பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)
ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.
“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.
ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.
ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.
ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.
இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)
இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]
பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??
சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]
இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?
கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?
1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…
அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.
அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.
அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.
இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.
கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]
அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..
ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.
இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?
ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?
மனித வாழ்வில் சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான்.
எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும்-அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்பது இருவரும் வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது,
திருமணம் ஆன புதுசு என் மனைவி நான் வெளியில் செல்ல அழைத்தும் வரவில்லை அவர்கள் வீட்டில் அனைவரும் திட்டீ அடுத்த நாள் வந்தார் ஹோட்டலுக்கு போனபோது ஊரில் உள்ள அனைவரும் எங்களை பார்பதுபோல் ஒரு உணர்வு அது எங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது இன்னும்.அது ஒரு வசந்த கால நினைவு!
எங்களுக்கு திருமணம் ஆகி 14வருடம் ஆகிறது இன்னும் சினிமா கொட்டகை சென்று இருவரும் படம் பார்த்தது கிடையாது மூன்று மணிநெரம் முகம் பார்க்காமல் பேசமுடியாமல் போகுமே!
நாங்கள் பிரிந்து மகிழ்ச்சி ஆகத்தான் இருக்கிறோம் தொலைபேசி பில் மட்டும் எகிருது!
உங்களின் இனிய வாழ்க்கை குறித்து என் துணைவியார் மற்றும் பக்கத்து வீட்டார் அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் தான் ஆனந்தம் என்பதை நிரூபித்துள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – நான் என்றால் அது அவளும் நானும்,அவளென்றாள் அது நானும் அவளும்
வாழ்க வளமுடன் இதே மகிழ்வுடன் பல்லாண்டு.
good post as usual.
you can publish these posts as a book..
Yes.. It is my Plan to Publish a Book. “Kalakalappai Kambaraamaayanam”. Yet to go too many interesting topics. Really Kambar adicted me.