அந்தாக்ஷ்ரி விளையாடுவோமா? என்றால் கும்பலாய் கூடும் இடங்களில் அந்த இடமே களை கட்டும். அந்தமான் மாதிரி பல மொழிகள் பேசும் ஆட்கள் இருக்கும் இடங்களில் எல்லா மொழிப் பாடல்களும் பாடலாம்..அதிலும் kaa Gha எல்லாவற்றிற்கும் க வில் ஆரம்பிக்கும் தமிழ் பாடல் பாட சிறப்பு அனுமதி கிடைக்கும்.
இது அந்தாதி என்பதின் நாகரீக வடிவம் தான். அபிராமி அந்தாதி கேள்விப் பட்டிருப்பீர்களே… பாட்டு முடியும் வார்த்தையில் அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டும். அது தான் நியதி.
சினிமா பாட்டில் அந்தாதி இருக்கா?? ஏன் இல்லை… மூன்று முடிச்சு படத்தில் ஆடி வெள்ளி தேடி உன்னை என்ற பாட்டு அந்த அந்தாதி வகை தான். இப்பொ இன்னொரு தடவை உற்றுக் கேளுங்கள் அதன் சுவை இன்னும் கூடும். பிரபலமான பாடல்களின் வரிகளை படங்களுக்கு பெயராக வைப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்.
லெட்சுமிக் கல்யாணம் படத்தில் செம ஹிட்டான பாட்டு, ராமன் எத்தனை ராமனடி… ராமன் எத்தனை ராமனடி படம் வந்தது. அதில் அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு…ஹிட்டாச்சி. அதே பெயரில் படமும் வந்தது. அதில் தேன் சிந்துதே வானம் பாட்டு இன்றும் உருக்கும்.. அதே பெயரில் படம் வந்தது… உன்னிடம் மயங்குகிறேன் என்று ஒரு பாட்டு.. அந்தப் பெயரில் படம் கண்டிப்பா வந்திருக்கலாம்…
ஆனா சுடச் சுட அப்பொவே ஹிட் பாட்டை வச்சி தான் புது படம் வரும். எப்பொவொ வந்த எங்கேயும் எப்போது சங்கீதம் சந்தோஷம் பாட்டை வச்சி இப்பொ ஒரு படம் வந்திருக்கே..அது கொஞ்சம் யோசிக்க வைக்குது.
பரமக்குடி வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து Facebook ல் ஒரு குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். (கமல்ஹாசனையும் சேருங்கப்பா அந்த குருப்பில்).. தீபவளிக்கு எந்தெந்த தியேட்டரில் என்னென்ன படம் (வாழ்க்கைக்கு தேவையான ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி…!!!) என்ற என் கேள்விக்கு ரவி தியேட்டரில் எங்கேயும் எப்போதும் ரிலீஸ் என்ற பதில் வந்தது.
ஓர் ஊர் பெரிய்ய ஊரா சின்ன ஊரா என்ற சர்ச்சை காலேஜ் ஹாஸ்டலில் அடிக்கடி வரும். அப்போது Yard stick புதுப்படம் ரிலீஸ் ஆவது என்பதும் ஒன்று.. பரமக்குடிக்கு அப்பப்பொ அந்தப் பெருமை வரும். ஆனா சொதப்பலான படம் (அவள் அப்படித்தான்) மாதிரி ரிலீஸ் ஆகி பரம்க்குடி & பரமக்குடியான் (கமல்தான்) பெயரையும் கெடுக்கும்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சரி.. சந்தோஷம் எப்படி?? எப்போதும் எப்படி சந்தோஷமாய் இருப்பது??
சின்னத் தீவில் அரசு அதிகாரியாய் இருப்பதால் அப்பப்பொ கூட்டத்தில் பேசும் வாய்ப்பும் கிடைத்து விடும். ஒரு முறை லிட்டில் அந்தமான் தீவு மாணவர்கள் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பரிசு வாங்கி கலக்கிவிட்டனர். (கோ கோ வில் மட்டும் கோட்டை விட்டு விட்டனர்). பள்ளியின் தலைமை ஆசிரியர் செம குஷி ஆகி விட்டார்.
