இந்த டயலாக் ரஜினி பேசும் போது, உண்மையில் தியேட்டரே அதிர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனால், உண்மையில் பூமி ஆடிய அந்த கருப்பு ஞாயிறு டிசம்பர் 2004 ஐ நினைத்தால், ரஜினி மாதிரி பூமி “சும்மா அதிருதில்லெ” என்று சொல்லிவிட முடியாது.. அந்தமானைப் புரட்டிப் போட்ட அந்த சுனாமியின் நினைவுகளை அசை போடலாமா?.. லேசா பயத்துடன் தான்.
எப்போதும் 8 மணிக்கும் மேல் தான் எல்லா ஞாயிறுகளும் விடியும் எனக்கு. ஆனால அந்த ஞாயிறு மட்டும் அதிகாலை 6.30க்கு பூமியையே குலுக்கி எழுப்பி விட்டது. என்ன நடக்கிறது? என்பதை மூளை தீர்மானிக்கும் முன் டிவி பிரிட்ஜ் ஆகியவை அங்கங்கே நகர, ஏதோ இறுக்கமான பிளக் இருந்த காரணத்தால் வயரை கயிறாய் கொண்டு அங்கங்கே நின்றன அவை. தனியறையில் படுத்திருந்த இரு குழந்தைகளையும் வாரிச் சுருட்டி, முதலில் வெளியில் போய் நிற்போம் என்று ஓடினோம். சில விநாடிகளில் சிலிண்டர் வெடித்து பக்கத்த்தில் இருந்த ஒரு மரவீடு தரை மட்டம் ஆனதை.. வெறுமனே வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது.
சுனாமி என்ற வார்த்தை மட்டும், அன்பே சிவம் படத்தில் கேட்டதோடு சரி.. சத்தியமா அப்போது அதன் spelling T ல் ஆரம்பிக்கிறது என்று கூடத் தெரியாது. மனிதர்களை அழவைத்த பூமியின் அதிர்வு ஒரு பக்கம் இருக்கட்டும்..
பூமியே அதிரும் படி சிரிக்கிற நிகழ்சிகள் பாத்திருப்பீங்க.. டீவிகளில்… தமிழில் அப்படி யாரும் சிரித்து விட முடியாது நம்ம மதன்பாப்பை விட்டால். ஆனால் காமெடி சர்க்கஸ் என்று ஹிந்தியில் வரும் நிகழ்ச்சியில்… சிரிச்சா காசுங்க்கிற மாதிரி.. எப்பொ பாத்தாலும் கெக்கெ புக்கெ என்று சிரிச்சிகிட்டேயே இருப்பாங்க.. பொம்பளை சிரிச்சா போச்சி என்கிற டயலாக் மட்டும் அங்கே போய் சொல்லிட முடியாது அம்ம்புட்டுத் தான்.
நாம சிரிச்சா பரவாயில்லெ.. நம்மளைப் பாத்து நாலு பேரு சிரிச்சிடக்கூடாது. அதெத்தான் நம்ம வாத்தியாரு எப்பொவோ பாடி வச்சிட்டாரே… சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழாதேன்னு..
எல்லாராலும் இப்படி வாய் விட்டு சிரிச்சிட முடியாது. ஆஃபீசில் பெரிய்ய அதிகாரி மொக்கெ ஜோக்குக்குச் சிரிச்சா… நாம அவரோடு சேந்து அதுக்கும் சிரிக்கலாம்.. ஆனா கவனமா இருக்கனும். அவரு எப்பொ நிப்பாட்டுறாரோ, அதுக்கு ஒரு செகண்ட் அதிகமா நாம சிரிச்சிடப் படாது. நல்ல ஜோக்குக்கு உங்களுக்கு சிரிப்பு வரலாம்.. ஆனா உங்க பாஸ் அதை ரசிக்கலையா?? நீங்க ரசிச்சா… பின்னாடி வரும் விளைவுகள், ரசிக்கும்படியா இருக்காது.
சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் பிறந்தது தான் சங்கீதம் என்கிறார் ஒரு கவிஞர். ஊரே சிரிக்குது என்பார்கள்… ஊரா சிரிக்குது? ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று தமிழாசிரியர் சொன்ன இடவாகுபெயர் இலக்கணம் தான் ஞாபகத்துக்கு வருது. ஆமா இந்த இலக்கணத்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா?? (நல்லா தூக்கம் வரவழைப்பதைத் தவிர… ஆமா.. பாதி தூக்கத்தில் கேட்ட இடவாகு பெயரே.. இம்புட்டு ஞாபகம் இருந்தா…!!!)
எப்போவும் போகும் ராமாயணக் காட்சியை, இன்னெக்கிம் கிளைமாக்ஸில் பாப்போம். அதுக்கு முன்னாடி ஒரு மஹாபாரதக் காட்சி (அ) கதைக்கு போவோம். கரணன் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான். ஆனால் சாவு மட்டும் வரவில்லை. (சிவாஜி நடித்த கர்ணன் படம் ஞாபகம் வந்திருக்குமே!!! ஒரு சின்ன coincidence : இதை எழுதி முடிக்கும் போது, முரசு டிவியில் கர்ணன் படப் பாடல் ஒளிபரப்பானது. 10.50 காலை 8 ஜனவரி 2012).. தர்மம் தலை காக்கும் அல்லவா?? அப்பொ கடவுளே ஐடியா குடுக்கிறார்.. நல்லதுக்கு பாவமில்லெ.. நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா, எதுவுமே தப்பில்லே… (தென் பாண்டி சீமையிலெ… இது மட்டும் கடவுள் போட்ட டியூன் இல்லெ.)
