இந்த நாடு உருப்படவே படாது. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது… நாடு எங்கே போகுதுன்னே தெரியலை. ஏன் இவங்க இப்படி இருக்காங்களோ?? இப்படி புலம்பும் பலரை பல இடங்களில், பல நேரங்களில் பாத்திருப்பீங்க. ஆனா அப்படி புலம்புபவர்கள் ஆக்கபூர்வமா ஏதாவது செஞ்சிருக்காங்களா?? இது மட்டும் பதில் தெரியாத கேள்வி.
அப்படி கூட்டத்தில் கூப்பாடு போடுபவர்களை ஏதாவது கருத்து சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். நமக்கேன் ஊர் பொல்லாப்பு என்று சொல்லி விலகிவிடுவர். ஆனா சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்வது மட்டும் தமது பிறப்புரிமை என்று முழங்கிடுவர்.
சிலர் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் கேள்வி மழை கேட்டு துளைத்து விடுவார்கள். அவர்களை Mobile Question Paper என்று சூப்பரா பேர் குடுக்கலாம். கேள்வி தான் பிரதானம். என்ன பதில் வருது என்பதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலையே கிடையாது. அவங்களுக்கு வேண்டியதெல்லாம், நாலு பேரு, அடெ.. எந்த சப்ஜெக்ட்லெயும் கேள்வி கேக்கிறாரே என்று சொல்லிடனும். எல்லா பக்கமும் மூளையை வளர்த்துள்ளார் என்று காது குளிர கேட்டால் தான் அங்கே தூக்கமே வரும்.
நான் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில், இந்த மதிரி ஆட்களை மறக்காமல் கண்டிப்பாய் அழைத்து விடுவேன். கேள்வி கேக்காட்டியும் கூட, கூட டீ பிரேக்கிலாவது அந்த ஸ்பீக்கரை ஒரு பிடி பிடித்து விடுவர். நாம வேறு ஏதாவது போன் பேச கலண்டுக்கலாம்.
சாய்ந்தால் சாய்ற பக்கம் சாயும் செம்மெறி ஆட்டுக் கூட்டம் என்பார்கள் நம் மக்கள் கூட்டத்தை சில மக்கள். நான் தனியாக இல்லை. பாதுகாப்பாய் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது நிறைவான ஒரு சந்தோஷம். லாபமோ நஷ்டமோ, நமக்கு தனியா வராது. பத்து பேத்துக்கு பொதுவா எதுவோ, அது தான் நமக்கு என்பது ஒரு நிம்மதியான வாழ்க்கை.
தேசீயத் தலைவர்களை நம்ம ஊர் ஜாதி சங்கங்கள் Daily Sheet காலண்டரில் போடுவது என்பது தொல்காப்பியர் சொல்ல மறந்த தமிழ் இலக்கண விதி. சன் டீவியின் இந்த நாள் இனிய நாளிலும் சுகிசிவம் ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார் இதை.
மொபைல் போன் பிரபலமாகாத நாள் ஒன்றினல், சென்னையில் ஒரு STD booth ல் போன் செய்ய நுழைந்த போது அப்படிப்பட்ட ஒரு தலைவரின் போட்டோ போட்ட அந்த காலண்டரை பாத்தேன். நான் கேட்டேன், அப்பொ நாங்க வீட்டிலெ இந்த தலைவர் போட்டோவை மாட்ட முடியாத படி செஞ்சிட்டீங்களே என்றேன். அவரிடம் பதில் ஏதும் இல்லை. இவர்கள் அந்த தலைவர்களுக்கு மரியாதை தரலாம். ஒட்டு மொத்த தமிழக மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்த சாதிக்கு மட்டும் என்று வைப்பது நல்லதாப் படலை.
இப்போது அதையே சுகிசிவம் சொன்னதும் மனசுக்கு நிம்மதியாச்சி.. அட இப்படித்தான் பலரும் நினைக்கிறாய்ங்க. அல்லது அப்படி நினைக்கும் கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பதில் எனக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.
