இது என் பையன் கேட்ட கேள்வி.
கல்லூரியில் படிக்கும் போது, ஹாஸ்டலுக்கு வந்ததும் கதவை திறந்தால் கீழே சிதறிக் கிடக்கும் கடிதங்கள் பாத்து எவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கேன்??? விதம் விதமான கோணங்களில் எழுதி வரும் இன்லேண்ட் லெட்டர்கள் அவை.
1986 களில் அந்தமானின் இறுதிக் கோடியான கிரேட் நிகோபார் தீவுகளில் கடிதங்கள் ஒன்று மட்டும் தான் தகவல் பரிமாற்று சாதனம். வாரம் ஒரு முறைதான் கப்பல் வரும். அதில் வரும் கடிதங்களுக்குத் தான் எத்தனை எதிர்பார்ப்பு..
அன்றே பதில் போட ஏதுவாய், நண்பர்களில் நமக்கு நாமே தபால் ஊழியர் ஆகி, தபால் பையினை இறக்கி, வண்டி பிடித்து, தபால் ஆஃபீஸ் சேர்த்து, பிரித்து, அவரவர் அலுவலகம் சேத்து… எல்லாமே..சந்தோஷமாய்… சந்தோஷமாய்… நமக்கு வந்த கடிதம் படிக்கும் சந்தோஷம் இருக்கே…..
மொபைல், இன்டர்னெட் என்று பழகி விட்ட என் பையனுக்கு எப்படி இதை புரிய வைப்பேன்??
சிட்டி ஆயி ஹை என்ற பங்கஜ் உதாஸின் பாடல் அர்த்தம் புரிஞ்சி கேட்டா…ஆளை அப்படியே உருக்கிடும்…
காதல் கடிதம் எழுத கைகுட்டை கூட உதவுமாம் நம்ம கவிஞர்களுக்கு…
கல்யாணத்துக்கு முன்னாடி காதல் கடிதம் எழுதியவர்கள் கொஞ்சம் அசை போடவும்.
வாலியின் அன்றைய வரிகள்:
படித் தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம்…
என்றும் நினைவில் நிற்கும் “அன்புள்ள மான் விழியே”
ஆக மொத்தம் ஒன்னு நிச்சயம் நமக்கு வயசாயிடுச்சி….
இதை எல்லாம் என் பையனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது??
நல்ல வேளையாக, ஸ்டேட் வங்கி முகவரியை உறுதி செய்ய ஒரு இன்லேண்ட் அனுப்பியது…
பையனிடம் இதுதான் இன்லேன்ட் என்று சொல்லி வைத்தேன். சொல்லும் போதே ஏனோ நெஞ்சு கனத்தது.
கடிதங்கள் பத்தி இந்த தலை முறைக்கு தெரியாது போய்விட்டதே என்று….