நண்பர்களோடு சின்ன வயசில் என்னென்னவோ செஞ்ச்சிருப்போம். விளையாடியும் இருப்போம். எனக்கு தொட்டில் பழக்கமாய் இருந்து வந்த பழக்கம் இந்தக் கப்பல் செய்வது.. பலர் மழைக் காலத்தில் தான் கப்பல் செய்து விடுவர். நான் மட்டும் எப்போதும் ஏதாவது ஒரு கப்பல் செய்து கொண்டே இருப்பேன். சாதாக் கப்பல், கத்திக் கப்பல், பறக்கும் கப்பல் இப்படிப் பல…
பெரும்பாலும் இந்த கப்பல் செய்து விளையாடும் பழக்கம் எல்லா ஊர்களிலும் மழைக் காலத்தில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.. ஆனால்.. என இளம் பிராயமோ, மழையே மழைக்கு ஒதுங்கும் பரமக்குடியில் கழிந்தது.. ஆனாலும் இந்தக் கப்பல் விடும் ஆசை மட்டும் விட்டு விடுவதாய் இல்லை. திறந்த வெளி கழிவு நீர் பயணிக்கும் தண்ணீரையும் கூட விட்டு வைக்காமல் பயன் படுத்தி கப்பல் விட்டிருக்கிறேன்.
அந்த drainage தண்ணியை மணல் போட்டு மூடி அணை கட்டி நிப்பாட்டி… அதுக்குக் கீழே இன்னொரு அணை கட்டி அதில் சின்ன ஊதுகுழல் பைப் வைத்து அதன் மூலம் தண்ணீர் போக ஏற்பாடு செய்ததும் ஞாபகம் இருக்கு.
வரும் காலத்தில் ஒரு சிவில் இஞ்சினியராக வர இருப்பதை முன்னரே காலம் அறிவித்த விதம் தான் அத்தகைய விளையாட்டுகளொ?? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.
கப்பல் நிற்கும் துறைமுகங்கள் கட்டும் பணியில் இருந்தாலும் கூட, இந்த பேப்பரில் கப்பல் செய்யும் வேலை மட்டும் மறந்த பாடில்லை. அதுவும் எனக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு கப்பல் அந்த பறக்கும் கப்பல் தான். எந்த வீட்டிலும் குழந்தைகளுக்கு அது ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால் கப்பல் எப்பவுமே தண்ணியிலெ தானே போகும்?? அது என்ன பறக்கும் கப்பல்? இந்தக் கப்பல் பறக்குமா? என்ற கேள்விகளை ஆவலோடு கேட்கும் ஆரவமுள்ள குழந்தைகள்.
தொடர்ந்து ஒரு வீட்டிற்கு வாரந்தோறும் போய், அவர்தம் குழந்தைகளுக்கு இந்த பறக்கும் கப்பல் செய்து கொடுக்கப் போய் என்னோட பேரே, “கப்பல் மாமா” என்பதாக மாறி விட்ட கூத்தும் நடந்தது.
ஒரு காலத்தில் கனவாக இருந்த பல, பல ஆண்டுகள் கழித்து நிஜமாகவே நடந்துள்ளன. ரேடியோ, டீவி, மொபைல் போன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனது கனவுக் கப்பலான பறக்கும் கப்பல் அந்தமானில் தனது சேவையைத் துவக்கிய போது நான் தான் அதிகம் சந்தோஷித்தேன். கடலிலும் மிதந்து செல்லும்.. அப்படியே ஆகாயத்திலும் பறக்ககும் வகையில் வடிவமைக்கப் பட்ட பறக்கும் கப்பல் அது sea plane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த மாதிரி இல்லை என்பதும் இதன் தனிச் சிறப்பு. விமானதளத்தில் கிளம்பி கடலில் இறங்குவதும், கடலிலிருந்து மேலே கிளம்பி விமான தளத்தில் இறங்கியதும் ஒரே திரில்லான அனுபவம் தான்.
இந்த பறக்கும் கப்பல் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு. அதனை ஓட்டும் விமானிகளும் வெளி நாட்டவர்.
சமீபத்தில் ஒரு நாள் துணை விமானி இல்லாமல் அந்த பறக்கும் கப்பல் வந்தது. அந்த துணை விமானி சீட்டில் உட்கார நல்ல படித்த பண்பான ஆளை விமானி தேடினார். லேப்டாஉம் கையுமாய் சென்ற நான் அதில் தேர்வானேன்.. அடெடே.. இன்னுமா இந்த உலகம் லேட்டாப்பும் டையும் போட்ட ஆட்களை நல்லவன்னு நம்புது??
பைலட் சீட்டுக்கு அருகில் பயணம்.. நான் எதிலும் கை வைக்க முடியாத அளவுக்கு சீட் பெல்ட்டுகள்… ஆனாலும் ஏதோ நானே ஓட்டுவது போல ஒரு உணர்வு..
நன்றாய் உற்று நோக்கினால்… நவீன தொழில் நுட்ப உபகரணங்களுக்கு மத்தியில் ஒரு சாமி படம் ஒட்டி இருந்தனர்.. பாத்தா..அட… அனுமான் தான் அது… இந்தியாவின் முதல் sea plane என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர் அனுமன் தானே.. அதனை அந்த பறக்கும் கப்பலில் ஒட்டி வைத்திருப்பது பொருத்தமான ஒன்று தான்.
அனுமன் வந்தால் தானே ராமாயணமே களைகட்டும். அப்பொ லேசா கம்பராமாயணமும் டச் செய்யலாமே..!! அதுவும் அனுமன் பத்தின சேதி தான்.
