இது ஒரு குதூகலமான பாட்டு.. குளிச்சா அது குத்தாலத்திலெ குளிச்சாத்தான்.. அப்படியே கும்பிட சிவன் கோவிலும் இருக்கு என்ற தத்துவமும் சொல்லும் அருமையான பாட்டு…
ஆனா சமீப காலமாய் கேள்விப்பட்ட வரையில் குடிப்பது குளிப்பது, மறுபடியும் குடிக்க.. குளிக்க.. மீண்டும் மீண்டும் அப்படியே தொடர்வதாய் தகவல்.. மீண்டும் மீண்டும் முயன்று மீளா இடத்திற்கு சென்ற ஆட்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.(என் கண்கள் அந்த குற்றாலத்தை இன்னும் தரிசிக்கவில்லை).
“எல்லாம் அவன் செயல்” என்று இருப்பது ஒரு ரகம். “அது அவன் செய்யலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு செய்தது” இது இன்னொரு ரகம். அதை அப்படியே விட்டு விட முடியாது..
ஏன் அப்படி ஒரு உந்துதல் வருது? இந்தக் கால சூழலில் சாதாரணமா வண்டி ஓட்டுவதே சர்க்கஸ் வித்தை மாதிரி தான் இருக்கு. ஒன்றே நாலைந்தாகத் தெரியும் (அப்படியா தெரியுது??) குடித்த நேரத்தில், வம்படியாக குடிமக்கள் ஓட்டுவது ஏன்?? இது யோசிக்க வேண்டிய சேதி..
அந்தமானைச் சுற்றிப் பாக்க வந்த குடிமகன் ஒருவர், தனியே ஒரு தீவு சென்று விழுந்து புரண்டு வந்தார்… திரும்பும் போது காரை தானே ஓட்டி, தான் தெளிவாக இருப்பதை நிரூபித்தார்..(நாம் குடும்பத்தோடு உயிரைக் கையில் பிடித்து காரில் நடுங்கியபடி நல்லபடியா வீடு வந்து சேர்ந்தோம்).
ஒரு அனுபவசாலியை அணுகி விசாரித்த போது சில தகவல் சொன்னார். குடிமகன்களில் மூவகை இருக்காம்.
1. சாதாரன குடி மகன் (மகளும் அடக்கம்)
2. மிஞ்சிய குடி மகன்
3. மிதமிஞ்ச்சிய குடி மகன்.
இதில் முதல் ரகம் பார்ட்டி முடியும் போதே தெளிவாகி விடும் நபர். இரண்டாம் நபர் கொஞ்சம் மிதப்பில் இருப்பவர். மூன்றாமவர் சுத்த மோசம்… என்ன செய்கிறார்? என்பது அவருக்கே தெரியாத நிலை. ஒவ்வொரு பார்ட்டியிலும் இப்பேர்ப்பட்ட மூன்று குழுவின் கலவைகளாக, குடிமக்கள் இருப்பர்..
ஆனால் எப்போது ஒருவர் அடுத்த நிலைக்கு மாறுவார் என்பது, அவரவர் உடல் நிலை, மனநிலை, பழக்கம் ஆகியவை பொறுத்து மாறும். ஒவ்வொரு பார்ட்டியிலும் யாராவது ஒருவர் மூன்றால் நிலைக்கு போவார் அல்லது தள்ளப்படுவார்.. அது தான் அந்த பார்ட்டியின் ஹைலைட்ஸ்… அது அடுத்தடுத்த பார்ட்டிகளிலும் பெரிதாய்ப் பேசப் படும்..
