ஆண் குரல் மட்டும் உருகி உருகிப் பாடும் இந்தப் பழைய பாட்டு, தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம் பெறும். ஆனால் கூடவே வரும் பெண் குரல், வெறும் ஹம்மிங்க் மட்டுமே செய்து கிரங்க வைக்கும் பாடல் அது.. நாம எல்லாத்தையும் உட்டுட்டு அந்த “போல்”… அதை மட்டும் வச்சிட்டு காயை நகர்த்துவோம்.
“அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா” என்று டயலாக் நாம் சொல்லுவோம்.. ஆனா இதுக்கு, முன்னாடி ஏதாவது ஏடாகூடமா ஒரு சேதி நடந்திருக்கனும்.. அப்பத்தான் இந்த சகஜ டயலாக்கை சகஜமா சொல்ல முடியும். சமீபத்திய நிகழ்வு இது தான். ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கியவர் கட்சி மாறிவிட்டார். அடுத்த கட்சிக்குப் போயிட்டா ஊழல் கரைஞ்சிடுமா?? ஆளை உட்ட கட்சி கேக்குது.. கங்கையில் சின்ன ஓடை வந்து கலந்தா, அதுவும் புனிதம் ஆவது போல் என்று பதில் சொல்லுது வரவுக் கட்சி.. நமக்கெதுக்கு கட்சி விவகாரம்?? அந்த “போல” இங்கேயும் வந்திடுச்சா?? அடுத்த கட்சிக்கு இல்லெ இல்லெ காட்சிக்கு.. சாரி ஒரு கதைக்குப் போவோம்.. (இது தெரிஞ்ச கதை தானே என்பவர்கள் அடுத்த போலவுக்குத் தாவலாம்).
கங்கைக்கரையில் ஒரு முதியவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவியை கங்கை அடித்துக் கொண்டு போகிறது, என்பதை தெளிவாய்த் தெரிவிக்கிறது அந்த அவலக்குரல். காப்பாற்றப் போனவர்களை அவரே தடுக்கிறார். “ஒரு சாபமமிருக்கு. பாவம் செய்யாத நபர் தான் தன் மனைவியை காப்பாற்ற முடியும்” என்கிறார்.
“இல்லாட்டி… பாவம் செய்தவர் தலை தண்ணீரில் கரைந்து விடும்”. கதை கேட்டு கூட்டமும் கரைந்து விடுகிறது. ஒரு மீனவ இளைஞன் ஜம்மென்று குதித்து கிழவியை கரை சேர்த்தான்.. (இந்த இடத்தில் கிழவி என்று சொன்ன காரணம்… நீங்க பாட்டுக்கு படத்து சீன் மாதிரி தண்ணியை உறுஞ்சும் காட்சி வரும்னு ஜொள்ளு விடாமல் இருக்கத் தான்.)
கூட்டம் வியப்போடு கேட்டது. என்னப்பா?? ஒரு பாவமும் செய்யலையா நீ?? பதில் தெம்போடு வந்தது… ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார். (அந்த “போல” அங்கும் ஆஜர்)
இங்கிட்டியும் அங்கிட்டியும் சுத்திப் பாத்தா.. அங்கே வடிவேலானந்தா நிற்கிறார். அவர் பக்கத்திலே யாரோ போலீஸ் மாதிரி தெரியுதே?? பார்த்திபனா இருக்குமோ?? சே..சே.. அவர் பக்கத்தில் இருந்தா வடிவேல் முகத்தில் சிரிப்பு ஏது?? ஒரே அவஸ்தை தானே.. (ஆனா நமக்கு செமெ ஜாலிதான், அந்தக் கூட்டணியால்).. வேற யாரு?? அட நம்ம டைரக்டர் கம் நடிகர் வெட வெட மனோபாலா தான். வ.வே லேசாக தட்டுகிறார் அவர் நெஞ்சை. ரொம்ப பீத்திக்காதெ.. உன்னெயெ தப்பா போலீஸ் வேலைக்கு சேத்தாக போல… (போல வந்ததால் நாம் வந்த வேலை முடிந்தது.. நகர்வோம்)
சொந்தகதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் எப்படி வரும்?? என் வீட்டுக்காரியும் அப்பப்பொ என்னையெ கேப்பா.. உங்களை தப்பா இஞ்ஜினியர் வேலைக்கு சேத்துடாங்க போல. பேசாமா தமிழ் வாத்தியாரா போய் பரமக்குடியிலேயே இருந்திருக்கலாம்…(கம்பராமாயணத்தை விடாமல் இருப்பதை குத்திக் காட்டுறாப்பலெ..)