பின்னெ சும்மாவா… சுனாமியில் சுருண்ட அந்த தீவு மீண்டும் மீண்டது என்பதற்கு ஒரு சாட்சி அல்லவா அந்த வெற்றி.. தாரை தம்பட்டைகளுடன் கப்பலடி முதல் பள்ளிவரை உற்சாக வரவேற்பு.. மாணவர்களுக்கு பாராட்டு மழை தரவும் ஏற்பாடு. எனக்கு முன் பேசிய அனைவரும் கோக்கோவில் தோல்வி பற்றி தான் கவலைப்பட்டார்கள். மைக் என் கைக்கு வந்தது. எவ்வளவு வெற்றிகள் பெற்றிருக்கிறோம் அதைப் பாருங்கள்.. கோகோவை விடுங்கள்..பிறரை தள்ளி விட்டு அதுவும் முதுகில் பின்னால் நின்று விளையாடிம் விளையாட்டு..அதில் தோற்றதுக்கு சந்தோஷப்படுங்கள் என்றேன்.. என் பேச்சு அங்கு நன்கு எடுபட்டது.
அப்பொ… இப்பொ கம்ப ராமாயணம் பக்கம் போகலாமா… அன்றும் ராமன் சந்தோஷமா காட்டுக்கு போனதை அங்கும் சொன்னேன். எங்கேயும் எப்போதும் கம்ப சங்கீதத்தை இசைப்பது எனக்கு சந்தோஷம்.. உங்களுக்கு எப்படியோ..??
கம்பர் கொஞ்சம் ஜனரஞ்சகமான ஆளு தான். அப்பப்பொ பாலசந்தர் வியாட்நாம் வீடு சுந்தரம் மாதிரி சீரியஸான மெட்டர் எழுதினாலும் அப்பொப்பொ பாக்யராஜ் பாணியிலு எழுதுவார்..
எங்கேயும் எப்போதும் கனிந்தே இருக்கும் இனிக்கும் பழம் பத்தி கம்பர் எழுதி இருக்கார். முண்டகத்துறை என்ற ஒரு சோலை..எப்படி இருக்கும் தெரியுமா?? நல்லவர்கிட்டெ இருக்கும் செல்வம் மாதிரி.. எங்கேயும் உலகத்தார் அதை அனுபவிக்கலாம். எப்போதும் நிலைத்தும் நிற்குமாம். இது பாலசந்தர் ஸ்டைல்.
பாக்யராஜ் ஸ்டைலிலும் கலக்குறார் நம்ம கம்பர்… நல்ல ஒழுக்கத்தோட இருக்கும் பிகர்களின் (அதுவும் எளசான) உதடுகள் மாதிரி அங்கே உள்ள கனிகள் எங்கேயும் எப்போதும் கனிந்தெ இருக்குமாம்..
ஞாலம் நுங்குறு நல்லறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம் பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீங் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.
நீதி: எங்கேயும் எப்போதும் சந்தோஷமா இருங்க.. கூடவே இனி எங்கேயும் எப்போதும் உங்களுக்கு கம்பரே சந்தோஷமா ஞாபகம் வரட்டும்.
கம்பர் என்னவோ எழுதி வச்சிட்டு போய்ட்டாரு. ஆனா,
அவர் எழுதியதை எல்லாத்தையுமே எப்படி எங்கேயும் எப்போதும் சந்தோஷமாக ரசிச்சி படிக்கிறதா அல்லது படிச்சி ரசிக்கிறதா என்ற கலையைத் தான் நம் கை வண்ணத்தில் கொண்டு வரவேண்டும்.
ஆமா… படிக்கிற மாதரி ..ரசிச்சி படிக்கிற மாதிரி இருந்தா எனக்கு எப்போதும் சந்தோஷம் தான்.