முதல் நிலையில் இருப்பவர் வண்டி ஓட்டலாம். சிக்கல் ஏதும் இல்லை.. தான் குடித்துவிட்டு ஓட்டுகிறோம் என்ற குற்ற உணர்வு இருப்பதால் அதீத ஜாக்கிரதையாகவும் அவர் ஓட்டுவார். இரண்டாம் நிலை & மூன்றாம் கேட்டகிரி ஆட்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தால் 98 முறை தப்பிக்கலாம். 2 முறை தவறினாலும் வாழ்வு கெட்டுப் போகும்…
அப்பொ என்னதான் செய்வது?… குடிக்கப் போகுமுன்னரே திரும்பி வர ஏற்பாடு செய்துவிட்டு செல்ல வேண்டும்.. திரும்பியே வராமல் இருப்பதை விட, இது பெட்டர் இல்லையா?? திடீர் பார்ட்டி ஆயிடுச்சா?? முதல் ஸ்டேஜில் நின்று விடுங்கள்…எதுக்கு ரிஸ்க்?? ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று பீலா விட்டா… ப்யூஸ் ஆயிடும் லைப்.
குடிச்சவனுக்கும் செத்தவனுக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை என்கிறார் அய்யன் வள்ளுவர்.. அந்த கால சரக்கே அப்படியா?? குடிச்சிட்டு பேசாமெ கம்முன்னு தூங்குப்பா, என்று ஒரு உள்குத்து இருக்குமோ??
இந்த மாதிரி சந்தேகம் வந்தா நமக்கு கைவசம் இருக்கவே இருக்கு கம்பராமாயணம்.. அதிலெ சரக்கு பத்தி என்ன சொல்லியிருக்கு பாக்கலாமா?? அந்தக் காலத்திலேயும் நாட்டுச் சரக்கும் ஒசத்தியான சரக்கும் இருந்திருக்கு என்று தெரியுது.. (ராமாயணம் எது எதுக்கோ உதாரணம் சொல்ல..என் கண்ணுலெ இதெல்லாம் ஏன் படுது??)
அந்த பார்ட்டி நடந்த எடத்துக்கே போய் பாப்போம்…அப்பொத் தான் சிச்சுவேஷன் சரியா புரியும். இலங்கை நுழைந்த அனுமன் நள்ளிரவில் ஒரு BirdEyeView பார்க்கிறார். அப்போது அவர் கண்ணில் வரும் காட்சி தான் இது.
மது என்னும் நீர் துறையில் மயங்கி தன்னை மறந்தவர்கள் இருந்தார்களாம்.. ஆக கொட்டிக் கிடக்கும் மது வகைகள்… இது வெளியில் மக்கள் தூங்குவது. வீட்டில் எப்படி தூங்கினார்களாம்.. எட்டிப் பாக்க முடிவு செஞ்சாச்சி அப்புறம் என்ன யோசனை?? அதையும் தான் பாத்திடுவோமே!!
படுக்கை அறையில் Background Music ஓடுதாம். நல்ல பூவில் இருக்கும் தேனைக் குடிச்ச வண்டுகள் தான் அந்த பேக்கிரவுண்டு மியூசிக் போடுதாம். சாம்பிராணி மாதிரி அகில் புகை போடுதாம்..சிலர் தூங்கி இருந்தனர்.. எப்படி இருந்தார்களாம்??
தண்ணியடிச்சி நடக்க முடியாதபடி கிடந்தாகளாம்.. அடிச்ச சரக்கு எது?? கம்பர்கிட்டெ நைசா கேட்டேன்.. காதோரம் சொன்ன பதில் என்ன தெரியுமா?? காமம் என்ற கள் குடித்து முடித்து, நடக்க முடியாம கெடந்தாகலாம்..
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்
பூமன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார்.
அது சரி..உங்க பார்ட்டி அனுபவம் எப்படி???
பஞ்ச மஹா பாதகச் செயல்களில் ஒன்று ‘போதை தரும் நீரை’க் குடிப்பது. ஆம் அதில் ‘பீரு’ம் அடங்கும்.
இவற்றை எல்லாம் அலசி ஆராயக்கூடாது. திருக்குறள்ள இருக்குல்ல? அப்பொ மறுபடியும் அதைப் பற்றி ‘விலாவாரி’ யாக எதற்கு எழுதணும்?
கம்பராமாயனத்தில் மது & கள் பற்றி வந்தது..சரி..
கொஞ்சம் கலாய்க்கலாம் என்று தான்…
கம்பரை எல்லா இடத்திலும் கொண்டு செல்வது தான்
என் முதல் நோக்கம்.. அது நிறைவேறினால் நான்
மகிழ்வேன்..