ஒரு ஆளை கூப்பிட்டு, செய்த தர்மத்தை எல்லாம் தானமா கேளு என்றார் கட்வுள். அந்த ஆளுக்கு ஒரு சந்தேகம்.. சாதாரன தர்மமே தலை காக்கும் என்றால், செஞ்ச எல்லா தர்மத்தையே தர்மம் செஞ்சா.. அப்பொ அந்த தர்மம் தலை காக்காதா??
கடவுளுக்கே கலங்குது.. அட.. நாம இப்படி யோசிக்காமெ போயிட்டோமே?? என்ன பன்னலாம்.. பிரச்சனை சொன்ன ஆள் கிட்டேயெ தீர்வு கேப்போம்… (அவர் என்ன அரசியல்வாதியா பிரச்சினைகள் இருக்கட்டும்… ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒதவும்னு சொல்றதுக்கு??)
அந்த நபரே பதில் சொல்றார்.. கடவுளே.. நான் கொஞ்சம் இலக்கணம் தூங்காமெ படிச்சிருக்கேன். “செஞ்ச தர்மம் தா” என்று கேக்காமெ, “செய் தர்மம்” கேக்கிறேன். இதில், இதுவரை செய்த தர்மம், இப்போது செய்கின்ற தர்மம், இனி மேல் செய்யப் பொகும் தர்மம் எல்லாம் வந்திடும். அப்புறம் கர்ணன் செய்யும் எல்லா தர்மத்தோட புன்னிய கிரிடிட் நம்ம அக்கவுண்ட்டுக்கே வரும். தேவைப்பட்டா sms வரவழைக்கவும் முடியும்.. இப்படியாக கரணன் கதை முடித்த இலக்கணம் தான் வினைத்தொகை.
சரி இப்பொ ராமாயணத்துக்கு வரும் நேரம் வந்தாச்சி..
ஊர் சிரிக்கிற மேட்டர் தான் முன்னாடி பாத்தோம். ஆனா ஊர் எப்போவாவது ஓடறதைப் பத்தி கேட்டிருக்கீங்களா?? இல்லையா?? அப்பொ கம்பர் கிட்டெ வந்து பாருங்க.. எல்லாம் தெரியும்
அனுமன்… தன் முழு வேகத்துடன், ராமர் விட்ட பாணம் போல், வேகமா இலங்கை நோக்கி போய்க் கொன்டிடுக்கிறார். அந்த வேகம் எப்படி இருந்ததாம்??
கையில் வஜ்ராயுதம் வச்சிருக்கிற இந்திரனோட தேவலோகமே கவலைப்பட்டதாம்.. கிளம்பிட்டான்யா… கிளம்பிட்டான்யா… என்று கோரஸாவும் அந்தக் காலத்தில் சொல்லி இருக்கலாம்!!. இலங்கை வரைக்கும் தான் பயணம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா.. வரும் வேகம் அப்படித் தெரியலை… அப்படி நெனைச்சி இலங்கைக்கு அப்பால் உள்ள நாடுகள் எல்லாம் வெலகி ஓடியே போயிடிச்சாம்.
வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்க்கியது ‘ஏகுவான் தன் கருட்து என்கொல்?’ என்னும் கற்பால்;
’விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்க்கையின் அளவு அன்று’ என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே.
எனக்கு என்னமோ, சுனாமியில் கானாமல் போன ஊர்களும் ஒரு தீவு மூன்று தீவானது மட்டும் அனாவசியமா ஞாபகத்துக்கு வந்து போகுது. உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது??
தற்செயலா இல்லை விதிவசமா தெரியவில்லை.
சுனாமிக்கு முதல் நாளிரவு தூக்கம் பிடிக்காமல் Discovery channelஐ பார்த்துக் கொண்டிருந்தேன் .நம்ப மாட்டீர்கள் நிகழ்ச்சி என்ன தெரியுமா .சுனாமியும் ஹவாய் தீவில் அமைக்கப்பட்ட tsunami warning systemஉம்.அன்று தான் தெரியும் சுனாமி என்றால் ஜப்பானிய மொழியில்’ துறைமுக அலைகள்’ என பொருள் படுமென்று.அடுத்த நாள் காரைக்குடிக்கு திருச்சியில்இருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது
கடல் ஊருக்குள் வந்த செய்திகளை நண்பர்கள் அறிவித்த போது அது சுனாமி என்று விளக்கமுடிந்தது.
எல்லாவற்றிலும் நீங்க முன்னாடி என்பது சுனாமி பற்றிய
தகவல் அறிந்ததிலும் உறுதி செய்யப் படுகிறது.