அன்பு நெஞ்சங்களே…
ஒரு விஷயம் பத்தி ரெண்டு பேர் ரெண்டு விதமா புரிஞ்சிகிறதை பலதடவை கேட்டிருப்பீங்க…
வடிவேல் காமெடி ஒன்றில் வரும் காட்சி:
ஒருவர்: என்ன எப்படி இருக்கீங்க?
வடிவேல்: ஏதோ வண்டி ஓடுது.
ஒருவர்: வண்டி ஓடுதா???…அப்பொ வாங்கின கடனைக் கொடு
வடிவேல்: வாழ்க்கையைச் சொன்னேனப்பா..
1987 களில் அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போயிடுவேன் என்பேன். கேப்பவர்கள்.. மூ…ன்று நாளான்னு … பெரு மூச்சு விடுவார்கள்..
அதே போல் இங்கு பேசும் ஹிந்தியினை பூனேயில் பேசிவிட்டேன். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
ஹிந்தியில் இருக்கும் இலக்கன விதிகளான…
மை வந்தால் ஹு வரவேண்டும்
தும் க்கு ஹோவும்
ஹம் என்று ஆரம்பித்தால் ஹைன் என்று முடிப்பது
இவைகள் எல்லாம் இங்கிருக்கும் உத்திர பிரதேச மக்கள் கூட இங்கே மறந்து விட்டார்கள்.
எனக்கோ பூனேயில் பெருத்த அவமானமாய் பட்டது.
இதை விட நம்பர்களை ஹிந்தியில் சொல்லுவதைப் போன்ற கொடுமையான விஷயம் ஒண்ணு கிடையவே கிடையாது. தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும்.
ஆனால் ஹிந்தியில் ஏக் சே லேகர் சௌ தக் மனப்பாடம் செய்தாக வேண்டும்.. மார்க் வாங்க அதை படிக்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள்… பாவம்!!
அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்…
15 சொல்ல பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்
47 சொல்லனுமா? சவுந்தாலீஸ் (சரி தானா??) சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.
மெயில் டைட்டில் வந்தாச்சி..முடிச்சிரலாமா..?? அப்படி முடிச்சா கம்பர் ஏமாந்து விடுவாரே.. அவரையும் வம்புக்கு இழுக்கலாம்.
இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பத்தி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்கிறார்.
பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.
பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது நல்லதாய் தான் படுது.
இனிமே பச்பன் கபி நஹி… பான்ச் பான்ச் தான்..
( T-3 ல் 36வது கேட்டுக் போனால் பிரீபெய்ட் டாக்சி வரும் பலர் சொன்னதை என்னால் விளங்கி கொள்ள முடியலை… அங்கே தீன் சே என்று யாரும் சொல்லலை)
இருந்தாலும் கம்பன் சொல் விளையாட்டுகள் தொடரும்.
T N Krishnamoorthi