இந்தக் கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபத்திய முக்கியமான பிளேயர்கள் யார் தெரியுமா? சச்சின்? டோனி ??.. இல்லை.. இவங்க யாருமே இல்லை.
கைகளில் கலர்கலராயும், நிறைஞ்ச நெஞ்சோடும், குறைந்த ஆடைகளோடும், அனைவரையும் உற்சாகப் படுத்தும் Cheer Girls தான் அவர்கள்.
நான் அவர்களை மகிழ் விற்கும் மகளிர் என்கிறேன். (உற்சாக பாணக் கொண்டாட்டங்களில் Cheers க்கு தமிழில் “மகிழ்வோம்” என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.
அந்த மகளிர் ஆடும் ஆட்டத்திற்கு ஏதும் வரையறை இருக்கா..என்ன? ஒண்ணும் இருக்கிற மாதிரி தெரியல்லை.. கிடையாது.. சும்மா தத்தக்கா புத்தக்கா என்று ஆடுகிறார்கள். (அதுக்கும் டிரைனிங்க் தருவங்களோ?!!)
சந்தோஷம் வந்தா தலை கீழ் தெரியாம ஆட்றதுங்கிறது அது தானோ? ஆனா தண்ணி அடிச்ச ஆட்களும் நல்ல சங்கதிகளை உளறும் சிச்சுவேஷனும் இருக்கு.
ஓஹோஒஹோ கிக்கு ஏறுதே… என்று ரஜினி படத்தில் ஒரு பாட்டு வரும். அருமையான தத்துவப் பாடல் இது.. என்னமோ கிக்கு ஏத்துற பாட்டா இருக்கு… இது எப்படி தத்துவப் பாடலாகும்?
நடுவில் வரும் வார்த்தைகள் –
கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே- அட
தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே – இந்த
வாழ்க்கை வாழத்தான் –பிறக்கையில் கையில்
என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..??
பாத்தா ஏதொ சித்தர்கள் பாட்டு மாதிரி இருக்கு பாருங்க.. ஆன மகிழ்விற்குப் பிறகு பாடும் பாடல் அது..
சரி..எதுக்கு இவ்வளவு பீடிகை…??…அது ஒண்ணுமில்லை
அந்தக் காலத்திலும் இப்படி மகிழ்விற்கும் படியான ஒரு நிகழ்வு கெடைச்சது.. அதான்.. கொஞ்சம்….
என்னடா இழுவை… மிச்சத்தைச் சொல்றா…
வந்தேனே…… சொல்ல வந்தேனே…
ஒரு அரன்மனையில் நடந்த கூத்து இது.
அங்கே எல்லாரும் சந்தோஷக் கடலில் மூழ்கிட்டாங்களாம். இன்பம் அப்படியே இதயத்துக்கு போச்சாம்..அப்புறம் ஓவர்ஃப்ளோ ஆகி மயிர்க்கால்கள் வரை வந்திடுச்சாம்.
உடம்போடு அப்புடியே சொர்க்கத்துக்கு போயிட்டாகளாம்.
ராஜா முன்னாடி எப்படி இருக்கனுமோ அப்படி இல்லாமெ இருந்தங்களாம்.
அந்த சரக்கு எப்படி இருந்தது தெரியுமா? (பெப்ஸியோடு விஸ்கி கலந்த மாதிரி) இனிப்பா இருந்ததாம்.
அது சரி அது எந்த அரன்மனை தெரியுமா?
தசரதன் அரசாட்சி செய்யும் அரன்மனையில்.
அடப்பாவமே… இவ்வளவு மோசமாவா மிதந்து கிடந்தாய்ங்க??
ஹலோ… ஹலோ…கொஞ்சம் இருங்க….அவங்க எதுக்கு இப்படி மிதப்பில் இருந்தாக தெரியுமா??
அதான் சரக்கு அடிச்சதுன்னு தெரியுதே… அதான் கிடையாது…
வரும்…வராராது மாதிரி, இங்கே சரக்கு அடிக்கலை….ஆனா…அடிச்ச மாதிரி.
கம்பர் வார்த்தையில் சொன்னா…கள் சாப்பிட்ட மா….திரி..
ஆனா “கள்” என்ன தெரியுமா? தசரதன் வாயிலிருந்து வந்த சொல்.. அது என்ன அப்படி கிக் ஏத்துற சொல்…?
ராமன் அரசனாக முடி சூட இருக்கிறான் என்ற சொல் தான் இந்த மொத்த கூத்துக்கும் காரணமாம். (கம்பர் கூட வாக்கியம் என்று சொல்லாமெ சொல் என்று சொன்னதும் – உச்சம்)
என்னமோ தெரியலை இப்பொல்லாம் கம்பரை கையில ப(பு)டிச்சாலே கிக்காத்தான் இருக்கு.அதே கிக்கோட பாட்டையும் படிச்சிருங்க:
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்.
மீண்டும் நாளை மகிழ்வோமா??