காட்சி 1: இடம் – அரக்கோணம்.
ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு ஊர் போகும் போது அரக்கோணம் விசிட் கண்டிப்பாக இருக்கும். சகலையின் வீடு இருப்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.
அவர் வீட்டை விட்டு கிளம்பி, வீடு திரும்பும் போது அவர் கையில் தவறாது இடம் பெறும் ஒரு பொருள் இந்த தர்பூசனிப் பழம்.
குழந்தைகளுக்கும் (இந்தப் பெரிய குழந்தைக்குமே) அந்த தர்பூசனி ரொம்பப் பிடிக்கும்.
நாம் எத்தனை நாள் அரக்கோணம் இருந்தோம் என்பதை அந்த பழம் கணக்கு வைத்து கணக்கிடலாம்.
காட்சி 2: இடம் – அந்தமான்
இப்போது அந்தமானில் தர்பூசனியும் கிடைக்கிறது…
(ஆமா… காக்கா..புறா எல்லாம் கிடைக்கிறப்போ… தர்பூசனி கிடைக்காதா??? எழுத வந்துட்டான்..)
மீண்டும் அதே ஆசையில் கருப்பு தோல் உள்ள பழத்தை 100 ரூபாய் கொடுத்து வாங்கி (விலை பாத்து பயந்து விட வேண்டாம்… இங்கே எல்லாம் இப்படித்தான்… வீட்டுக்காரியிடம் 50 ரூபாய் என்று சொல்லி) சாப்பிட்டோம்.
குழந்தைகளிடம் சம்மரில் தர்பூசனி சாப்பிடுகிறோம்… உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது என்று கேட்டேன்…(எனக்கு மச்சினி ஞாபகம் வந்திருக்கும் என்று உங்களுக்கு
தெரிந்திருக்கும்).
பத்தாவது படிக்கும் என் மகள் சொன்ன பதில்:
இந்த தர்பூசனி ஒரு Life மாதிரி.
அதில் இனிப்பானவை Good things.
கொட்டை Bad things.
நாம் அந்த bad things ஐ தூக்கிப் போட்டு Good things ஆன இனிப்பான வாழ்க்கையினை அனுபவிக்கனும்…
என்ன ஆச்சி? 10 வது படிக்கிற வாண்டு தத்துவம் பேசுதேன்னு பாத்தீங்களா?? அதுக்கும் காரணம் இருக்கு… அதுக்கு ரெண்டு காட்சி ஃபிளாஷ்பேக் போகனும்.
என் மகளோடு படிக்கும் தோஸ்த்களை நான் வானரப்படை என்று தான் சொல்வேன். அவ்வளவு சேட்டை.. அதில் எதிலும் நில்லாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு ஒரு கங்கா.. நான் கங்காவுக்கு மட்டும் வைத்த பெயர் புன்னகை அரசி.
அப்படியே கொஞ்சம் பள்ளி ஆண்டுவிழா கலையரங்கத்தையும் ரவுண்ட் அடிக்கலாம்.. (காசா பணமா??)
500 பேருக்கு மேல் வாத்திய கோஷ்டி வச்சி அந்நியன் ரேஞ்சுக்கு முடி வச்சி ரகுமான் பாடிய “தமிழா.. தமிழா.. நாளை நம் நாளே..” என்ற ரோஜாவின் பாட்டை நான்கைந்து பேர்களே வைத்து ஒரு பொடியன் அநாவசியமாய் ஒரு கையில்
கீபோர்ட் வாசித்து கலக்கிக் கொண்டிருக்கிறான்.
பக்கத்தில் உக்காந்த என் பையன் சொன்னான்.. டாடி அந்த பையா (ஹிந்தி பையா) யார் தெரியுமா? அக்காவோட படிக்கிற கங்காவின் தம்பி தான்.
அடுத்த நாள் மதியம்:
நான் வீட்டில் மதிய சாப்பாட்டுக்கு நுழைய… வீடு ஒரே நிசப்தம்.. அப்படியா… உண்மைதானான்னு விசாரிப்புகள்.
நாளை நம் நாளே…. என்று பாடிய அந்தப் பையனுக்கு நாளை இனி இல்லை. அடுத்த நாள் சென்னை அப்பல்லோ செல்ல தயாராய் இருந்த அந்த இளம் கலைஞனை எமன்
முந்திக் கொண்டான். (மூளையில் ஏதோ சிக்கல் என்று புரியாத பெயரில் ஒரு வியாதியாம்)
மரணங்கள் மனித மனங்களையும் செப்பனிட பயன்படும்.. அது பத்தாவது படிக்கும் என் மகளுக்கும் பொருந்தும்.