காட்டுறாப்பலெ… வந்தாப்லெ, போனாப்லெ, சொன்னாப்லெ என்ற வார்தைகள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனா யூஸ் செஞ்சிருக்கீங்களா.. நான் அடிக்கடி யூஸ் செஞ்சிருக்கேன். எப்பொ இதை யூஸ் செய்ய முடியும் தெரியுமா?? உங்களோடு எப்போதோ கூட படித்தவர்.. நண்பர் தான். இப்போது உயர் பதவியில் இருக்காப்லெ. இருக்கிறான் என்று உரிமையுடன் சொல்வதா? அல்லது இருக்கிறார் என்று மரியாதையுடன் சொல்வதா என்ற குழப்பமா?? அந்த “பொலெ” ஐ சேர்த்தா பிரச்சனைக்கு குட் பை. (அது வீட்டுக்காரி பேச்சுக்கும் சொல்லலாம் என்பது சீக்ரட்டான சேதி)
அப்படியே ஊர்க்கதையும் பாப்போமே.. பரமக்குடியில் அந்தக் கால தியேட்டர்களில் படம் பாக்க, பெண்களில் இடுப்பில் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.. தியேட்டர் வரை நடந்து வந்து, டிக்கட் எடுக்கும் நேரத்தில் மட்டும் அம்மா, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா இப்படி யார் இடுப்பாவது எனது சவாரிக்கு தோதாக கிடைக்கும். ஓசியில் படம் பாத்துட்டு, இடைவேளையில் முறுக்கு, குச்சி ஐஸ் சாப்பிட்டு… வாவ்.. அந்த சந்தோஷம் போல இப்பொ வருமா?? இப்பொ தியேட்டர் என்னமோ ஏசி தான்.. ஆனா மனசுலெ ஏன் இத்தனை வெப்பம்??
அந்தக் கால நடிகைகளில் அபிநய சுந்தரி சரோஜா தேவியை தன் மகள் போல்.. மக படம் போட்டிருக்காங்க.. போய் பாக்கணும்.. என்று பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இப்படி எந்த நடிகையையாவது இப்படி கூப்பிட மனசு வருமா? ஆரம்ப கால சுஹாசினி, ரேவதி வேண்டுமானால் சொல்லலாம் போலெ… இப்பொ சமீபத்ததிய நடிகைகளில் சினேகா..?? ஓகே வா???
உங்க மூக்கு சூப்பரா தமண்ணா மூக்கு போல இருக்கு… இப்படிச் சொன்னா என்ன அரத்தம். கொஞ்சம் இலக்கணப் பக்கம் போனால், உவமை என்று சொல்லுவாய்ங்க.. ஐஸ் வைக்க பொய் சொன்னா, அது உலகத்திலெ இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்றது (இல்பொருள் உவமை அணி); சாதாரணமா நடக்கிறதை இதுக்காகவே நடக்குது போலெ என்று சொல்வது என்ன வகை? (தற்குறிப்பேற்று அணி – இது சரி தானா?? தமிழ் அறிஞர்கள், தவறு என்றால் மன்னிக்கவும்).. இந்த நேரத்தில் என் மனசுல பட்டதை சொல்லியே ஆகனும். எனக்கு தமண்ணா ஓகே.. ஆனா அந்த மூக்கு தான் கொஞ்சம் ஒதைக்குதே..? ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு??
