவதாய்… இல்லை இல்லை பாடுவதாய் அமைத்தது. “துயில் இலை ஆதலின் கனவு தோன்றல” – திரிசடை சீதையிடம் சொன்ன ஒரிஜினல் அக்மார்க் சங்கதி.
இந்த நிலவை எதுக்கெல்லாம் தான் கம்பேர் செய்வாங்களொ?? நகம் பாத்தா நிலவு மாதிரி என்னெக்காவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கா?? ஆனா கம்பர் அப்படிப் பாத்திருக்கார். “சிறியவும் பெரியவும் ஆகித் திங்களோ” என்று அச்சரியப்பட்டு அங்கலாய்க்கிறார். ராமரின் நகங்கள் இப்படி இருந்தன என்று சீதையிடம் சொல்கிறார் அனுமன். ஏற்கனவே நொந்து பொயிருக்காக… அந்த நேரத்தில் இப்படி ஒரு பில்டப்பு..??? ஆனா இப்பொதைய சினிமாப் பாடல் வரிகளில் இருப்பது “இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்”. என்ன சுட்ட சரக்கு மாதிரி தெரியுதா?? கம்பர் என்ன காப்பி ரைட்டா வச்சிருந்தார்??
“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.
இப்படியாக திரைப்பாடல்கள் அங்காங்கே இலக்கியம், அதுவும் கம்பரிடம் சுட்ட இலக்கிய சங்கதிகள் இருக்கு என்று நிறைவு செய்கிறேன்.
மீண்டும் வருவேன்.
//“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.//
Super….
உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.