ஒரு வேலைக்கான Recruitment Process நடந்து கொண்டிருந்தது. ஒருவர் வந்தார். தன் மகனோட அப்ளிகேஷன் என்ன ஆச்சி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்தது அவர் முகத்தில். கணிணியை தட்டி கேட்டதில் ஒரு சான்றிதழ் தராததால் நிராகரிக்கப்பட்டதாய் சொல்லியது. சோகமாய் மாறியது அவரின் முகம். அடுத்து உடனே வந்த கேள்வி,… “இப்படி எத்தை பேர் Reject ஆயிருக்காங்க?”. மீண்டும் கணிணி இதற்கும் பதில் சொல்லியது 1832 பேர்களை என்று. ஓஹோ… கிட்டத்தட்ட ரெண்டாயிரத்திலெ ஒண்ணுதானே.. பரவாயில்லை.. சோகத்தின் முகம் இப்பொ நிம்மதியாய்ப் போனது.
சமீபத்தில் ஒரு SMS வந்தது. அமெரிக்காவில் கரண்ட் போனால் உடனே Call Center க்கு போன் செய்வார்களாம். ஜப்பானில், ஃபியூஸ் போயிருக்கா? என்று பாப்பாங்களாம். இந்தியாவில் மட்டும் பக்கத்து வீட்டிலெயும் கரண்ட் போயிடுச்சா? என்று பாப்பாங்களாம். இது எப்படி இருக்கு? எப்படியும் கூட்டத்தோட கோவிந்தா போடும் முயற்சி தானே??
ஆனா அந்தமானில் மட்டும் கரெண்ட் கட் ஆனால், ஓடிப்போய் அன்றைய நியூஸ் பேப்பரைத்தான் தேடுவோம். ஏன்னா.. எங்கே, எப்போ கரண்ட் இருக்காது என்ற நிலவரம் பேப்பரில் போட்டிருப்பாங்க… நல்ல விஷயம் தானே.. மொபைல் சார்ஜ் செய்யும் வேலை, வாஷிங்க் மிஷின் வேலை எல்லாம் நேரத்தோட பிளான் செய்துக்கலாம்லெ…
ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்பொ சில வீடுகளில் அக்கா அண்ணன் தம்பி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. முன்பெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் தாத்தா பாட்டி என்றெல்லாம் அறிமுகம் செய்தது போய், இப்பொ வீட்டிற்கு வந்தவரிடம் புதுசா வாங்க்கின மொபைல் ஃபோன் தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.
நிகோபார் தீவுகளில் இதுவரை கூட்டுக் குடும்பமாய் இருந்து வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு சொத்துக்களுக்கும் காம்பவுன்ட் சுவர்கள் எல்லாமும் கூட இல்லாமல் தான் இருந்தனர். படித்து நாகரீகம் ஆனவர்கள் எல்லாம் இப்போது அவரவர் வீடுகளில் காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்.. என்னத்தெச் சொல்ல??
கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள், பெரும்பாலும் பின்பற்றி நடப்பவர்கள். சாதாரணமா சிகரெட் குடிக்கும் ஆட்கள். அதையே தூக்கிப் போட்டு ஸ்டைலா புடிச்சா என் வழி தனி வழி என்று தலைமைக்கே போயிடலாம். அதாவது எதிர் நீச்சல் போடுபவர்களிடம் தான் தலைமைக் குணம் இருக்கும். Leadership Quality என்று அதைத்தான் சொல்கிறோம்.
சுனாமியால் அந்தமான் பாதிப்பு அடைந்த பின்னரும், நான் இங்கே இருப்பதை பாத்து, ஏன் ஏதாவது வேலை மாத்திகிட்டு பரமக்குடி பக்கம் வரலாமில்லெ?என்று கேட்டார்கள். நானும் யோசித்தேன். ஏன் எனக்கு அந்த ரோசனை வரலை? சுனாமி பாதிப்பு எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஏன்னா?? அது எனக்கு மட்டுமா வந்தது? தீவை உலுக்கிய பூகம்பம் வந்த போது, வீடுகளுக்கு போகப் பயந்து ஒட்டு மொத்தமா எல்லாருமே ரோட்டில் தான் படுத்தோம். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.
ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் விபத்து தனி நபர்களை பாதிக்கும். ஊரையே கலக்கும் பேரிடர் ஒன்னும் செய்யாது என்பது அப்போது லேசா தெரிந்தது. ஆனா இந்த பேரிடர் மேலாண்மை (Disaster Management) மேட்டர் நம்ம கண்ணுக்கு இப்பத்தான் தெரிஞ்ச்சாலும் கம்பருக்கு இதைப் பத்தி முன்பே ஐடியா இருந்திருக்கு. என்ன… சாட்சி வேணுமா?? வாங்க மீண்டும் இலங்கை பக்கம் போலாம்.
