வாழைப்பழம் என்றதுமே அந்த ஒரு ரூபாய்க்கு பழம் வாங்கி வரும் அமர்க்களமான செந்தில் கவுண்டமனி காமெடி தான் ஞாபகம் வரும். அதே பாணியில் எத்தனை காமெடிகள் வந்தாலும் அந்த காமெடி சுவையே தனி தான்.
ஒத்தெ வாழைப்பழம் தனியா இருக்க முடியாமெ தூக்கிலெ தொங்குற மாதிரி படமும் ஜோக்கும் முகநூலில் அடிக்கடி இப்பொ தலை காட்டுது.
அந்தமானில் விளையும் குறைந்த அளவிலான பழங்களில், அதிகமாய் விளைவது இந்த வாழை தான். விதம் விதமாய் பெயர்களில் கட்டா சம்பா, மிட்டா சம்பா, பச்சை, சிவப்பு என்று கலர்களிலும் கிடைக்கிறது.
ஆனால் வாழைப்பழத்தில் ஊசி மட்டும் சில பழங்களில் குத்த முடியாது. விதையும் இருக்கும். விதையுள்ள வாழைப்பழங்கள் அந்தமான் தவிர எங்கும் கிடைக்கும் தகவல் எனக்குத் தெரியலை.
அது என்ன வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் கதை.
[அது வேற என்ன…?? அங்கே சுத்தி இங்கே சுத்தி நைஸா கம்ப ராமாயணம் இழுக்கும் கலையின் இன்னொரு பேரு தான் அது]
ஒரு விஷயத்தை ஒரு பார்ட்டி அழகாச் சொல்லி அடுத்த பார்ட்டியை சம்பதிக்க வைக்கும் கலையும் தான் அது.
எனக்குத் தெரிந்து ஒருவர் ஒரு வாரம் முன்பு கட்டிப்புரண்டு அடிபிடி சண்டையில் இருப்பார் ஒருவருடன். அதே நபரோடு தோழில் கை போட்டு வருவார் ஒரு வாரத்தில். அவர் வாழைப்பழ ஊசியில் டாக்டரேட் வாங்கியிருப்பாரோ??!!!
ஆனாலும் அப்படி யாராவது பேசினாலும் கேக்காதீங்கன்னு சொல்றதுக்கும் பழமொழி இருக்கே.. கேக்கிறவன்………பயலா இருந்தா… கேப்பையில நெய் வடியுது என்பானாம்.
அது சரி… எதுக்கு சுத்தி வளைப்பானேன்? நேரடியா கேக்கலமே?? இந்த வாழைப் பழத்தில் ஊசி பத்தி கம்பராமயணத்தில் வருதா???
வருதே…
ஆனா வழக்கம் போல கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஒரு அசம்பாவிதமான இடத்தில் அதைச் சொல்றார் கம்பர்.
சாதாரண வாழைப்பழத்தில் ஊசி எப்படி ஸ்மூத்தா போகும்?? ஆனா சுவையான பழத்தில்??? அதாவது கனிந்த பழம். இப்படி சொன்ன அந்த மிருதுவான பழம் எதுன்னு பாத்தா… அங்கே தான் கம்பர் நிக்கிறார்.
ஒரு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் பார்ட்டி. அவரோட மார்பு அவ்வளவு ஸ்டார்ங்கா இருக்காம்… எவ்வளவு?? பூமி காற்று நெருப்பு நீர் அதோட குணம் சேர்ந்ததாம்.
அதோட உட்டாரா மனுஷன்.. பூமியை ஆதரவா புடிச்ச ஆளு காற்று; காத்தும் காத்தோட ஆளும் சேந்து நெருப்பை உண்டாக்கினாகளாம்…
ம்…அப்புறம்??? அந்த நெருப்பு நீரை உருவாக்குமாம்??? தலையை சுத்துதா???
சரி… பழம் இப்படின்னா??? ஊசி…???
வாலியின் மார்பில் பாய்ஞ்ச அம்பைத்தான் இப்படி சொல்றார்..
அடி ஆத்தி… அப்படியே பாட்டு பாக்கலாமா??
கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது எனச் செப்ப
நீரும் நீர் தரும் நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப்பகழி
எப்புடி நாம கம்பரையும் உள்ளே கொண்டு வரும் விதம்.
ஆமா… இதுலெ ஊசி எது ?? பழம் எது??