அன்பு நெஞ்சங்களே…
இன்றைய தினம் ஏதோ சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு, தெம்பு தரும் அருமையான வாசகம் இந்த “நாளை நமதே”.
இந்த “நாளை நமதே” என்று தொடங்கும் எம் ஜி ஆர் படப் பாடல் மிகப் பிரபலம். அதில் வரும் “எந்த நாளும் நமதே” என்பது இன்னும் அளிக்கும் ஓர் உற்சாக டானிக்.
கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டால் ‘நாளை தருகிறேன்” என்பார்கள். அந்த “நாளை” என்பது என்றுமே வராது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இன்று போய் நாளை வா- ன்னு ஒரு ஜாலியான பாக்யராஜ் படம். நாளைய எதிர்காலம் ஹிந்தி படிச்சாத்தான் உண்டு என்று சொன்ன படம்.
( அடப்பாவி டி என் கே…. ஒரு பொண்ணை கவுக்கிரதுக்கு நாலு பேரு சேந்து போட்ற ஒரு ஐடியா தான் அந்த ஹிந்தி கத்துகிற சமாச்சாரமும்… இதிலெ கருத்து கண்ணாயிரம் மாதிரி கருத்து வேறெ இருக்கா???)
எப்படியாவது தில்லைக்குப் போகனும்னு ஓர் அடியார்க்கு பயங்கரமான ஆசை. ஆனால் அவ்வளவு வசதி இல்லை அவருக்கு. எப்பப்பா தில்லைக்கு போகப்போறே-ன்னு
யாராவது கேட்டா…அரியர்ஸ் வாங்கின நம்மாளுங்க அடுத்த செமஸ்டர் என்று சொல்வது போல்… நாளைக்குப் போகப் போறேன்- என்பாராம்.. கடைசியில் அவரது பேரே நாளைப் போவார் என்று ஆகி பிற்காலத்தில் திருநாளைப்போவார் என்றும் ஆகி விட்டது. (அவர் தில்லைக்குப் போனாரா… தெரியவில்லை.. ஆனால் கைலாசம் கண்டிப்பா போயிருப்பார்)
“இன்று போய் நாளை வா” என்றதும் ராவணனுக்கு ராமன் அளித்த ஒரு சான்ஸ் தான் ஞாபகம் வரும். (இது எல்லாருக்கும் தெரிந்தது என்பதால் அதை விட்டு விடுகிறேன்)
நான் என் பங்குக்கு ஒரு வைரமுத்துவின் புதுக்கவிதை சொல்றேனே..
நாளை சொல்லலாம்..நாளை சொல்லலாம்… என்று தவற விட்ட காதலை…பழைய காதலியை பாக்கச் செல்லும் நாயகன் கதை அது..இலையில் தங்கிய துளிகள் – இது தலைப்பு. இனி வைரமுத்துவின் வார்த்தைகளில் பாக்கலமே…
காலப்பெருவிளியில் சில
பத்தாண்டுகள் கடந்து,
மீண்டும்
கண்டு செல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்.
…
ஒட்டு மொத்த நாணத்தை
ஒன்று திரட்டி
என் மேல் வீசியடித்த
கடந்த காலம்
மனசெல்லாம் மார்கழி தான்
தெருவெல்லாம் கார்த்திகை தான்.
ஏழோ எட்டோ இருக்குமாம்
பழகிவந்த ஆண்டுகளும்
பேசிய வார்த்தைகளும்
இன்றேனும் பேசு பெண்ணே…
வாங்க…
ஆண்டுகள் தோன்றிய அதே குரல்
ஆனால்… நீ மட்டும் நீயில்லை
வீதியெல்லாம்
விசிறியடிக்கின்ற அவள் எங்கே.??
மழை ஊறிய ஓவியமாய்
சாயம் போன நீ எங்கே!!
காலம் தன் சவுக்கை
பூக்கள் மீது
சொடுக்காமல்
இருந்திருக்கலாம்.
….
தேனீர் தந்தாய்
பட்டுவிடக்கூடாதென்ற
உன் அச்சத்திலும்
தொட்டுவிடக்கூடாதென்ற
என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே
தள்ளாடியது.
….
கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது
கார் கதவு சாத்த வந்த
கணவன் சொன்னான்:
“நீங்களே அவளுக்கு
தாலி கட்டி இருக்கலாம்”.
உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ..
காதலுற்ற சேதியினை
காதலற்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்!!!
****
என்ன… உடனே ஐ லவ் யூ சொல்ல கிளம்பிட்டீங்களா??
அவங்கவங்க பொண்டாட்டிமார்களிடம் சொல்லிட்டு கெளம்புங்க… வரட்டுமா???
T N Krishnamoorthi