சம்புமாலி என்ற தளபதி இறந்த சேதியை இராவணனுக்கு சொல்லணும். கம்பர் சொல்லும் விதத்தில் தான் அந்த பேரிடர் மேலாண்மை தெரியும். அந்த சேதி சொல்ல தேவர்கள் தான் முதலில் ஓடி வந்தார்கள். (பால்கனியில் இருந்து படம் பாத்த VIP க்கள் அவர்கள் தானே??).
ஓடி வந்தவர்கள் சொல்ல முடியாமல் (மனதிற்குள் சிரித்தாலும்) மன்னருக்குப் பயந்து விக்கி விக்கி அழுதமாதிரி ஆக்ட் கொடுத்தாகளாம். ராஜாவுக்கு இது தெரியாதா என்ன!! சிரிச்சிட்டே என்ன சேதி என்றாராம்.
ஒரு கொரங்கு செஞ்ச சேட்டையில் சண்டைக்குப் போன நம்மாளுங்க கூட்டத்தொடு கோயிந்தாயிட்டாய்ங்க… அதுலெ நம்ம சம்புமாலியும் ஒருத்தர். எப்படி சேதி சொல்லும் ரகசியம்??
புக்கார் அமரர் பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பார் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான்ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்.
அது சரி.. நீங்க எப்படி தனி ரகமா?? அல்லது அங்கேயும் கூட்டத்தோடு கோயிந்தாவா??
நீங்களும் தனியா என்னோட ப்ளாக் படிக்கிறதா நெனைச்சிராதீங்க… 2550க்கு மேல் பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்.
ஸௌராஷ்ட்ரர்களில் சிலர் (சிலர் தான்) (பலருக்கு ப்ரக்ஞையே கிடையாது) தேவநாகரி லிபியில் தான் ஸௌராஷ்ட்ர மொழியை எழுத வேண்டுமென்று 90 வருடங்களாக் கூறி வருகிறார்கள். கூட்டத்தில் கோவிந்தா போட அவர்களுக்கு ஆசை. சுமார் 22 மொழிகள் தேவநாகரிலிபியில் எழுதப்படுகிறதாம். என்ன நீங்கள் கூட்டத்தில் கோவிந்தா வா ?
இல்லை தனித்தன்மையுடையவரா? ஸௌராஷ்ட்ர லிபியில் 1876 -ம் ஆண்டிலேயே புத்தகம் அச்சாகியுள்ளது !
என் வழி தனிமொழி வழி தான்.
எழுத்து ஒலியின் ஒளிவடிவம்.
ஒவியமாக ஆரம்பித்து இன்ன ஓலிக்கு இது தான் நேரடி ஒளிவடிவம் என வளர்வதே எந்த மொழிக்கும் நல்லது..
சில மொழிகளின் எழுத்துக்கள் நேரடி ஒளிவடிமாக ஆகாமல் ஒவிய வடிவமாகவே இன்று வரை இருக்கின்றன்.
இன்னும் சில மொழிகளில் ஒலி வடிவத்தை Syllable ஆக எழுதுகிறார்கள்.
Syllable கட்டமைக்கவே எழுத்து என்ற அளவில் தான் அம்மொழிகளின் எழுத்து வளர்ந்திருக்கிறது.
இதற்கு பல காரணங்கள் உண்டு.எதில், எதனால் எழுதப்பட்ட்து என ஆரம்பித்து அந்த மொழி பேசும் இனத்தாரின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ப எழுத்து வளர்கிறது.
இப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தார் அவர் தம் மொழியின் ஒளி வடிவத்தை த்னித் தன்மையுடன் வளர்த்தெடுப்பதே நல்லது.
பிற மொழியின் ஒளிவடிவத்தை பின்பற்றினால் அம்மொழியில் தம்மொழியை இழக்கவும் நேரிடலாம்.
ஒளி வடிவம் தனித்தன்மையுடன் வளர்த்தெடுக்காவிட்டால் அம்மொழி வெறும் dialect ஆகக் குறுகவும் நேரிடும்.
dear,
i agree
இது கூட்டத்தோடு கோவிந்தா இல்லை என்று மட்டும் தெளிவாய்த் தெரிகிறது.
நண்பர் பிரபா சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஆழமான கருத்தினை உள்ளடக்கியதாய் இருக்கும். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல…