பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

8 thoughts on “பார்த்தாலே போதும்….

  1. jayarajanpr says:

    Interesting post… Keep it up…..

  2. அந்தமான் அருண் says:

    எப்படி இத்தனை நாள் தங்கள் இடுகைகளை மிஸ் பண்ணினேன்……. ஒங்கள நா ரொம்ப மிஸ்ஸ்ஸ்ஸ் … பண்ணிட்டேன் சார்….
    கம்பன் மீதுள்ள தங்கள் காதல் தான் தங்களின் ஒவ்வொரு இடுகையிலும் பளிச்சிடுகிறது. கம்பரை கடைக்கோடி தமிழனும் ரசிக்க வைத்ததிட ஆசை… என்ற உங்கள் ஆசை அபாரம். வாழ்த்துக்கள்.

    சரளம்…. நீங்கள் சாதாரணமாய் பேசுவது போலவே எழுத்து. எப்பிடி சார் இப்பிடி. தங்கள் உரைநடை அழகு…. யதார்த்தம்.

    *அம்மாவை படித்துறையில் பாத்தா பொண்ணை வீட்டில்
    போய் பாக்க வேண்டியதில்லை

    *உஷா please என்று ஒரு யூனிபார்ம் போட்ட குழந்தையை கையில் தினித்தார்கள் …. உண்மைதானே… பிறகு ஏன் நானும் அந்த குழந்தை அதைவிடவும் விழித்தது என்றீர்கள். காலையில் தொலைபேசியபோது தங்களின் அந்தக்குழந்தை ‘இவரு தமிழையும் கணினியையும் இரண்டாந்தாரமாக வைத்து இருக்கிறார்’ என்ற போது நான் நம்பவில்லை. இடுகைகளைப் படித்த பிறகுதான் அவர்கள் சொன்னது உண்மை என்பது உறுதியானது.

    அதற்காக வருந்தவில்லை. மகிழ்சியடைந்தேன். உங்களின் சின்னவீட்டு சல்லாபம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
    -அந்தமான் அருண்-

    • Tamil Nenjan says:

      மிகவும் கூர்ந்து படித்து, அதற்கும் மேலாய் கருத்தும் தெரிவிக்கும் அன்பிற்கு நன்றி..

  3. Viswanathan says:

    Useful information TNK about Andaman plus your quota of literature. Good, keep it up. -Vichu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s