[அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற சித்திரைமலர் “தேனமுது” சிற்றிதழில் வெளி வந்த கட்டுரை]
சமீபத்தில் இணையதளத்தில் படித்த ஒரு செய்தி. இராமாயண காலத்தில் முகநூல் என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக் வசதி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை வலை விரித்திருந்தார் ஒரு நண்பர். அதன் போக்கில் ராமரும் சீதையும் இலக்குவனுடன் கானகம் செல்கின்றனர். அதனை வலைத்தளத்தில் இராமர் அறிவிப்பார். அதனை கைகேயி லைக் செய்திருக்க வேண்டும் என்பதாய் முடிகிறது.
கைகேயி அப்படி எல்லாம் மகிழ்ந்திருப்பாரா? என்ற கேள்வியை புறம் தள்ளி விட்டு, கைகேயி மேல் சீதையின் அபிப்பிராயம் எப்படி? என்ற கேள்விக்கு பதில் தேடலாம். அதன் மூலமாய் மாமியார் மருமகள் உறவு எப்படி இருத்தல் நலம் என்ற தெளிவான சிந்தனையை உங்கள் முன் வைக்க விளைகிறேன்.
ராமர் கானகம் போக வேண்டும் என்பது தான் கைகேயி வாங்கிய வரத்தின் சரத்து. அதில் சீதையும் சேர்ந்து கொண்டது தானாக நடந்தது. ஆக சீதையினை வருத்தப்பட வைக்கும் நோக்கம் நேரடியாக கைகேயிக்கு இல்லை. எனவே சீதைக்கு கைகேயி மேல் நேரிடையான எந்த கோபம் வருவதற்கும் வாய்ப்பில்லை.
இராமன் காட்டுக்குப் போனால் சீதையும் உடன் செல்வார் என்று எப்படி கைகேயியால் யோசிக்காது இருக்க முடிந்தது? மனது சஞ்சலத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் சரிவர யோசிக்க இயலாது என்பதைத்தான் பதிலாகத் தர இயலும். மனக்குழப்பத்தில் அப்போது கைகேயி இருந்திருக்கிறார். குழப்பத்தில் உச்சியில் நின்று உணர்ச்சிப் பெருக்கால் எடுக்கப்பட்ட முடிவு அது.
ஆனால் அதே சமயம், உணர்ச்சிப் பெருக்கில் கூட சரியான முடிவினை எடுக்க முடியும் என்பதையும் இராமயணம் சொல்லத் தவறவில்லை. அப்படி செய்தவர் இராவணன். இராமனை வீழ்த்தி சீதையினைக் கவரலாம் என நினைத்த இராவணன், தன் முடிவை மாற்றிக் கொண்டானாம். இராமன் இல்லாமல் சீதை உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று இராவணன் கருதியதால் இராமனைக் கொல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு வஞ்சகமாய் கவர நினைத்தானாம். இது கம்பன் வழிச்செய்தி.
குழந்தை வளர்ப்பில் நவீனகால உளவியல் நிபுனர்கள் கூற்று என்னவெனில், நாம் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதை விட நம் நடைமுறையிலிருந்து பழகுவது அதிகமாம். ஆனால் நாம் என்ன சொன்னாலும் அதனையே திரும்பச் சொல்லும் கிளி வேறு ரகம். கானகத்தில் வாழ்ந்த போது இராமனும் சீதையும் சேர்ந்து கிளி வளர்த்துள்ளனர். அந்தக் கிளிக்கு தன் தாயார் பெயரான கைகேயி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். மாமியார் மீது எக்காரணம் கொண்டும் காழ்ப்புணர்வு வந்து விடக் கூடாது என்பதில் கணவன்மார்கள் மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறதோ?
இதை கம்பன் தன் வரிகளில் சொல்லும் இடம் தான் இன்னும் கவனிக்க வேண்டிய இடம். அதாவது அனுமன் சீதையினை அடையாளம் கண்டு, திரும்பும் சமயம் மனதில் நிற்கும் சில பசுமையான நினைவுகளை ராமனுக்கு சொல்லும் பொருட்டு சொல்லிய செய்தி தான் இந்தச் சம்பவம். இதோ கம்பரின் வரிகள்:-
என் ஓர் இன் உயிர்மென்ன் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னைதன் பெயர் ஆக என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடந்தோய்.
[“உண்மை வழி பின்பற்றுபவனே(அனுமானே)! ‘நாயகனே (இராமனே)! என் இனிய உயிர் போன்ற மென்மையான கிளிக்கு யார் பெயரை வைப்பது?’ என்று நான் (சீதை) கேட்டேன். உடனே ‘என் தாயாகிய மாசற்ற கேகய மன்னன் மகளாகிய கைகேயியின்பெயரை இடுக’ என்று அன்போடு அக் காலத்தில் சொன்ன உண்மைமான மொழியையும் இராமனிடம் சொல்வயாக”]
இன்னொரு சேதியினையும் அனுமன் வசம் சொல்கிறார் சீதை. துயரத்தின் உச்சத்தில் உயிர் போவதாய் இருந்தாலும் கூட, அந்தத் தருணத்திலும் தன் மாமியார்களை வணங்கி தான் விடை பெற்றேன் என்ற தகவல் சேர்த்துவிட வேண்டுகிறார். இத்தகவலை இராமன் தன் தாயாரிடம் சொல்ல மறந்தாலும் அனுமனே, நீ சொல்வாயாக என்ற வேண்டுகோள் விடுக்கிறார். இதோ கம்பரின் வரிகள்:-
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன் பால் அருள் இனமையால்
மறக்கும் ஆயினும் நீ மறவேல் ஐயா
[“இலங்கையில் சீதை இறக்கிறாள். அப்போது சிறப்பு மிக்க தன் மாமியார் மூவரையும் வணங்கினாள்- என்னும் இச் சொற்களை, என் மாமியாரிடம் கூறுமாறு தருமத்தின் தலைவனான இராமனிடம் சொல் அனுமனே. இராமன் இந்தச் செய்தியினை சொல்ல மறந்து விடுவானாயின், ஐயனே! நீ இதை அவர்களிடம் தெரிவிக்க மறந்திடாதே.”]
இந்த செய்திகள் இரண்டாய் இருந்தாலும் கூட சொல்ல வந்த கருத்து ஒண்றே தான். மாய்யாரிடம் மருமகள் வைத்திருக்கும் மரியாதை, வைத்திருக்க வேண்டிய மரியாதை. இது தான் சீதை மூலம் கம்பர் நம் அனைவருக்கும் சொல்லும் நீதி. மாமியாரை மதிக்கும் மருமகள்களை உருவாக்கும் முயற்சியில் கம்பரோடு வாருங்கள் நாமும் கை சேர்த்து நடப்போம்.