சமீபத்தில் என்னைப் பாத்த ஒரு கப்பல் அதிகாரி, உங்கள் முகம் பாத்தா மாத்ருபூதம் சாயல் இருக்கே என்றார்… சரி மாத்ருபூதம் சாயலில் ஒரு போஸ்ட் இதோ…
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்பார்கள்.
இதில் ஆலங்குச்சி & வேலங்குச்சியால் பல் துலக்குவது பல்லுக்கு உறுதி தரும் என்பது எல்லார்க்கும்
தெரியும். அது என்ன அடுத்த நாலும் ரெண்டும்? அது வேறு
ஒன்னுமில்லை மாமு… நம்ம திருக்குறளும் நாலடியாரும்
தான் அந்த ரகசிய சமாச்சாரங்கள்.
நான் சொல்லுக்குறுதி என்பதை குடும்ப உறுதிக்கு
பாக்குறேன். குறளும் நாலடியும் நல்ல குடும்பத்துக்கு என்ன டிப்ஸ் தருதுன்னு பாக்கலாமா??
அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தகவல்: அந்தமானில் யுவ சக்தி என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் குடும்ப சிக்கல்களுக்கு என்ன காரணம்னு பாத்ததில் பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் சுமுக உறவு (உடலுறவு உட்பட) இல்லாதது தான் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு முடிவுகள் அந்தமான் தாண்டி தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிக்கும் செல்லுபடி
ஆகும் என்பது என் நம்பிக்கை.
சொல்லிக் கொடுக்காத இந்த செக்ஸ் பிரச்சினைகளினால்
வீடுகளில் எவ்வளவு சிக்கல்கள்?
சமீபத்தில் சன் நியூஸ் டாக்டர் எக்ஸ் நிகழ்சியில் ஒரு சம்பவம். நான்கு வருடமாய் கணவன் மனைவிக்குள் உறவு என்பதே இல்லையாம். குழந்தை இல்லையே என்று கேள்வி வேறு. ஐடி வேலை செய்யும் தம்பதிகளாம்… இது
கூடவா தெரியாது? இதுக்கெல்லாமா இன்டக்க்ஷன்
டிரைனிங் தருவாங்க??
சரி நாலும் ரெண்டும் இந்த பிரச்சினைக்கு என்ன ஆலோசனை சொல்லுது? முதலில் குறள் இதுக்கு என்ன சொல்லுதுன்னு பாக்கலாமா?
குடும்பம் சிக்கல் இல்லாம இருக்கனும்னா உறவு நல்ல விதமா இருக்கனும். இரவில் நடக்கும் உறவில் ஊடல் அதிகம் இருக்கட்டும். பின்னர் கூடல் வரட்டும் என்று கடைசி குறளாக 1330வது பாட்டில் சொல்கிறார்
ஜொள்ளுவர் சாரி வள்ளுவர். ஊடல் தான் இன்பம். ஊடலுக்குப் பிறகு வரும் கூடல் என்பது அந்த
ஊடலுக்கே இன்பமாம். அடடா… என்னமா எழுதியிர்க்காரு ?
சட்டியை வழிச்சு எடுத்த மாவில் ஊத்தும் தோசை அதிக
டேஸ்டா இருக்குமே.. அந்த மாதிரி..
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்.
இது தெரியாம எத்தனை பேர் எடுத்தேன் கவித்தேன்னு
இருந்து வாழ்க்கையினை தொலைத்திருக்கிறார்கள்.
(நல்லதா நாலு விஷயம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ??)
சரி.. இது இப்படி இருக்க…. நாலடியார் ரெண்டடி மேலே
போறார்.
அதற்கு முன்பு பாலகுமாரன் எழுதியதில் ஒரு சின்ன பிளாஷ்பேக் அடிச்சிட்டு அப்புறமா நாலடியாருக்கு
வரலாம்.
பாலகுமாரன் நாவலில் வரும் காட்சி. கணவன் அலுவலகம் போக மனைவி கையை ஆட்டி விட்டு டாடா பை பை சொல்லி விசுக்கென்று வீட்டிற்குப் போவாள். கணவன்
திரும்பி வந்து கண்டிப்பான்.
அம்மனீ உனக்கு அவ்வளவு வேலை இருந்தால் வீட்டில் இருந்தே வழி அனுப்பு. கதவு வரை வந்துவிட்டால் என் தலை மறையும் வரை இருந்து விட்டு வழி அனுப்பி உள்ளே போ. என்பான்.
ஏன் தெரியுமா? விசுக்கென்று உள்ளே போனால் ஏதோ ஒழிந்தான் பிங்களன் மாதிரி போய்த் தொலைந்தான்
என்பது போல் தெரியுமாம்.
சாதாரன ஒரு டாடா பை பைக்கே இப்படி என்றால் இரு மனமும் உடலும் சேரும் உடலுறவு எப்படி இருக்கனும்? ஊடல் சரி..அப்புறம் கூடலும் சரி..முடிந்து விட்டு
அக்கடான்னு கிடாசிட்டு போயிடனுமா?? இங்கே தான்
நாலடியாரைக் கொண்டு வர்ரேன்.
முதலில் கூடி பின்பு ஊடுவது காம இன்பத்திற்கு சுவை
சேர்க்கும் வித்தை என்பதாய் பாட்டு வருகிறது.
முயங்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றான்காமம் –
வயங்கோதம் நில்லாத் திரையலைக்கும்
நீள்கழித் தண்சேர்ப்ப!! புல்லாப் புலப்பதோர் ஆறு
{ திகழ்கின்ற கடலானது நிலையாய் இல்லாது அலைகளால் மோதப்படுகின்ற குளிர்ந்த கரையையுடைய மன்னா!! தலைவனும் தலைவியும் கூடா விட்டால்
பிரிவுத் துன்பத்தால் உடலில் பசலை உண்டாகும். ஊடல் கொண்டு வருந்தாவிட்டாலோ காமம் சுவையுடையது ஆகாது. எனவே முதலில் கூடிப் பின்பு ஊடுவது
காம இன்பத்துக்குச் சுவை உண்டாவதற்கு ஒரு வழியாகும்}
ஊடல் பிறகு கூடல் – இது வள்ளுவர் பாஃர்முலா
கூடலுக்குப் பிறகும் ஊடல் – இது நாலடியார் தத்துவம்.
ரெண்டும் சேர்ந்தால்…???
முதலில் ஊடல்… பிறகு கூடல் … மறுபடியும் ஊடல்…
இதுதான் நாலும் வேலும் வாழ்க்கைக்கு உறுதி என்கிறேன்
நான்..
ரொம்ப காலம் கடந்த ஞானமோ???