ஒரு வேலையை செய்யும் முன் இதை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்குவது ஒரு POSITIVE ரகம். இதெல்லாம் எங்கே முடியப் போகுது? இப்படி நினைத்தும் இறங்குவது Negative ரகம். ரெண்டுக்கும் நடுவிலெ ஒரு ரகம் இருக்கு. மயித்தெக் கட்டி மழையை இழுப்போம்.. வந்தா மலை.. இல்லையா மயிரே போச்சி.. இது எந்த ரகம். Neutral அல்லது நடுநிலை ரகம் என்றும் வச்சிக்கலாம்.
ஆனால் கம்பன் ஒரு புது ரகம் காண்பிக்கிறார். அனுமன் கடல் தாண்ட வேண்டிய தருணம். அனுமன் மனசுலெ என்ன ஓடுது என்பது அவர் கூடவே சுத்திகிட்டு இருக்கும் வானர நண்பர்களுக்குத் தெரியுது..
பூ.. இந்தக் கடல் தானா.. இதையா தாண்ட முடியாது?? இப்படி ஓடுதாம் அனுமன் மனசில்… இதுவும் ஒரு வகை complex தான். Superiority complex என்று சொல்லலாமா??
அதெப்படி முடியும். சாதாரன நபராக இருக்கும் ஒருவர் திடீரென ஒரு மந்திரியின் உதவியாளர் ஆகிவிட்டால், அவரோட நடவடிக்கைகள், எண்ணங்கள் எல்லாம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுது?? அப்பொ ராமர் கிட்டெ நட்பு பழகியவர் கொஞ்சம் மனசுக்குள் காம்ப்ளெக்ஸ் வரத்தான் செய்யும்.
ஆனால் கம்பரோ அப்படி வரப்படாது என்கிறார். சந்தானம் எப்போதும் சொல்லும் advice போல் எடுத்துச் சொல்கிறார்கள் அனுமனின் நண்பர்கள். உன்னோட தோள்கள் என்னவோ மலை மாதிரி இருக்கு. வெற்றி மாலையும் இப்பொவே போட்டுட்டே.. ஆனா மனசுலெ மட்டும் குள்ளமுனி அகத்தியரே குடிச்ச கடல் தானேன்னு நினைக்கிறே அதெ மட்டும் மாத்திக்கோயேன்.. என்றனர் அந்தக் கால சந்தானங்கள்.
குறுமுனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர
சிறிது இது என்று இகழற்பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.
அதுசரி.. இப்படி கம்பராமாயணம் பத்தி எழுதுறேனே.. என்ன நெனைச்சி எழுதுறேன்.. படிக்கமாட்டாங்கன்னு இல்லை… படிச்சா நல்லா இருக்குமே.. இந்த நெனைப்பு தான்.
வணக்கம்.
சிறு வயது கப்பலில் இருந்து ஆரம்பித்து, கடல் பயணம் பற்றி சொல்லி, உங்களுக்கு பிடித்தமான கம்பராமயணத்தில் கொண்டு வந்து நிறுத்தி…
அருமையான சிந்தனை ஓட்டம்.
பதிவுக்கு நன்றி.
அந்தமானைப் பற்றி நிறைய அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..
எனக்கு சிறு வயது முதலே அந்தமானை சுற்றி பார்க்க வேண்டும் என்ற அவா நிறைய..
நன்றி. முடிந்தவரை அந்தமான் தொடர்பான செய்திகளும் கூடவே சொந்தக்கதைகளும் சேர்த்தே தருகிறேன். ரசித்து பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி. வாங்களேன் ஒரு எட்டு அந்தமானுக்கு.
அன்பு அந்தமான் தமிழ் நெஞ்சன் அவர்களுக்கு,
அந்தமான் அருணின் அன்பு மடல்.
நீண்ட நாட்களாக தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். முடியவில்லை.
இன்று தங்கள் இடுகையான பறக்கும் கப்பலைப் பார்த்தேன்.
இன்று காலை ‘கடல் விமானம்’ என்ற தலைப்பில் தேடினேன். அப்போதுதான் நீங்கள் சிக்கினீர்கள். நானும் என் மனைவியும் கடந்த பிப்ரவரி மாதம் கடல் விமானத்தில் திகிலிப்பூர் சென்று வந்தோம். பலவிதமான செய்திகள் கிடைத்தன. உடனே ஒரு பயண நூலாக அதனை ஏன் எழுதக் கூடாது என்று எண்ணினேன். அதற்காக கடல் விமானம் பற்றிய செய்திகளை வலைப்பதிவில் ‘கடல் விமானம்’ என்ற தலைப்பில் தேடினேன். முதல் முதலாக தங்களின் பறக்கும் கப்பல்(அ)கடல் விமானம் என்ற தலைப்பு இருந்தது. படித்தேன். மிகவும் சிறப்பாக எழுதி இருந்தீர்கள். அத்துடன் நேற்று கூட ஒரு பதிவு ‘பார்த்தாலே போதும்’ செய்திருந்தீர்கள். நன்றாக இருந்தது. உடனே தங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். நன்றி. இப்போது தாங்கள் போர்ட் பிளேயரிலா.
சந்திக்க விரும்புகிறேன்.
இல்லையெனில்
மன்னிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
அருண்
உங்களின் மின் மடலுக்கு நன்றி. கடல் விமானத்தில் பறப்பது உண்மையில் மறக்க முடியாத நிகழ்வு தான். அந்தமானின் அனைத்து தீவுகளையும் சுற்றிய உங்களால் தான் சுவையான பயணக் கட்டுரை தர இயலும். தொடரட்டும் உங்கள் பணி.