சரி இத்தனை போல தேடிய பிறகு எங்கே முடிக்க?? வேறு எங்கே.. கம்பராமாயணம் தான்.. கம்பர் உவமை சொல்றதிலெயும் மஹா கெட்டிக்காரர்.. நம்ம லெவலுக்கு தமண்ணாவை வச்சி இவ்வளவு எழுதினா…, பக்தி சிரத்தையோட ராம காவியம் படைத்தவர்… அவர் கண்ணுக்கு உவமை வந்து கொட்டாதா என்ன?? வந்ததே..
தானா தினசரி நடக்கும் செயல்… உலகத்திலெ இல்லாத ஒண்ணு… ரெண்டையும் காக்டெயிலா கலந்து கலக்கி நம்மை மகிழ்விக்கிறார் கம்பர். இலங்கையில் அனுமன் பாத்த முதல் நாள் மாலை நேரம். சூரியன் மறைகிறது.. அது கம்பன் பார்வையில் வேறு மாதிரி தெரியுது.
எப்பொவுவே கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன் அன்று வடக்கில் உதித்து தெற்கில் மறைஞ்சதாம்.. அது சரி எதுக்கு இப்படி?? ராவணன் தவத்தோட பயன் எல்லாம் சீதையைக் கவர்ந்ததால் போய்விட, இனி அழியப் போகிறான் என்பது சூரியனுக்கு தெரிஞ்சு போச்சாம். ராவணன் 20 கைகள், பத்து தலை வச்சி, ஐந்து புலங்களையும் அடக்கி பெற்ற தவம் வீனாச்சே என்று பன்ச் வேறு வைக்கிறார் கம்பர்..
தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான்.
இனிமே எதைப் பாத்தாலும் அல்லது யாரைப் பாத்தாலும் வேறு ஏதாவது போல யோசிக்க முடியுமான்னு பாருங்க..
//ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார்.//
சுவாரஸ்யமான பதிவு… குறிப்பா இந்த வரிகள் …
இந்தப் ‘போல’ சமாச்சாரங்கள் ‘அனாலாஜி’ என்பார்கள். புலவர்களின் உவமை, உவமானம், உவமேயம். ‘அதைப் போல’ என்பதை பற்றி பள்ளியில் எனது தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, ‘கவிஞர், இந்த இடத்தில் எதை மேய வந்தாரோ அதுவே உவமேயம். அதை மேய்ந்து விட்டு எதை சொன்னாரோ அது உவமானம்’, என்று சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகின்றது. ஆனால் உளவியல் ரீதியில் இந்த ‘போல’ சமாச்சாரங்கள், கற்பனைகள் சில பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடுவதுண்டு. ‘அது போல இது இருக்குமா?’ – சந்தேகம், பயம் மனதில் எழலாம். ‘அதை போல நீ இல்லையே’ – வாழ்வில் பிரச்னை எழுந்து விடும். ‘அதை போல இது முடியலையே?’ – சற்றே அவநம்பிக்கை அல்லது ஏமாற்றம் தலை தூக்கும். போல என்பதை நேர்மறை எண்ணத்துடன் அணுகி, சரியாக பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் தவறினாலும் எதிர்மறை எண்ணம் உருவாகிவிடக் கூடும். ஆனால் எது சிறந்தது என்று மதிப்பிட ‘போல’ அவசியம் தேவை. நல்ல பதிவு… வாழ்த்துகள் !
கூர்ந்து படித்து கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி
தமிழ்லில் எழுதி எழுதி என்னை புளகாங்கிதம் அடைய வைத்து விட்டேர்கள்.
ஒங்கள சிந்தனையின் தொலைவு என்னை அண்ணாந்து பார்க சொல்லுகின்றது. தமிழ் தொண்டு ஆற்றி நீடுழி வாழ்வீராக.
உங்களின் ஆசிக்கு நன்றி… உங்களைப் போன்றவர்களின்
பாராட்டுகள் தான் மேன் மேலும் எழுத தூண்டுகிறது.
மீண்டும் நன்றி.